பண்டர்பூர் பாதயாத்திரை: `நான் வருவேன்....! 250 கி.மீ நடந்து எஜமான் வீட்டிற்கு வந்து சேர்ந்த நாய்!
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் யமகர்னி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கமலேஷ். இவர் ஒவ்வோர் ஆண்டும் சக பக்தர்களுடன் பண்டர்பூர் பாண்டுரங்கன் கோயிலுக்குப் பாதயாத்திரையாகச் செல்வது வழக்கம். அவர் வீட்டில் மகாராஜா என்ற ஒரு நாயை வளர்த்து வந்தார்.
ஒவ்வோர் ஆண்டும் கமலேஷ் பண்டர்பூருக்குப் பாதயாத்திரை செல்லும் போது நாயை வீட்டில் விட்டுவிட்டுச் செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கமலேஷ் வளர்ப்பு நாய் மகாராஜாவையும் பாதையாத்திரையாகப் பண்டர்பூருக்கு அழைத்துச்சென்றார். பக்தர்கள் பாடும் பஜனையை மகாராஜா மிகவும் விரும்பிக்கேட்டது. பண்டர்பூரில் ஆஷாதி ஏகாதசிக்கு ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடினர். இந்தக் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக மகாராஜா தனது எஜமானாரைத் தவறவிட்டது.
கமலேஷ் மகாராஜாவைப் பல இடங்களில் தேடிப்பார்த்தார். மகாராஜா வேறு ஒரு கூட்டத்தோடு சென்றுவிட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு கூட்டமாகச் சென்று கமலேஷ் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்துத் தனியாக சொந்த ஊருக்கு வந்துவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அடுத்த சில தினங்கள் கழித்து மகாராஜா, கமலேஷ் வீட்டு வாசல் முன்பு நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்த கமலேஷ் அதற்கு எதாவது ஆகியிருக்கிறதா என்று பார்த்தார். அதிர்ஷ்டவசமாக எதுவும் ஆகவில்லை.
அந்த நாய் பண்டர்பூரில் இருந்து 250 கி.மீ தூரத்திற்கு நடந்தே தனது எஜமானார் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தது. அந்த நாயிக்கு கமலேஷ் மாலை அணிவித்துத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கிராம மக்களும் மகாராஜாவின் வருகையை உற்சாகமாக விருந்து வைத்துக் கொண்டாடினர். இது குறித்து கமலேஷ் கூறுகையில்,பாண்டுரங்கன்தான் மகாராஜா மீண்டும் எங்களது வீட்டிற்கு வர வழிகாட்டி இருக்கவேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


