Wayanad Landslides: வயநாடு மண் சரிவு; பழங்குடிகள் எப்படித் தப்பினார்கள்? முழு விவரம்

கேரளாவின் ஆதி நிலம் வயநாடு. துண்டும் துளியுமாக சிதறிக்கிடக்கிற இந்த மலை நகரத்தில் இன்றும் பண்பாடு மாறாமல் தங்கள் தொன்ம வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் பழங்குடி மக்கள்.

பணியர்கள், காட்டு நாயக்கர்கள், குறிச்சான்கள், அடியான்கள், ஊராளிகள், குறும்பர்கள் உள்ளிட்ட பழங்குடி சமூகங்கள் தத்தம் அடையாளங்களோடு இங்கிருக்கும் மலைகளிலும் குகைகளிலும் வாழ்கிறார்கள். யானைகளும் சிறுத்தைகளும் புலிகளும், காட்டெருமைகளும் உலவும் இந்த வன நிலத்தில் அதன் மேனி குலையாமல் தங்களைப் பொருத்திக்கொண்டு வாழ்கிறார்கள் இந்தப் பழங்குடிகள். வயநாட்டில் சுமார் 4 லட்சம் பழங்குடிகள் வசிப்பதாக கேரள அரசின் பதிவேடுகள் சொல்கின்றன.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் கர்நாடகாவில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவிலும் தமிழகத்தில் கூடலூரில்  இருந்து 45 கி.மீ தொலைவிலும் இருக்கிறது வயநாட்டின் பிரதான நகரமான சுல்தான் பத்தேரி.

இந்நகரைச் சுற்றி 200-க்கும் மேற்பட்ட சிறு சிறு குடியிருப்புகளில் வசிக்கிறார்கள் பழங்குடிகள். தமிழ்நாட்டின் முதுமலை சரணாலயமும் கர்நாடகாவின் பந்திபூர் சரணாலயமும் வயநாட்டில் தான் சந்திக்கின்றன. அதனால் சாதாரணச் சாலைப் பயணத்திலேயே சுதந்திரமாக உலவித்திரியும் யானைகளையும் காட்டெருமைகளையும் காணமுடியும். அடர்ந்த வனமாக பழங்குடிகள் கையிலிருந்த இந்த நிலப்பரப்புக்கு முந்தைய பெயர் மாயாசேத்திரம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே  மனித நாகரிகம் தழைத்திருந்தத தொன்மச் சான்றுகள் ஏராளம் இங்கு கிடைத்திருக்கின்றன. இங்கிருக்கும் எடக்கல் குகையில் 6000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறைக்கிறுக்கல் ஓவியங்கள் கண்டறியப்பட்டன.

நெடுங்காலம் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பகுதி பிற்காலத்தில் கோட்டயம் ராஜவம்சத்தாருக்குக் கட்டுப்பட்ட நிலப்பரப்பாக மாறியிருக்கிறது. மைசூர் உடையார் ராஜா வாடியாரின் ஆளுமையிலும் சிறிது காலம் இந்தப்பகுதி இருந்தது. பிறகு வந்த ஆங்கிலேயர்கள் இதை தங்கள் வாசஸ்தலமாக வைத்துக்கொண்டார்கள்.
வனத்துக்கு மத்தியில் தத்தம் பண்பாட்டோடு நிம்மதியாக வாழ்ந்த பழங்குடிகளின் வாழ்க்கையை ஆங்கிலேயர்கள் புரட்டிப்போட்டார்கள்.

மண்ணுக்கும் மலைக்கும் இணக்கமாக நின்ற மரங்களை எல்லாம் அழித்து தேயிலையையும் காபியையும் பயிரிட்டார்கள். பழங்குடிகளைப் போலவே நிம்மதியாக இருந்த காட்டுயிர்கள் பலவும் இதனால் நிலைகுலைந்தன. அடர்ந்த வனம் ஆங்காங்கே களையப்பட்டு தேயிலைக்கு தரை வார்க்கப்பட்டது. ஏலக்காய், மிளகு, கிராம்பு, வெந்தயம், சீரகம், பாக்கு என பல்வேறு வகையான வாசனைப் பயிர்கள் வளர்க்கப்பட்டன. இயற்கையின் இருப்பிடமாக இருந்த இந்தப்பகுதி வாசனைப் பொருள்களின் உற்பத்திக்கூடமாக மாறிவிட்டது.  

மலையெங்கும் காங்கிரீட் கட்டுமானங்கள் எழுந்தன. ஆங்கிலேயர்களுக்குப் பிறகு, பெரும் பணக்காரர்களின் கைகளுக்குள் வந்தது வயநாடு. பழங்குடிகளின் தடங்களை அழித்துவிட்டு பெரிய பெரிய வீடுகளைக் கட்டிவைத்து கோடை வாசஸ்தலமாக வயநாட்டை மாற்றினார்கள். பாக்கு, வாழைத் தோட்டங்கள்  ஏராளம் உருவாக்கப்பட்டன. பழங்குடிகள் இன்னும் தங்கள் வாழ்க்கையைச் சுருக்கிக்கொண்டு மேலும் மேலும் இடம் பெயர்ந்தார்கள்.


இங்கிருக்கும் பல கிராமங்களை இன்னும் சாலை வசதியோ மருத்துவ வசதியோ எட்டிப் பார்க்கவில்லை. பள்ளிகள்கூட பல கிராமங்களில் இல்லை. சில தொண்டு நிறுவனங்களின் உதவியோடு முதல் தலைமுறையாக இப்போதுதான் கல்விக்கூடங்களை எட்டிப் பிடிக்கிறார்கள் பிள்ளைகள்.
ராகுல் காந்தி வயநாடு பாராளுமன்றத் தொகுதியின்  களமிறங்கியதும் தேசத்தின் பார்வை இந்த மலைநகரத்தின் மீது விழுந்தது. அரசியல் முக்கியத்துவம் கொண்ட பகுதியாக இது மாறியது.

