மகள்களை கண்ணுக்குள் வைத்து வளர்க்கும் அப்பாக்களே... இது சரியா? | அவளின் சிறகு

சில தினங்களுக்கு முன்பான மெட்ரோ பயணம் அது. கூட்டம் நிரம்பி வழிய, பெண்கள் பெட்டியில் இருந்து மெள்ள நகர்ந்து பொது பெட்டிக்குச் சென்றேன். உயர் நீதிமன்றம் ரயில் நிறுத்தத்தில் ஓர் அப்பாவும் - மகளும் ரயிலில் ஏறினார்கள். அந்த அப்பா தன் மகளை பாதுகாப்பான இடத்தில் நிற்க வைப்பதில் கவனமாக இருந்தார். அந்த ஒன்பது வயது சிறுமி, தன் தலைக்கு மேலே, இடது புறமும், வலது புறமும் தலையை ஆட்டிக்கொண்டிருந்த கைப்பிடியை பிடிக்க எம்பிக்கொண்டிருந்தாள். கால்களை மெள்ள தூக்கி எட்டாத கைப்பிடிகளை அவள் எட்டிப்பிடித்தபோது, அவளின் அப்பாவின் முகத்தில் ஒரு பெருமிதத்தைப் பார்க்கமுடிந்தது. கடந்த தலைமுறை அப்பாக்களைவிட, இந்தத் தலைமுறை அப்பாக்கள் பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் கூடுதல் அக்கறை காட்டத்தான் செய்கிறார்கள். எனக்கு பொம்பளப்புள்ள பொறந்திருச்சு என்று சடவு காட்டாமல் , பொம்பளப்புள்ள பொறந்திருக்கு என சந்தோஷப்படும் அப்பாக்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது.

மாதிரிப்படம்

பெண் பிள்ளை தேவையா என்று யோசித்த காலம் முடிந்து, பெண் பிள்ளைகளை தேவதைகள் என கொண்டாடும் காலத்தில்தான் இருக்கிறோம். காலம் மாறியிருக்கிறது. அப்பாவின் அன்பு காற்றைப் போன்றது. அது ஊதிய பலூனாக நம்மை மாற்றுமா... காடு, மேடு என உலகம் முழுவதும் பரவச்செய்யுமா... அதை அப்பாக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அப்பாவின் அன்பு என்னவெல்லாம் செய்யும் என்பதற்கான யோசனையுடன்தான் இந்தக் கட்டுரை தொடங்கியது. 

முருகன் என் பள்ளித்தோழி சீதாவின் அப்பா. தினமும் குடித்துவிட்டு குடும்பத்தை அர்த்த ராத்திரியிலும் அவஸ்தை செய்யும் மனிதர். சீதாவின் அம்மா யாரிடம் பேசினாலும் அவளின் அப்பாவிற்கு பிடிக்காது. தன் கணவன் தெருவில் சதம்பும் சத்தம் கேட்டவுடனே, கனகா அக்கா, பிள்ளை குட்டிகளுடன் அடுக்களைக்குள் ஓடிவிடுவாள். முருகனை பார்க்கும்போதெல்லாம், எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாத என் அப்பாவை நினைத்து, நான் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. கனகா அக்காவிற்கு இருக்கும் ஒரே ஆறுதல், வாரம் ஒரு முறை அவளின் அம்மாவிடம் தொலைபேசியில் பேசுவது மட்டுமே. அதுவும் தன் கணவனுக்குத் தெரியாமல்...

