உடனிருந்து, பழகி போட்டுக்கொடுத்த பெண்... குற்ற பின்னணி கொண்டவரின் கொலை வழக்கில் சிக்கிய ஸ்பா ஓனர்

மும்பை விலே பார்லே பகுதியில் போலீஸாக நடித்து மிரட்டி பணம் பறித்துக்கொண்டிருந்த குரு வாக்மாரே என்ற கிரிமினல் கடந்த வாரம் மும்பையில் அதிகாலையில் மசாஜ் சென்டரில் படுகொலை செய்யப்பட்டார். அவரை இரண்டு பேர் கொண்ட கும்பல் வெட்டிச்சாய்த்தது. எனினும் வாக்மாரேயுடன் இருந்த பெண்ணை அக்கும்பல் எதுவும் செய்யவில்லை. இப்படுகொலையில் ஈடுபட்டதாக ஏற்கனவே பெரோஸ் மற்றும் சாதிக் அன்சாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு வாக்மாரேயுடன் இருந்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணின் பெயர் மேரி என்று தெரிய வந்துள்ளது. போலீஸார் நடத்திய விசாரணையில் மேரி கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் வாக்மாரேயுடன் தொடர்பை ஏற்படுத்திகொண்டது தெரிய வந்தது. மேரி வந்து வாக்மாரேயையும் முற்றிலும் மாற்றி இருக்கிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்மாரே மேரி சொன்னபடி நடந்து கொண்டுள்ளார். யாரையும் வீட்டிற்கு அழைத்துச்செல்லாத வாக்மாரே, மேரியை மட்டும் தனது சொந்த வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். மேரி இரண்டு நாட்கள் வாக்மாரே வீட்டில் தங்கி இருந்து வாக்மாரே குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டுள்ளார்.

போலீஸ் வேடத்தில் வாக்மாரே

மேரியை வாக்மாரே காதலிப்பது அவரது மனைவிக்கும் தெரிந்திருக்கிறது. மேரியை வாக்மாரே கண்மூடித்தனமாக காதலித்துள்ளார் என்கிறார்கள். அதோடு மேரியை தனது சொந்த கிராமத்திற்கும் அழைத்துச்சென்று அனைத்தையும் காண்பித்துள்ளார். இதன்மூலம் வாக்மாரே குறித்த அனைத்து தகவல்களையும் மேரி தெரிந்து கொண்டுள்ளார். மேரியை பயன்படுத்தி வாக்மாரே பற்றிய தகவல்களையும், அவர் எங்கு செல்கிறார் என்ற தகவல்களையும் கொலை செய்த கும்பல் தெரிந்து கொண்டுள்ளது. அதோடு வாக்மாரேயை பல சந்தர்ப்பங்களில் கொலை செய்ய முயற்சி செய்து தோல்வியில் முடிந்துள்ளது. இக்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த சாப்ட் டச் ஸ்பா எனப்படும் மசாஜ் சென்டர் உரிமையாளர் சந்தோஷ் ஷெரேகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்மாரே சந்தோஷிடம் அடிக்கடி மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். அந்த மிரட்டலில் இருந்து விடுபட வாக்மாரேயை கொலை செய்ய முடிவு செய்து பெரோஸை அணுகி இருக்கிறார். பெரோஸும் ஸ்பா நடத்தி வருகிறார். அந்த வகையில் இருவருக்கும் இடையே நட்பு இருந்தது. அந்த நட்பை பன்படுத்தி பெரோஸிடம் தனது பிரச்னையை சொல்லி வாக்மாரேயை கொலை செய்யும்படி சந்தோஷ் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கூறுகையில்,சந்தோஷ் வாக்மாரேயை கொலை செய்ய ஆரம்பத்தில் முன்பணமாக பெரோஸிடம் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். உடனே பெரோஸ் டெல்லியில் வசிக்கும் சாதிக் அன்சாரியை தொடர்பு கொண்டு வர வைத்துள்ளார்.

உடம்பில் டாட்டூ

அவர்கள் இருவரும் வாக்மாரேயின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். வாக்மாரேயின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள மேரியை வாக்மாரேயிடம் அனுப்பி அவரிடம் நட்பை ஏற்படுத்திக்கொள்ள செய்துள்ளனர். மேரியும் வாக்மாரேயிடம் நெருங்கி பழங்கி வாக்மாரே எங்கெல்லாம் செல்கிறார் என்பது குறித்த அனைத்து தகவல்களையும் பெரோஸிடம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் வாக்மாரேயை அவரின் பிறந்தநாளில் கொலை செய்ய திட்டம் தீட்டினர். ஆனால் அத்திட்டம் தோல்வியில் முடிந்தது. வாக்மாரே தனது பிறந்தநாளையொட்டி சயான் பீர் பாரில் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த போது கொலை செய்து முடிவு செய்து இருவரும் அங்கு வந்தனர். வாக்மாரே மசாஜ் சென்டர் ஊழியர்கள் சிலருக்கும் சேர்த்து பார்ட்டி கொடுத்துள்ளார்.

பீர் பாரில் குடித்துவிட்டு மசாஜ் சென்டரில் சென்று மது அருந்த முடிவு செய்து வாக்மாரே மசாஜ் சென்டர் ஊழியர்களுடன் சென்றார். ஒர்லியில் உள்ள மசாஜ் சென்டரில் மது அருந்திவிட்டு மசாஜ் சென்டர் ஊழியர்கள் சென்ற பிறகு வெளியில் காத்திருந்தவர்கள் உள்ளே வந்து வாக்மாரேயை கொலை செய்துள்ளனர். இதற்காக சந்தோஷ் மொத்தம் 12 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அதில் சாதிக் அன்சாரிக்கு 6 லட்சத்தை பெரோஸ் கொடுத்துள்ளார். துப்புக்கொடுத்த மேரிக்கு எவ்வளவு பணம் கொடுத்தனர் என்ற விபரத்தை இருவரும் கூற மறுக்கின்றனர். இதனால் மேரி துப்பு கொடுக்க எவ்வளவு வாங்கினார், யாரிடமிருந்து வாங்கினார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்என்றார்.

வாக்மாரே தனது உடம்பில் 20 பேரின் பெயர்களை டாட்டூ மூலம் எழுதி இருக்கிறார். கஜினி பட சூர்யா போன்று எழுதி வைத்திருந்தார். அதில் இருந்த நபர்கள் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.