Paris Olympics: அவர் தோற்றபோதெல்லாம் இக்குற்றச்சாட்டு வரவில்லையே? - இமானேவுக்கு டூட்டி சந்த் ஆதரவு

2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியின் ரவுண்ட் ஆப் 16 சுற்றுப் போட்டியானது ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற்றது.

அதில் இத்தாலியைச் சேர்ந்த ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவைச் சேர்ந்த இமானே கெலிஃப் இருவருக்குமிடையே போட்டி நடைபெற்றது. இப்போட்டி ஆரம்பித்த 46வது நொடியிலேயே இமானே கெலிஃப், ஏஞ்சலா கரினியைத் தாக்கினார். இதனால் ஏஞ்சலா கரினியின் மூக்கில் இரத்தம் வழிந்தது. இமானே கெலிப்பைத் தடுமாற்றத்துடன் எதிர்கொண்ட ஏஞ்சலா கரினி திடீரென பாதி ஆட்டத்தில் போட்டியை நிறுத்தி, தனது எதிர் ஆட்டக்காரரான இமானே கெலிஃப் பெண்ணல்ல ஆண் என்றும், ஆண்தன்மை கொண்ட வலிமைமிக்க அவருடன் போட்டிப் போட முடியாது என்றும் நடுவரிடம் புகார் தெரிவித்துவிட்டு ஆட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

ஏஞ்சலா கரினி, இமானே கெலிஃப்

இதனால், இமானே கெலிஃப் வெற்றி பெற்றதாக அறிவித்து அவரின் கைகளை உயர்த்திப் பிடித்தார் நடுவர். இதைக் கண்ட ஏஞ்சலா கரினி களத்திலேயே விழுந்து அழத்தொடங்கிவிட்டார். இந்தச் சம்பவம் ஒலிம்பிக்ஸில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆண்தன்மை அதிகம் கொண்டவர்கள் பெண்களுக்கு இணையாகப் போட்டிகளில் களமிறங்கக் கூடாது என்றும் இதற்கு ஒலிம்பிக்ஸ் அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இமானே கெலிஃப்புக்கு எதிராகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியத் தடகள வீராங்கனையான டூட்டி சந்த் இமானே கெலிஃப்பிற்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். இதுதொடர்பாகப் பேசிய இமானே கெலிஃப், "பல்வேறு மருத்துவ சோதனைகளுக்குப் பிறகே ஒலிம்பிக்ஸ் தொடரில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் ஒரு ஆண் என தற்போது குற்றம் சாட்டுகிறார்கள்.

இமானே கெலிஃப் டூட்டி சந்த்

அது உண்மை என்றால் அவரால் ஒலிம்பிக்கில் விளையாடி இருக்கவே முடியாது. 9 போட்டிகளில் இமானே தோற்றிருக்கிறார். அப்போதெல்லாம் இந்த குற்றச்சாட்டு வரவில்லை. எதிர்த்து விளையாடிய இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா தோல்வியடைந்த பிறகுதான் இமானே குறித்த இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இது ஏற்புடையதல்ல" என்று டூட்டி சந்த் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.