அவளின் சிறகு

இப்போது இருப்பதுபோல் போனில் இருக்கும் லாக்கை திறந்தால் நாம் பேச நினைப்பவர்களிடம் பேச முடியாத காலகட்டம் அது. வெளியூரில் இருக்கும் ஒருவரிடம் பேச வேண்டுமென்றால் எஸ்.டி.டி பூத்தில் கண்ணாடி கூண்டுக்குள் பேசிக்கொண்டிருப்பவர் எப்போது வெளியே வருவார், நீண்ட வரிசை குறைந்து நாம் எப்போது உள்ளே செல்வோம் என நாம் காத்துக்கிடக்க வேண்டும். ஒருமுறை போன் செய்து நாம் பேச விரும்புபவரை அவர் ஊரில் இருக்கும் எஸ்.டி.டி பூத்திற்கு வரவழைத்து மீண்டும் போன் பேச வேண்டும். பிடித்தவரின் குரலைக் கேட்க குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது காத்திருக்க வேண்டியிருக்கும். கடையில் ஆண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, கனகா அக்கா எங்கள் வீட்டு தொலைபேசியில் இருந்து அவளின் அம்மாவிடம் வாரம் ஒருமுறை பேசுவது வழக்கம். இது தெரிந்தால் கனகா அக்காவிற்கு நிச்சயம் தன் கணவரிடம் அடி உறுதி. இவன் செத்தா தான் அந்தக் குடும்பத்துக்கு ஒரு விடிவுகாலம் வரும் என சொல்லாத நபர்கள் எங்கள் ஊரில் இல்லை. எல்லார் சாபமும் பலித்தது போல் அந்தச் சம்பவமும் நடந்தது.

மது அருந்தி ரோட்டில் தள்ளாடிய முருகனை லாரி இடித்து சம்பவ இடத்திலேயே இறந்தும் போனார். சீதாவின் குடும்பம் இரண்டு நாள் சாவு செலவுக்காகப் போராடினார்கள். அநேகமாக அதுதான் அவர்களின் கடைசி போராட்டமாக இருந்திருக்கும். அதன்பின் அந்தக் குடும்பம் ஒரு பெண்ணின் தலைமையில், பெண் வருமானத்தில் நடக்கும் குடும்பமாக தன்னை தகவமைத்துக் கொண்டது. அப்பாவின் மரணத்திற்குப் பின் சீதா தன் தம்பிகளை, குடும்பத்தை வழிநடத்தும் இடத்திற்கு வந்தாள். தம்பிகளை யாராவது திட்டினால்கூட, சண்டைக்குச் செல்வாள், தம்பிகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது தொடங்கி, சாப்பாடு ஊட்டுவது வரை எல்லா பொறுப்பையும் விரும்பி ஏற்றுக்கொண்டாள். சீதா மாதிரி குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக்கணும் என என் அப்பாவும் சொன்னதுண்டு. சீதாவின் பயணம் இப்படியிருக்க, அப்பாவுடன் பள்ளிக்குச் செல்வது, கல்லூரிக்குச் செல்வது, அப்பாவை சார்ந்து இருப்பது என என் நாள்களும் கழிந்தன. அப்பா இல்லாமல் ஒரு ஜெராக்ஸ் கடைக்குக்கூட தனியாகச் சென்றது இல்லை நான். அப்பாவின் கண் வழியாக உலகத்தைப் பார்த்த எனக்கு, முதல் முதலில் தனியாக சென்னையைப் பார்த்தபோது நரகமாக, வேற்று கிரகமாகத் தெரிந்தது. ஆனால் சீதாவோ, சென்னையை ரசித்துக் கொண்டாடினாள். அப்போதுதான் புரிந்தது எனக்கு, பாதையில் எனக்காக அப்பாவின் கால்கள் நடந்திருக்கின்றன, அப்பாவின் முதுகில் ஏறி வந்திருக்கிறேன் என. விவரம் தெரிந்து திரும்பி பார்க்கும்போது முன்னால் நீண்டு கிடந்த பாதை எனக்கு மிரட்சியாக இருந்தது. சின்னச் சின்ன விஷயத்திலும் யாருடைய உதவிகளையோ எதிர்பார்த்து, ஏமாந்து, அவமானப்பட்டு, அழுது, புலம்பி, நிமிர்ந்து எழுந்தேன். சூழலை உடைத்து கடந்து, காலூன்றுவதற்குள் பாதை இன்னும் இன்னும் நீண்டது. அப்பாவின் முதுகில் பயணித்த என் கதை இதுவென்றால், என் தோழி ஒருத்தியின் நிலை இன்னும் சிக்கல்...

