Paris Olympics: `இனி அதிரடிதான் 10 வீரர்களுடன் சம்பவம்;ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியது எப்படி?

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி இன்று காலிறுதிப் போட்டியில் பிரிட்டனுக்கு எதிராக மோதியிருந்தது. இந்தப் போட்டி டை ஆக சூட் அவுட் வரை சென்று இந்திய அணி த்ரில்லாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.
India

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்றிருந்தது. 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸுக்குப் பிறகு பல காலம் கழித்து இந்திய அணி அந்தச் சாதனையை செய்திருந்தது. அதனால் இந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸிலும் இந்திய ஹாக்கி அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஒலிம்பிக்ஸுக்கு முன்பாக இந்திய அணியின் ஃபார்ம் அவ்வளவு சரியாக இல்லை. நிறைய போட்டிகளைத் தோற்றிருந்தார்கள். இதனால் இந்த அணி காலிறுதிப்போட்டியை தாண்டுமா எனும் கேள்வி இருந்தது.

ஆனால், இந்திய அணி இந்த கேள்விகளையெல்லாம் க்ரூப் சுற்றிலேயே அடித்து நொறுக்கிவிட்டது. க்ரூப் சுற்றில் கடைசியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதியிருந்தது. ஆஸ்திரேலியா வலுவான அணி. சமீபத்தில் ஆடிய போட்டிகளிலும் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோற்றிருக்கவே செய்தது.

Harmanpreet

ஒலிம்பிக்ஸிலும் 52 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கிறது. இப்படி ரெக்கார்டுகளோடு களமிறங்கினாலும் உத்வேகம் அளிக்கும் வகையில் ஆடி 3-2 என அந்தப் போட்டியை வென்று இந்தியா சாதனை படைத்தது.

இதனால் இந்திய அணி மீது மீண்டும் நம்பிக்கை வந்தது. இந்நிலையில் இன்று காலிறுதிப்போட்டியில் இந்திய அணி பிரிட்டனை எதிர்கொண்டிருந்தது. ஏற்கெனவே, டோக்கியோ ஒலிம்பிக்ஸிலும் காலிறுதியில் இந்திய அணி பிரிட்டனை எதிர்கொண்டுதான் வென்றிருந்தது. ஆனாலும் இந்தப் போட்டி கொஞ்சம் சவால் மிக்கதாகவே இருந்தது.

ஆட்டம் தொடங்கிய 18 வது நிமிடத்திலேயே அபாயகரமாக ஆடியதால் இந்திய வீரர் அமித்துக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது. இதனால் எஞ்சிய ஆட்டம் மொத்தத்தையும் அதாவது எஞ்சிய 42 நிமிடங்களுக்கும் இந்திய அணி 10 வீரர்களுடனேயே ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருப்பினும் சமாளித்து முதல் கோலை இந்திய அணியே அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை வழக்கம்போல கேப்டன் ஹர்மன்ப்ரீத் நன்றாக பயன்படுத்திக் கொண்டார். 22 வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் இந்தியாவுக்காக அந்த கோலை அடித்தார். அதே இரண்டாவது கால்பதியில் 27 வது நிமிடத்தில் பிரிட்டனும் ஒரு கோலை அடித்து ஆட்டத்துக்குள் வந்தது. 1-1 என போட்டி சமநிலைக்கு வந்தது. மூன்றாவது கால்பகுதியில் இரண்டு அணிகளுமே கோல் அடிக்க தீவிரமாக முயன்றனர். குறிப்பாக, பிரிட்டனுக்கு இந்த கால்பகுதியில் மட்டும் ஏறக்குறைய 3 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், எதையும் அவர்களால் கோலாக்க முடியவில்லை. இந்தியாவின் டிஃபன்ஸ் ரொம்பவே வலுவாக இருந்தது. வழக்கத்தைப் போலவே அனுபவ கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் மிகச்சிறப்பாக எதிரணியின் பல கோல் முயற்சிகளையும் முறியடித்தார்.

1-1 என்ற நிலையிலேயே பரபரப்பான நான்காவது கால்பகுதி தொடங்கியது. இந்தக் கால்பகுதி தொடங்கிய ஆரம்பத்திலேயே இரண்டு அணியும் க்ரீன் கார்டுகளைப் பெற்றனர். இதனால் ஒரு 2 நிமிடங்களுக்கு இந்திய அணி 9 வீரர்களுடன் மட்டுமே ஆடிக்கொண்டிருந்தது. கடைசி சில நிமிடங்களில் பிரிட்டன் மட்டுமே கோல் அடிக்க முயன்றது. அட்டாக்கிங்காக ஆடிக்கொண்டிருந்தது. ஆனால், இந்தியா தற்காப்பாக டிஃபன்ஸை வலுப்படுத்தி பிரிட்டனின் முயற்சிகளை முறியடிப்பதிலேயே கவனம் செலுத்தியது. அது வெற்றியும் அடைந்தது. இந்தியாவின் அசாத்தியமான தற்காப்பு ஆட்டத்தால்தான் போட்டி டை ஆகி பெனால்டி சூட் அவுட்டுக்கு சென்றது.

பெனால்டி சூட் அவுட்டில் இரண்டு அணிகளுக்கும் 5 வாய்ப்புகள் வழங்கப்படும். இரு அணியிலிருந்தும் ஒவ்வொரு வீரராக வந்து கொடுக்கப்பட்டிருக்கு 8 விநாடிகளில் கோல் அடிக்க முயல வேண்டும். இந்தியா சார்பில் கேப்டன் ஹர்மன்ப்ரீத், சுக்ஜீத், லலித், ராஜ்குமார் ஆகியோர் தங்களுக்கான வாய்ப்புகளில் லாவகமாக எதிரணியின் கோல் கீப்பருக்கு போக்குக் காட்டி கோலாக்கினர். ஆனால், பிரிட்டனால் முதல் 4 வாய்ப்புகளில் இரண்டை மட்டுமே கோலாக்க முடிந்தது. ஒரு முறை ஸ்ரீஜேஷ் சரியாக கோலை தடுக்க, இன்னொரு முறை பிரிட்டன் வீரர் வில்லியம்சன் பந்தை ரசிகர் கூட்டத்துக்குள் பறக்கவிட்டு மோசம்போனார்.

இந்திய அணி 4-2 என சூட் அவுட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. நீண்ட காலத்திற்கு பிறகு ஒலிம்பிக்ஸில் தொடர்ச்சியாக இந்திய அணி ஆடப்போகும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இது. அரையிறுதியில் எந்த அணியை எதிர்கொண்டாலும் பரவாயில்லை. நாங்கள் எங்களின் ஆட்டத்தில்தான் கவனம் செலுத்தப்போகிறோம். என நம்பிக்கையாக பேசியிருக்கிறார் இந்திய அணியின் எல்லைச்சாமி ஸ்ரீஜேஷ்.

1980 க்குப் பிறகு ஒலிம்பிக்ஸில் இந்திய அணியின் ஆதிக்கமே இல்லாமல் இருந்தது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில்தான் இந்திய ஹாக்கி அணி புத்துயிர் பெற்றது. இப்போது பாரிஸில் அதே உற்சாகத்தோடும் அதே நம்பிக்கையோடும் மீண்டும் ஆடி இந்திய ஹாக்கி அணி சாதித்து வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.