சென்னை: காதலன் வீட்டில் தூக்கில் தொங்கிய இளம்பெண்... போலீஸ் விசாரணை!

சென்னை ராமாபுரம், பாரதி சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், எம்.ஜி.ஆர் நகரில் பிசினஸ் செய்து வருகிறார். இவரும் தேனாம்பேட்டையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியும். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால் மணிகண்டனின் காதலி மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார். பின்னர் மணிகண்டனை கவனித்துக்கொள்ள அங்கேயே தங்கினார். இதையடுத்து மணிகண்டன், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் அவரின் காதலி அவரோடு தங்கியிருந்தார்.

தற்கொலை!

இந்த நிலையில், மணிகண்டனின் வீட்டில் அவருடைய காதலி திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதைக் கண்டு பதறிய மணிகண்டன் குடும்பத்தினர், இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மணிகண்டனின் குடும்பத்தினர் ராமாபுரம் காவல் நிலையத்துக்கும் அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர், மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அப்போது இளம்பெண்ணின் சடலத்தில் இடது கை, கால்களில் காயங்கள் இருந்ததைப் பார்த்த அவர்கள், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டினர்.

போலீஸ்

இந்த நிலையில் மணிகண்டன் தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இளம்பெண்ணின் மரணம் குறித்து மணிகண்டனின் பெற்றோரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக இளம்பெண்ணின் சடலம், கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காதலன் வீட்டில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.