Wayanad: ராணுவ அதிகாரி சீதா ஷெல்கே - மீட்பு பணியை துரிதப்படுத்திய களப் போராளியின் துணிச்சல் பின்னணி!
கொட்டும் மழையில், அந்தரத்தில் தொங்கும் இரும்புப் பாலத்தின் மேல் ராணுவ உடையில் கம்பீரமாக நிற்கும் ராணுவ அதிகாரி சீதா ஷெல்கேவின் புகைப்படம், இணையத்தில் தீயாய்ப் பரவிக் கொண்டிருக்கிறது. ’யார் இந்தப் பெண்..?’ என்று அனைவரும் கவனம் குவிக்கின்றனர். வயநாடு பேரிடர் மீட்புக் களத்தில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட தருணத்தை, பேரிடர் மீட்பு பணியின் புதிய மைல்கல், முக்கிய திருப்பு முனை என்றுதான் சொல்ல வேண்டும்.
முண்டகை ஆற்றில் பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளத்திற்கு எந்தப் பாலமும் தப்பவில்லை. சீறிப்பாயும் முண்டகை ஆற்றைக் கடந்து மீடபுப் பணியைச் செய்ய முடியாமல் மொத்த மீட்புக் குழுவும் தத்தளித்தது. உதவிக்காக மறுகரைக்கு அப்பால் நூற்றுக்கணக்கான மக்கள் ஏங்கிக் கிடந்தார்கள். ஜிப்லைனும் ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை.
தற்காலிக பாலம் ஒன்றை எழுப்பினால் மட்டுமே மீட்புப் பணிகள் நடைபெறும் என்ற இக்கட்டான சூழல். சீறிப்பாயும் முண்டகை ஆற்றின் குறுக்கே பாலம் எழுப்பும் சவாலான பொறுப்பை ஏற்றுக் கொண்டது இந்திய ராணுவம். உலகப்போர் சமயங்களில் பிரிட்டிஷ் ராணுவம் கையாண்ட பெய்லி பிரிட்ஜ் யுக்தியை இங்கு செயல்படுத்தும் முடிவை அவர்கள் எடுத்தனர். ரெடிமேட் இரும்பு தூண்கள் மற்றும் மரக்கட்டைகளைக் கொண்டு கட்டப்படும் இந்த தற்காலிக பாலத்திற்கான தளவாடங்களை டெல்லி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து விமானங்கள் மூலமாகவும், ராணுவ லாரிகள் மூலமும் சீரல் மலைப் பகுதிக்கு உடனடியாக வரவழைத்தனர். ’மெட்ராஸ் சப்பர்ஸ்’ ராணுவ பொறியியல் பிரிவு மற்றும் ராணுவ வீரர்கள் என 200 பேர் கொட்டும் மழையிலும் பாலம் அமைக்கும் பணியைத் தொடங்கினர்.

கடுமையான இன்னல்களுக்கு மத்தியில் இரவு பகலாக ஓய்வில்லாமல் உழைத்து இந்த பாலத்தை எழுப்பி சாதித்திருக்கிறார்கள் இந்திய ராணுவத்தினர். கிட்டத்தட்ட 90 டன் எடையைத் தாங்கக்கூடிய இந்த பிரமாண்ட பாலத்தை 190 அடி நீளத்தில் 24 டன் எடையில் எழுப்பி கொடுத்திருக்கிறார்கள். இந்த பெய்லி பாலம் மூலம் சூரல் மலை - முண்டகை இடையே மீண்டும் இணைப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஜே.சி.பி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் மீட்பில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. போர்க்கால அடிப்படையிலான பணி என்ற சொல்லிற்கு சவாலான இந்த பாலத்தை அமைத்து உயிரூட்டியிருக்கிறது இந்திய ராணுவம் என மக்கள் பாராட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இந்தப் பாலம் அமைய முக்கிய பங்காற்றிய ராணுவ அதிகாரியான சீதா ஷெல்கேவின் அர்ப்பணிப்பை, ஆளுமையை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வருகிறது.
யார் இந்த சீதா ஷெல்கே ?!
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சீதா ஷெல்கே கடந்த 2012 -ம் ஆண்டு ராணுவ சேவையில் இணைந்தவர். OTA எனப்படும் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சியை நிறைவு செய்தார். MEG எனப்படும் பெங்களூருவில் உள்ள ராணுவப் பிரிவான மெட்ராஸ் பொறியியல் குழுவில் உள்ள அதிகாரிகளில் ஒரே பெண்ணாக தற்போது பணியாற்றி வருகிறார்.

போர்க்களங்களில் ராணுவ படைகள் முன்னேற பாதையை சீரமைப்பது, கண்ணிவெடிகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்வது மற்றும் இக்கட்டான இடங்களில் தற்காலிகப் பாலங்கள் அமைப்பதில் நிபுணத்துவம் கொண்டவராக திகழ்கிறார் சீதா ஷெல்கே.
செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ அதிகாரி சீதா ஷெல்கே, "நிலச்சரிவால் உருக்குலைந்த இந்தப் பகுதிகளில் இருந்து மக்களை உடனடியாக மீட்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அதற்கு இந்தப் பாலம் தேவைப்பட்டது. எனது குழு சிறப்பாகச் செயல்பட்டது.

உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும் முக்கியக் காரணமாக அமைந்தது. ராணுவத்தில் ஆண், பெண் என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது. நான் ஒரு ராணுவ வீரர் அவ்வளவுதான். இந்திய ராணுவத்தில் அங்கம் வகிப்பதில் பெருமை கொள்கிறேன் " என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