பாக்கு மரம் ஏறுவது, காபிக்கொட்டைகளை சேகரிப்பது, தேன் எடுப்பது என எளிய தொழில்களைச் செய்து வாழும் வயநாட்டு மக்களின் வாழ்க்கையை தற்போது பெய்த பேய்மழை புரட்டிப்போட்டு விட்டது.


ஏராளமான நீர் வீழ்ச்சிகளும் ஏரிகளும் நிறைந்த பச்சைய பூமியான வயநாடு மனிதர்களை மண்ணோடு புதைத்து அசுர முகம் எடுத்திருக்கிறது. வயநாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. அத்தனை நீர் நிலைகளும் நிரம்பிவிட்டன. நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழை காரணமாக மலைப்பகுதிகளில் மண் பிடிமானம் தளர்ந்துவிட்டது.

 
கடந்த சனிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை இடைவிடாது கொட்டித் தீர்த்தது மழை. ஒரே நாளில் 30 செ.மீ மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. சூரல் மலை என்ற மலைக்கு  மேலே தோன்றி மீன்முட்டி நீர்வீழ்ச்சியாக வீழ்ந்து கோழிக்கோடு மலப்புரம் வழியாகச் சென்று அரபிக்  கடலில் கலக்கும் சாலியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

 
தொடர் மழையால் தளர்ந்திருந்த மண்ணும் பாறைகளும் நீரோடு சேர்ந்து கீழேயிருந்த முண்டக்கை கிராமத்தை மொத்தமாகத் துடைத்து கீழே தள்ள , கீழேயிருந்த சூரல் மலை குடியிருப்பு துவம்சமானது.  இரண்டு  கிராமங்களையும் இணைக்கும் பாலம் உடைந்து நொறுங்கியது. நள்ளிரவு இரண்டரை மணி முதல் மூன்றரை மணிக்குள்ளாக இந்த இரு கிராமங்களும் மண்ணுக்குள் மூழ்கிப்போயின. 200க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. உறக்கத்திலிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளும் முன்னரே உயிரிழந்தார்கள்.

சூரல்மலை, முண்டக்கைப் பகுதிகளில் காப்பி, தேயிலை, குறுமிளகு,  வாழை, ஏலக்காய் தோட்டங்கள் அதிகமுண்டு. வெளி மாநிலங்களைச் சேர்ந்த  ஏராளாமானோர் இங்கு தங்கி தோட்ட வேலை செய்கிறார்கள். அவர்களுக்காக அங்கே நிறைய வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கே இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஏராளமான கால்நடைகளும் இங்கு உண்டு.  உறக்கத்தில் இருந்த மக்கள் இந்தப் பேரிடரை எதிர்பார்க்கவில்லை. வெள்ளம் பலரை இழுத்துச்செல்ல மண் பலரை மூடியது. பாறைகள் பலரின் உயிரைப் பறித்தன. சாலியாறு நதி இந்த இரு கிராமங்களையும் தின்று செரித்து புதுப்பாதை போட்டு கோழிக்கோடு நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் பேரிடர் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத்தந்திருக்கிறது. பழங்குடிகளின் மண்ணான இங்கு கொட்டித் தீர்த்த பேய்மழை பழங்குடி மக்களை பெரிதாக பாதிக்கவில்லை. சூரல் மலைக்கு மேலே அரண மலை, ரிப்பன் போன்ற பகுதிகளில் காட்டு நாயக்கர்கள் வசிக்கிறார்கள். சூரல் மலையைச் சுற்றியிருக்கும் வனப்பகுதியில் பணியர்கள் வாழ்கிறார்கள். வெறும் மூங்கில் பத்தைகளை ஊன்றி அதன் மேல் களிமண் பூசி புற்களால் வேயப்பட்ட அந்தப் பழங்குடிகளின் வீடுகள் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. எங்கே மண் சரியும், எங்கே வெள்ளம் வரும் என்பதையெல்லாம் அனுபவத்தால் உணர்ந்து அதற்கேற்ப தங்கள் வாழிடங்களை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள் பழங்குடிகள்.  
கடந்தாண்டும் இந்த சூரல் மலை நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது. ஆயினும் அழிவு பெரிதாக இல்லை.

நிலத்தின் தாங்கு தன்மைக்கு மேலே கட்டுமானங்களை உருவாக்கியதே இந்த பேரிடருக்குக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  இன்று காலை நிலவரப்டி 126 பேர் இறந்திருக்கிறார்கள். ஆங்காங்கே நதிகளில் உடல்கள் மிதக்கின்றன. மண்ணுக்குள் இருந்து கைகள் நீண்டு நிற்கின்றன.

களத்தில் இறங்கிய ராணுவமும் பேரிடர் மீட்புப் படையும்  மண்ணுக்குள் நீருக்குள்ளும் தத்தளித்த  மேற்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பாக தங்கவைத்திருக்கிறது. 500க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்கிறார்கள்.  இறந்தோர் எண்ணிக்கை மணிக்கு மணி கூடுகிறது.
இயற்கையின் சீற்றத்தில் சிக்கி நம் சகோதர மாநிலம் தவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை கரம் கொடுத்து மீட்போம். உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு ஆறுதலைப் பகிர்வோம்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.