திரைப்படங்கள் உணர்வுகளைக் கடத்தும் கருவி! - புதுச்சேரி திரைப்பட விழாவில் இயக்குநர் பிரசன்ன விதானகே
புதுச்சேரி அலையன்ஸ் ஃபிரான்சிஸ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி திரைப்பட இயக்கம் போன்றவை ஒன்றிணைந்து, உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களை மக்களிடம் சேர்க்கும் விதமாக, ஆண்டுதோறும் புதுச்சேரியில் உலக திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் அலையன்ஸ் ஃபிரான்சிஸ் அரங்கில் நேற்று மாலை துவங்கிய `உலக திரைப்பட விழா 2024’ நாளை மாலை வரை நடைபெற்றது.
இந்தியா, ஃபிரான்ஸ், இலங்கை, துருக்கி, ஈரான், அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தப் படங்களை இலவசமாகப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே தொடங்கி வைத்த இந்த விழாவில், அலையன்ஸ் ஃபிரான்சிஸ் தலைவர் டாக்டர் நல்லாம் சதீஷ், புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், திரைப்பட இயக்குநரும் எடிட்டருமான லெனின், எழுத்தாளர்கள் ச. தமிழ்ச்செல்வன், மதுக்கூர் ராமலிங்கம் போன்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய டாக்டர் நல்லாம் சதீஷ், ``இலங்கை போன்ற அண்டை நாட்டுப் படங்கள் இங்குத் திரையிடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி மற்றும் ஃபிரான்ஸ் நாட்டின் கலாச்சார ஒருங்கிணைப்புக்கு, அலையின்ஸ் ஃபிரான்சிஸ் உதவுகிறது” என்றார். அதையடுத்துப் பேசிய இலங்கை திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதனகே, ``இந்த தருணம் திரைப்படத்தை உணர்ச்சிகளைக் கடத்தும் கருவியாகப் பார்க்கும் இயக்குநர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம். திரைப்படம் என்பது நாம் ரசிக்க மட்டுமல்ல. அது நமக்கு நம்மையே வெளிப்படுத்திக் காட்டக்கூடியது. இந்த திரைப்படத் திருவிழா உங்களை ரசிக்க மட்டும் வைக்காமல், பல பாடங்களை உங்களுக்குப் புகட்டும்” என்றார்.
.jpeg)
தொடர்ந்து பேசிய அமைச்சர் லட்சுமி நாராயணன், ``நம்மை மகிழ்விக்கும், வியாபார நோக்கத்துக்கான திரைப்படங்களைத்தான் நாம் தினந்தோறும் பார்க்கின்றோம். அவை நம்முடைய மூளையைச் சலவைச் செய்திருக்கும். இருட்டில் இருப்பவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கின்ற திரைப்படங்கள் உலகில் பல இருக்கின்றன. உலக நாடுகளுக்குள் இருக்கும் எல்லைகளின் தடையைத் தாண்டி, அனைத்தையும் ரசிக்க வேண்டும் என்கின்ற எண்ணம்தான் உலகத் திரைப்படத் திருவிழாவின் நோக்கம். இன்னும் சொல்லப்போனால் உலக நாடுகளில் இன்றைக்கு இருக்கும் கலாச்சாரத்தை, ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய பொறுப்பை விழா ஏற்பாட்டாளர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.
இதுபோன்றவைகள்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்க முடியும். எந்தவொரு குறுகிய எண்ணமும் இல்லாமல், நாம் வளர எந்தத் தடைகள் இருந்தாலும், அவற்றை மாற்றுவதற்கான, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, பார்த்து ரசிக்கக்கூடிய பக்குவம் இன்று தேவைப்படுகிறது. சிறந்த திரைப்படங்கள் நமக்குள் இருக்கும் சிறு வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ளும், மாற்றிக்கொள்ளும் எண்ணத்தை நமக்குத் தரும். .

பல படங்கள் நம் மனதை உருக்கும்படியும், மனதை மாற்றும் வகையிலும் அமைந்துள்ளன. எல்லாவிதத்திலும் நம்மை நாமே மாற்றிக்கொள்ளும் ஒரு சக்தி திரைப்படங்களில் இருக்கிறது. அரவிந்தார், மகாகவி, பாவேந்தர் போன்ற சிந்தனையாளர்கள் தங்கிய இந்த ஊரில், இந்த திரைப்பட திருவிழா மூலம் பல நல்ல கருத்துக்கள் பகிரப்பட வேண்டும்” என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


