Paris Olympics 2024: என்னை மன்னியுங்கள்! - இமானே மீதான தன் குற்றச்சாட்டிற்கு ஏஞ்சலா கரினி வருத்தம்
இத்தாலியக் குத்துச் சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி, இமானே கெலிஃப் மீது அவர் வைத்த குற்றச்சாட்டிற்கு மன்னிப்பு கோரியிருக்கிறார்.
2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியின் ரவுண்ட் ஆப் 16 சுற்றுப் போட்டியானது ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற்றது. அதில் இத்தாலியைச் சேர்ந்த ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவைச் சேர்ந்த இமானே கெலிஃப் இருவருக்குமிடையே போட்டி நடைபெற்றது.
திடீரென பாதி ஆட்டத்தில் போட்டியை நிறுத்திய ஏஞ்சலா கரினி, தனது எதிர் ஆட்டக்காரரான இமானே கெலிஃப் பெண்ணல்ல ஆண் என்றும், ஆண்தன்மை கொண்ட வலிமைமிக்க அவருடன் போட்டிப் போட முடியாது என்றும் நடுவரிடம் புகார் தெரிவித்துவிட்டு, ஆட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார். இதனால், இமானே கெலிஃப் வெற்றி பெற்றதாக அறிவித்து அவரின் கைகளை உயர்த்திப் பிடித்தார் நடுவர். இதைக் கண்ட ஏஞ்சலா கரினி களத்திலேயே விழுந்து அழத்தொடங்கிவிட்டார். இந்தச் சம்பவம் ஒலிம்பிக்ஸில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண்தன்மை அதிகம் கொண்டவர்கள் பெண்களுக்கு இணையாகப் போட்டிகளில் களமிறங்கக் கூடாது என்றும் இதற்கு ஒலிம்பிக்ஸ் அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இமானே கெலிஃப்புக்கு எதிராகக் கருத்துகள் வந்தன. "அது உண்மை என்றால் அவரால் ஒலிம்பிக்கில் விளையாடி இருக்கவே முடியாது. 9 போட்டிகளில் இமானே தோற்றிருக்கிறார். அப்போதெல்லாம் இந்த குற்றச்சாட்டு வரவில்லை. எதிர்த்து விளையாடிய இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா தோல்வியடைந்த பிறகுதான் இமானே குறித்த இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்" என்று இந்தியத் தடகள வீராங்கனையான டூட்டி சந்த் போன்ற சிலர் இமானேவுக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கும் நிலையில் தற்போது இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி மன்னிப்பு கோரியிருக்கிறார், "இந்தச் சர்ச்சை அனைத்தும் என்னை வருத்தமடையச் செய்கிறது. எனக்கு எதிராக விளையாடிய இமானே கெலிஃப்பை நினைத்து நான் வருந்துகிறேன். நான் இமானே கெலிஃப்பிடமும் மற்ற அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கெலிஃப்பைச் சந்திக்க இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், அவரை நான் தழுவிக்கொள்வேன். இது வாழ்நாளில் ஒரு முக்கிய போட்டியாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த தருணத்தில் என் உயிரைக் காப்பாற்ற வேண்டியிருந்தது" என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


