INCOME TAX இல்லாத நாடுகள்: ஓஹோ... முகேஷ் அம்பானி துபாயில சொத்து வாங்க இதுதான் காரணமா?!

``முதலீட்டாளர்கள் அபாயங்களை எதிர்கொண்டு, பணத்தை முதலீடு செய்கின்றனர். ஆனால் அரசு கடுமையான வரிகளை விதிக்கிறது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அரசு சி.எஸ்.டி, ஐ.சி.எஸ்.டி, முத்திரை தீர்வை, எஸ்.டி.டி, நீண்டகால கேபிட்டல் கெய்ன் வரி போன்ற வரிகளை விதிக்கிறது. இதனால் அரசு அதிகமாக சம்பாதிக்கிறது.

முதலீட்டாளர்களும், புரோக்கர்களும் அபாயங்களை எதிர்கொள்கின்றனர். ஆனால் அரசுக்கு அது போன்ற பிரச்னை இல்லை. அனைத்து வகையான நிதி முதலீட்டு அபாயங்களையும் நான் எதிர்கொள்கிறேன். ஆனால் அனைத்து விதமான லாபங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது" என சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் `இந்திய நிதிச் சந்தையின் பார்வை என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பங்குச் சந்தை புரோக்கர் ஒருவர் சராமாரியாக கேள்விகளை கேட்டது நாடெங்கிலும் வைரல் ஆனது.

நிர்மலா சீதாராமன் - வருமான வரி

இந்தியாவில் இருக்கும் பல பிரச்னைகளில் அதிக வரி விதிப்பு என்கிற பிரச்னை பெரும்பிரச்னையாக இருக்கிறது. நாம் அனைவரும் கஷ்டப்பட்டு நேரத்தை செலவிட்டு பல தியாகங்களை செய்து இறுதியில் வரும் வருமானத்தில் பெரும் பகுதியை வரியாக கட்டுவது பெரும்பாலானவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது என்பதுதான் உண்மை.

இந்தியாவில் இப்படி இருக்க, உலகின் பல நாடுகளில் வருமான வரி விதிக்கப்படுவதில்லை என்பது இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்?

குறிப்பாக அரபு நாடுகளில் வருமான வரி வசூலிப்பது இல்லை. அதனால்தான், ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தனது மகன்களான ஆனந்த் அம்பானிக்கும் ஆகாஷ் அம்பானிக்கும் பல விலை மதிப்புள்ள பங்களாக்களை துபாயில் வாங்கி தந்துள்ளனர். ஏனென்றால் வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் போன்ற தேசங்கள் அனைத்திலுமே வருமான வரி இல்லை. இதனால் உலகளவில் பெரும் பணக்காரர்களும் தொழிலதிபர்களும் இந்நாடுகளில் பெரும் அளவில் முதலீடுகளை செய்கின்றனர்.

வருமான வரி வசூலிக்கப்படாத எட்டு நாடுகள்!

பஹாமாஸ்: கரீபியன் தீவு தேசமான பஹாமாஸ் நாடு அந்நாட்டு மக்களிடம் வரி வசூலிப்பது இல்லை. வரிகள் இல்லாததால் பிற நாட்டு தொழிலதிபர்கள் இந்த நாட்டில் வந்து முதலீடு செய்கிறார்கள்.

முகேஷ் அம்பானி

பெர்முடா: சிறிய சிறிய தீவு நாடுகளில் ஒன்றான பெர்முடாவில் கூட வருமான வரி இல்லை. அதற்கு மாறாக அந்நாட்டில் பேரோல் (Payroll) வரி நடைமுறையில் உள்ளது. தொழிலாளர்களுக்கான மெடிக்கல் பாலிசி மற்றும் வேலையிழப்பு போன்ற சூழ்நிலைகளில் இந்த வரிபிடித்தத்தில் இருந்து நலத்திட்டங்களை அந்நாட்டு அரசு வழங்கும்.

மொனாக்கோ: பணக்காரர்களின் சொர்க்க புரியாக மொனாக்கோ கருதப்படுகிறது. ஏனெனில் இந்த நாட்டில் மக்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிறைய பணக்காரர்கள் இந்த நாட்டில் குடியேறுகின்றனர்.

கேமன் தீவுகள்: முக்கியமான ஃபைனான்ஷியல் மையமாகவும் வருமான வரி இல்லாத நாடாகவும் கேமன் தீவு நாடு விளங்குகிறது. இந்த நாடு பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டதாகும். இந்நாட்டில் குடிமக்களுக்கு வருமான வரி இல்லை. இதனால் இந்நாடு தொழில் மையமாகவும் தனிமனிதர்களுக்கு வரிச்சுமையை குறைக்கும் நாடாகவும் இருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகம்: குவைத், மஸ்கட், அபுதாபி உள்ளிட்ட நாடுகளின் சம்மேளனமாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது. இந்நாட்டில் குடிமக்களுக்கு வருமான வரி இல்லை. எனவே உலகிலுள்ள பணக்காரர்களையும் தொழிலதிபர்களையும் கவரும் நாடாக துபாய் விளங்குகிறது.

INCOME TAX

புருனய்: இந்நாடு பெட்ரோலியம் வளம் நிறைந்த நாடாக உள்ளது. எனவே இங்கு குடிமக்களுக்கு வருமான வரி இல்லை. எண்ணெய் வருமானத்தில் அதிக அளவு செல்வம் பெருகுவதால் இங்கு வருமான வரி வசூலிக்கப்படுவதில்லை.

பஹ்ரைன்: இது ஒரு தீவு தேசமாகும். இந்த நாட்டின் பொருளாதாரம் செழிப்பாக இருப்பதற்குக் காரணம் இந்நாட்டில் மக்களுக்கு வருமான வரி கிடையாது. மிகவும் செல்வம் மிகுந்த நாடாக பஹ்ரைன் இந்த பிரதேசங்களில் உள்ளது.

நௌரு: இது மைக்ரோனேசியா பகுதியில் உள்ள ஒரு தீவு நாடாகும். நௌரு நாட்டில் வருமான வரி இல்லை. இருந்தாலும் வேறு சில சிக்கல்கள் காரணமாக வருமான வரிகள் தவிர வேறு வரிகள் நடைமுறையில் உள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.