இந்தக் குதிரைங்கதான் எங்க பிள்ளைங்க - அன்பைப் பொழியும் குதிரை வளர்ப்பாளர் மாலா

இவன் பேரு படையப்பா; இவளோட பேரு ஜான்சிராணி... நல்ல ஒழுக்கமான பொண்ணு. இந்தப்பய அலெக்ஸ் பாண்டியன் பயங்கர சேட்டைக்காரன் - தன் ஆறு பிள்ளைகளையும் அவ்வளவு மகிழ்ச்சியாக அறிமுகப்படுத்துகிறார் மாலா.

மாலாவிற்கு 61 வயதாகிறது. காதல் திருமணம். குழந்தைகள் இல்லை. இந்த 6 குதிரைகள்தான் அவரின் பிள்ளைகள். கூடவே 2 ஆடுகள், 12 நாய்கள், 5 வாத்துகள், நிறைய கோழிகளும் மாலாவுடைய குடும்பத்தில் அடக்கம். இவர்கள் அனைவரும் சென்னை பாம்பன் நகர் பகுதியில், கூவம் ஆற்றங்கரையில் வசித்துவருகின்றனர்.

ஒரு நாள் காலைப்பொழுதில் அவரைச் சந்தித்தோம். குதிரை சாணத்தை சுத்தம் செய்துகொண்டே தன் கதையைச் சொல்லத் தொடங்கினார். “என் சொந்த ஊரு ஆம்பூர் பக்கத்துல இருக்குற பேரணாம்பட்டு. என் அம்மாவும் அப்பாவும் நா பிறந்த கொஞ்ச காலத்துலயே இறந்துட்டதா சொல்லுவாங்க. என் சொந்தக்காரங்ககூடதான் வளர்ந்தேன் அவங்களும் வயித்துக்குச் சோறுகூட போடலே. ஒரு வாய் சோத்துக்குக்கூட கஷ்டப்பட்டேன். வயிற்றுப் பசியில எச்சில் இலையில இருந்ததகூட எடுத்து சாப்பிட்டிருக்கேன். கிடைக்குறத சாப்ட்டு சுத்திக்கிட்டு இருந்தேன். ஜோலார்பேட்ட  பிளாட்பாரத்துல என்ன மாதிரி ஆதரவில்லாத புள்ளைங்க நிறைய இருப்பாங்க.

அவங்கக்கூட போய் படுத்துப்பேன். அப்புறம் மெட்ராஸ்க்கு வந்து, வீட்டு வேலைக்கு, பாத்திரம் கழுவ, துணி தொவைக்கன்னு கிடைக்கிற வேலைக்குப் போனேன். அப்போல்லாம் உடுத்துறதுக்கு ஒரு நல்ல துணிகூட இருக்காது. சந்தையில பழைய துணிய, ரெண்டு ரூபா மூனு ரூபாய்க்கு விப்பாங்க.. அததான் வாங்கிப் போடுவேன்” என்றவர், கண்கள் கலங்குகின்றன.
மாலா தன் காதல் பற்றிப் பேசினால் இப்போதும் வெட்கப்படுகிறார்.

“எனக்கு அவரைப் பிடிச்சிருந்தது. நானும் என் வீட்டுக்காரரும் லவ் பண்ண ஆரம்பிச்சோம். அவரு வீட்டுல எங்க லவ்வ ஏத்துக்கல. ’இவ யாரோ எவளோ, இவ வேணாம்’ன்னு சொன்னாங்க. அப்போ கூட என் வீட்டுக்காரர் என்னைக் கைவிடல. நேரா திருப்பதிக்குக் கூட்டிட்டுப் போயி தாலி கட்டுனாரு. திரும்பவும் சென்னைக்கு வந்து பிளாட்பாரத்துலதான் குடும்பம் நடத்தினோம். எங்களுக்கு வீடு வாசல் எல்லாமே அந்த பிளாட்பாரம்தான். ஏனோ அந்தக் கடவுள் எங்களுக்கு குழந்த பாக்கியத்த தரல...“ - இப்போதும் வார்த்தைகள் கலங்குகின்றன.
முதல் குதிரையை வாங்கிய அனுபவத்தைப் பகிர்கிறார் மாலா.

