``ரூ. 45 லட்சத்துக்கு BMW கார் வாங்கியே ஆகணும் துடியாய் துடிக்கும் இளைஞர்கள்... காரணம் என்ன?!

அந்தக் காலத்தில் எப்படியாவது ஒரு கார் வாங்கிடனும் என்பதுதுதான் கனவாக இருந்தது. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் எப்படியாவது பி.எம்.டபிள்யூ கார் வாங்கிடணும், பென்ஸ் கார் வாங்கிடணும் என சொகுசு கார்களின் பக்கம் தங்களின் கவனத்தை திசை திருப்பியிருக்கிறார்கள். இதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சொகுசு கார்களின் விற்பனை 50% அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாநில போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆணையரகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்டன் மார்டின், ஆடி, லம்போகினி, பிஎம்டபிள்யூ, ஜாக்குவார் லேண்ட்ரோவர், ஃபெராரி, மெர்சிடிஸ் பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் போன்ற சொகுசு கார்களின் விற்பனை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

BMW X6

தமிழ்நாட்டில் 2022-2023 ஆம் நிதியாண்டில் 5,797 சொகுசு கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் நடப்பு 2024-ம் ஆண்டில் இதுவரை சொகுசு கார்கள் விற்பனை 46.2% அதிகரித்து 8,475 கார்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக சென்னை, கோவை , மதுரை, நெல்லை, திருச்சி ஆகிய மண்டலங்களில் சொகுசு கார்களின் விற்பனை அதிகமாக உள்ளது.

2022-2023 நிதியாண்டில் சென்னையில் 1,444 கார்களும், கோவையில் 424 கார்களும் , மதுரையில் 76 கார்களும், நெல்லையில் 63 கார்களும், திருச்சியில் 58 கார்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன. 2023-2024 நிதியாண்டில் சென்னையில் 1,664 கார்களும், கோவையில் 510 கார்களும் , மதுரையில் 110 கார்களும், நெல்லையில் 95 கார்களும், திருச்சியில் 67 கார்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

பல பிராண்டுகளில் இருந்து சொகுசு கார்கள் வெளியாகும் நிலையில், மக்களின் கனவு காராக பிஎம்டபிள்யூ கார் இருக்கிறது. தமிழ்நாட்டில் 1,071 கார்களை விற்று பிஎம்டபிள்யூ முதலிடத்திலும், 1,016 கார்களை விற்று மெர்சிடிஸ் பென்ஸ் இரண்டாமிடத்திலும், 199 கார்களை விற்று ஜாக்குவார் லேண்ட்ரோவர் மூன்றாமிடத்திலும் இருக்கிறது. இதைத் தவிர போர்சே 76 கார்களையும், ஆடி 66 கார்களையும், பெண்ட்லி 7 கார்களையும் , லம்போகினி 6 கார்களையும், ரோல்ஸ் ராய்ஸ் 4 கார்களையும் , மஸ்ராட்டி 3 கார்களையும், அஸ்டின் மார்டின் மற்றும் ஃபெராரி நிறுவனம் தலா 1 கார்களையும் விற்றுள்ளன.

BMW X1

கொரோனா பேரிடர்க்கு பின்னர் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தான் அதிகம் சொகுசு கார்கள் வாங்குகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. பல இளம் தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், ஸ்டார்ட்-அப் தொழில்முனைவோர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கார்ப்பரேட் ஊழியர்களின் கவனமும் சொகுசு கார்கள் பக்கம் திரும்பியுள்ளது.

2024-2025 ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் எதிரொலியால், எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் லித்தியம் மின்கலன்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நடப்பு ஆண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.