வயநாடு: மொத்த குடும்பமும் மண்ணுக்குள்... தனியாளாக நிற்கும் திருமணப்பெண் ஸ்ருதி!
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் அங்குள்ள மக்கள் சொல்லொண்ணா துயரில் மூழ்கியுள்ளனர். மண்ணில் புதைந்த உயிர்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடந்துவருகின்றன. ’நம் உறவினர்கள் உயிரோடு மீண்டெழமாட்டார்களா’ என ஜே.சி.பி இயந்திரம் தோண்டும் இடங்களில் கண்ணீருடன் தேடுகின்றனர் மக்கள்.
நிலச்சரிவு குறித்து அதை நேரில் அனுபவித்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். நிலச்சரிவு ஏற்படுவதற்கு முந்தைய நாள் இரவு, முண்டக்கையில் அதிதீவிர மழை பெய்தது. அப்போது முண்டக்கை ஆறு கரைபுரண்டு ஓடியதில் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. வெள்ளரிமல, சூரல்மல, கஷ்மீர் தீவு பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இவ்வளவு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடந்ததைத் தொடர்ந்தே, நாட்டை உலுக்கிய உருள்பொட்டல் எனும் நிலச்சரிவு நிகழ்ந்தது. நிலச்சரிவில் சிக்கி பல குடும்பங்கள் வேரோடு அழிந்த சோக சம்பவங்கள் நடந்துள்ளன.
நிலச்சரிவு குறித்து சூரல்மலையைச் சேர்ந்த பேபி கூறுகையில், "அதிகாலை 2 மணி முதல் நிலச்சரிவு ஏற்பட்டபோது மின்சாரம் இல்லை. இதனால் பதற்றமான மனநிலையில் சற்று மேலே உள்ள சர்ச்சு கிரவுண்டுக்குச் சென்றேன். அப்போது, முண்டக்கை பகுதியில் இருந்து சத்தம் வந்ததை அறிந்துகொண்டேன். அந்நேரம், அதிகாலை சுமார் 2.30 மணி இருக்கும். சூரல்மலையை நோக்கி நிலச்சரிவு வந்தது. அதைக்கண்டு மக்கள் அங்கும் இங்கும் ஓடினார்கள்.
முதல் நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில், ஆபத்து இல்லை எனச் சிலர் போனில் அழைத்துக் கூறினார்கள். ஆனால், காலை 4.10 மணியளவில் இரண்டாவது ஏற்பட்ட நிலச்சரிவில், ஏற்கெனவே போனில் அழைத்தவர்களும் சிக்கி மண்ணில் மறைந்தனர். அப்போது ஏற்பட்ட நிலச்சரிவு சத்தம், இதுவரை எங்கும் கேட்காத அளவுக்கு அச்சமூட்டும் வகையில் இருந்தது" என்றார்.
நள்ளிரவில் நிலச்சரிவு வடிவில் வந்த பிரளயத்தில் பல குடும்பங்கள் மண்ணுக்கடியில் புதைந்தன. குடும்பத்தில் ஒருவர் கூட மிச்சமில்லாமல் மடிந்த சோக நிகழ்வுகளும் நடந்துள்ளன.
வெள்ளார்மல அரசு பள்ளி மொத்தமாக மண்ணில் புதைந்துள்ளது. அந்த ஸ்கூலுக்கு அருகே வசித்துவந்த சிவண்ணனின் 9 பேர் கொண்ட குடும்பத்தில், மூத்த மகள் ஸ்ருதியை தவிர மற்ற அனைவரும் மண்ணில் புதைந்து மாண்டுபோன சோகம் நடந்துள்ளது.
சிவண்ணன், அவரின் மனைவி சபிதா, தந்தை போமலப்பன், தாய் சாவித்திரி, மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா (19) ஆகியோர் ஒரு வீட்டில் வசித்துவந்தனர். பக்கத்து வீட்டில் சிவண்ணனின் சகோதரர், அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் வசித்துவந்தனர். இப்படி, 9 பேர் கொண்ட அவர்களது குடும்பத்தில் இப்போது ஸ்ருதி மட்டுமே மீதமிருக்கிறார். ஸ்ருதி கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். ஸ்ரேயா, கல்பற்றா அரசு கல்லூரியில் படித்துவந்தார். இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி ஸ்ருதியின் குடும்பத்தினர் மாண்டிருக்கிறார்கள்.
தங்கை ஸ்ரேயாவின் உடல் மேப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருப்பதை பார்த்து ஸ்ருதி கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஸ்ருதிக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடத்துவதற்காக நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்தை குடும்பத்தினர் கூடி நடத்துவதற்கான திட்டமிடல்கள் நடந்துவந்துள்ளன. இந்த நிலையில்தான் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து தனிமரமாக நிற்கிறார் ஸ்ருதி. அவருக்கு ஆறுதல் சொல்லக்கூட கரம் இல்லாத துயரநிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ருதியின் வீடு மொத்தமாக அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 7 குடும்ப உறுபினர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