செல்லப்பிராணியைப் போல மகளை அடைத்து வைத்த அப்பா

அப்பா தான் உலகம் என்று வாழ்ந்தவள், அப்பாவா; காதல் திருமணமா என்று வரும்போது அப்பா மனது வருத்தப்படக்கூடாது என்று அப்பா பார்த்திருந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டாள். அப்பாவின் பெயரை தன் மகனுக்கு வைத்து அழகு பார்த்தாள். என் அப்பா இத பண்ணுவாரு, அத பண்ணுவாரு, நான் நினைச்சதை என் கண்ணை பார்த்தே அப்பா கண்டு பிடிச்சிருவாரு என  மூச்சுக்கு முந்நூறு முறை அப்பாவின் புகழ்பாடுவாள். அவள் அப்பா இறந்த அன்று வெறிக்க வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அதன்பின்பும் அவள் இயல்பாக இருந்தபாடில்லை. பார்ப்பவர்களிடம் எல்லாம் அப்பாவின் சாயலைத் தேடத்தொடங்கினாள். யாரோ ஒரு நபரை தன் அப்பா போல் இருக்கிறார் என்று சொல்லி, அப்பா என்று கூப்பிடவும் ஆரம்பித்தாள். ஆனால், ஏதோ சூழலில் அவர் அப்பாவாக அல்லாமல் ஆணாக நடந்து கொண்டிருக்கிறார். நான் அப்பான்னு கூப்பிட்டும் அவரு ஏன் அப்படி நடந்துகிட்டாரு என பலமுறை அழுது தீர்த்தாள். அப்பாவாக அப்பாவால் மட்டுமே இருக்க முடியும் என்பதே நிதர்சனம். நிழலாக வந்தவர் திடீரென்று காணாமல் போகும்போது, வெளிச்சத்தை தேடும் விட்டில் பூச்சியாக மகள்களின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. அந்த வெறுமையில்தான், அப்பா நம்மை இவ்வளவு தூரம் கண்ணுக்குள்ளும், கைக்குள்ளும் வைத்து வளர்த்திருக்க வேண்டாமோ என மகள்கள் நினைக்கும் நாள்கள் தொடங்கும்.

அப்பாக்களே உங்கள் மகள்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய முதல் பாடம், நீங்கள் இல்லாமல் உலகத்தை எதிர்கொள்வதை மட்டுமே. கால் வலிக்கும் உட்காரு, தப்பா எழுதிருவ. கூடசேர்ந்து நான் எழுதுறேன், இந்த நேரத்துல தனியா எப்படி போவ. அப்பாவும் வர்றேன் என்பதையெல்லாம் உடைத்து, உனக்காக நீ நில் உனக்கானதை நீ செய்யப்பழகு, என சின்னச்சின்ன விஷயத்திலும் ஒதுங்கி நில்லுங்கள். மகள்களை முதுகில் ஏற்றிச் செல்லாமல், கைப்பிடித்து நடந்து செல்லாமல், அவர்களை முன்னால் விட்டு பின்னால் நடந்து செல்லுங்கள்.

பெண்

தோழனாக தோள் கொடுத்து உடன் இருங்கள். நீங்கள் நிழலாக வரவேண்டாம். வெளிச்சமாக நில்லுங்கள். உங்கள் மகள்கள் எப்போதும் பட்டாம் பூச்சியாக வலம் வர, அவள் பூந்தோட்டத்தில் பிறக்கவில்லை. போராட்ட உலகில் பிறந்திருக்கிறாள். பீரங்கி குண்டுகளாய் வெடிக்கத் தயாராக வேண்டியவர்களை, பாப்பா என்று அன்பு உலகில் அகிம்சைவாதிகளாக கட்டிப் போடாதீர்கள். அது அவர்களை அடிமையாக்கிவிடும். என் மகளை நான் பத்திரமாக வளர்க்க வேண்டும் என்ற உங்கள் அன்பு, அக்கறை சரிதான். ஆனால், எல்லா சூழலிலும் உங்களின் மகளுடன் நீங்கள் இருக்கமுடியாது. அவள் தனியாக உலகை எதிர்கொள்ளவேண்டும் என்பதே நிதர்சனம். அதனால் அதற்கு அவளை தயார் செய்யுங்கள். அவர்கள் அவர்களின் கண்ணில் உலகை பார்க்கட்டும், அவர்களில் கால்களால் உலகை அளக்கட்டும்...உங்கள் தேவதைகளின் சிறகு உங்கள் முதுகில் இருந்து பறந்து செல்லட்டும்....விடை கொடுங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.