"அவரு இன்னொரு ஆள்கிட்ட குதிர ஓட்டுற வேலைக்குப் போனாரு. நா எம்.எல்.ஏ ஹாஸ்டல் பக்கத்துல இளநீர்க் கடை ஆரம்பிச்சேன். ரெண்டு பேரும் குதிரை வாங்குறதுக்கு பணத்த குருவி சேக்குற மாதிரி சேத்தோம். ஆனாலும் அந்தப் பணம் பத்தல.. அவரு எனக்குக் கட்டுன தாலிய அடமானம் வச்சு மணிகண்டன்னு ஒரு ரேஸ் குதிர வாங்கினோம். கொஞ்ச நாள் அத வளத்தோம். கொஞ்சநாள்ல நமக்கிட்ட ஒரு நாட்டுக்குதிர கூட இல்லையே’ன்னு அவரு ரொம்ப வருத்தப்பட்டாரு. அப்புறம் தான் டேனியல்-ன்னு ஒரு குதிர வாங்கினோம். அடுத்து ‘தாத்தா’ன்னு ஒன்னு வாங்கினோம். அப்படி பத்துக் குதிர வச்சிருந்தோம், போன வருஷம் மழை டைம்ல நாலு குதிர இறந்திருச்சு. இப்போ ஆறு குதிர இருக்கு. எங்க கிட்ட குதிர இருந்தாலும், அவரு வேற இடத்துக்குத்தான் வேலைக்குப் போவாரு. அதுல வர்ற காச வச்சி இந்தக் குதிரைகளை வளர்ப்போம்..." என்கிறார் மாலா.

"குழந்த இல்லாததால அவரு என்ன விரட்டி விடல, என்ன உக்கார வச்சி கஞ்சி ஊத்துறாரு. வேற ஒரு ஆம்பளையா இருந்தா எனக்கு நீ வேணாம்னு தொறத்தியிருப்பாங்க. எனக்குப் புள்ளைங்க இல்லாதது ஒரு குறையாவே தெரியல. எனக்கு பிள்ளைங்கன்னா இந்தக் குதிரைங்கதான். ஏன்னா அதுங்கதான் என்ன காப்பாத்தி சோறு போடுதுங்க. இதுங்களாலதான் மூனு வீடு வாங்கினேன். கொரோனா காலத்துல ஒரு வீட்ட  ரெண்டு லட்சத்துக்கு வித்து, என் புள்ளைங்களுக்கு சாப்பாடு வாங்கிப் போட்டேன். எத்தன வீடு இருந்தாலும் இதுங்க பக்கத்துலதான் தூங்குவேன் சாப்புடுவேன். நா சாகும்போதுகூட இதுங்க காலடியிலதான் சாகணும்..." - நெகிழ்ந்து பேசுகிறார் மாலா.  

"காலையில எழுந்ததும் இந்த இடத்த எல்லாம் சுத்தம் பண்ணுவேன். அப்புறம் தவிடு வச்சுட்டு தண்ணி காட்டுவேன். அதுக்குள்ள பசங்க வந்து, குதிரைகளைத் துடைச்சுக் குளிப்பாட்டுவாங்க. மதியம் ரெண்டு மணிக்கு மேல பீச்சுக்குக் கூட்டிட்டுப் போவோம். கல்யாண வீட்டு ஆர்டர் வந்தா அங்க அனுப்பி வைப்பேன். பீச்சுக்குப் போறதுல ஒரு நாள் வருமானம் வரும், ஒரு நாள் வராது. அத நம்பியெல்லாம் குதிரைங்க வளக்க முடியாது. எனக்கு சாப்பாடு இருக்கோ இல்லையோ, அதுங்க சாப்பாட்டுக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபா தனியா எடுத்து வைக்கணும். எத்தனையோ ராத்திரி, பகல்ல நா சாப்பிடாம இருந்திருக்கேன். ஆனா ஒரு நாளும் இதுங்கள பட்டினி போட்டது இல்ல. கொரோனா காலத்துலகூட அர வயித்துக்காச்சும் சாப்பாடு போட்டுருவேன்.


சின்ன வயசுல ஒரு வாய் சோத்துக்கு கஷ்டப்பட்டிருக்கேன். இப்போ ஆதரவற்றோர் இல்லத்துக்கெல்லாம் போய் ஐந்நூறு ஆயிரம்னு என்னால முடிஞ்ச நன்கொடைய கொடுக்குறேன். நா குதிரைய விட்டுட்டு அங்க போக முடியாததால, அந்தப் புள்ளைங்க சாப்பிடுறத வீடியோ எடுத்துட்டு வந்து காட்டுவாங்க. அந்தப் புள்ளைங்க நல்ல துணி போட்டு, சாப்புடுறத பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும்“ என்றார் மாலா.
அவரைத் தலையால் அன்பாக முட்டி அன்பை வெளிப்படுத்துகின்றன குதிரைகள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.