Wayanad Landslide: `இந்த உலகில் நம் நேரம் முடிந்துவிட்டது..! - பாதிக்கப்பட்டவரின் திகில் அனுபவம்
கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில்தான் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். ஒரு கிராமமே காணமால் போனதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், வயநாட்டில் கோர நிலச்சரிவிலிருந்து உயிர்தப்பிய சுதர்ஷன் தன் திகில் அனுபவத்தை செய்தி நிறுவனங்களுடன் பகிர்ந்துகொண்டார். அன்று இரவு என்ன நடந்தது.. இதோ அவரின் திகில் அனுபவம்...
"நான் டிரைவராக வேலை செய்துவருக்கிறேன். என அம்மாவுக்கு புற்றுநோய் இருக்கிறது. என் வருமானத்தில் குடும்பத்தையும், என் அம்மாவின் மருத்துவ செலவையும் கவனித்துவருக்கிறோம். வழக்கம்போல இரவு எல்லோரும் தூங்க சென்றுவிட்டோம். நள்ளிரவு 1:30 மணியளவில் பெரும் சத்தம். வீட்டில் கரண்ட் இல்லை. இன்வெர்ட்டரும் வேலை செய்யவில்லை.
அதை சரி செய்ய கட்டிலிலிருந்து எழுந்து காலை கீழே வைத்தபோதுதான் தெரிந்தது, வீட்டில் சேரும், சகதியும் நிரம்பி இருந்தது. எனது ஜீப் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு மோதியது. பெரிய மரக்கட்டைகளும் பாறைகளும் எனது வீட்டின் தரைத்தளத்தில் நிரம்பியிருந்தது. என்னால் ஒன்றிரண்டு அடி எடுத்து வைப்பதுகூட சிரமமாக இருந்தது. முதன்முதலில் சூரமலா கிராமத்திலிருந்து சுமார் 3-4 கி.மீ உயரத்தில் உள்ள முண்டக்கை நகரம்தான் நிலச்சரிவில் பெரிதும் சேதமடைந்தது. எங்கள் வீட்டுக்கு பின்னால் சுமார் 400 மீட்டரில்தான் சூரல்மாலாவின் ஆறு ஓடிகொண்டிருக்கிறது. அதனால் எனக்கு பதற்றம் அதிகமாகி என் அம்மா என்னவானார் என பயந்தேன்.

உடனே அம்மாவின் அறைக்கு சென்று பார்த்தபோது, அம்மா பயத்தில் ஒடுங்கியிருந்தார். அவரையும் அழைத்துக்கொண்டு மொட்டைமாடிக்கு விரைந்தேன். அந்த நேரத்தில் என் மனதில் என் தாயைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால் எங்களால் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியவில்லை. எங்கள் வீட்டை சுற்றியும் முழுவதும் நிரம்பிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தொலைபேசியைக்கூட பயன்படுத்த முடியவில்லை, உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை.
நாங்கள் மேலே சென்ற சிறிது நேரத்திலேயே, எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சூரல்மாலா பள்ளிக்கு அருகில் இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டது. எங்கள் பக்கத்து வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதை பார்த்தேன். அப்போதுதான் நான் என் அம்மாவிடம் , இந்த உலகில் நம் நேரம் முடிந்துவிட்டது. அடுத்ததாக நம் வீடும் இடிந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டலாம் எனக் கூறினேன். அப்போதுதான் மூன்றாவது நிலச்சரிவு ஏற்பட்டது. அதிஷ்டவசமாக அதிலிருந்தும் எங்கள் வீடு தப்பித்தது.

எங்கள் வீட்டின் அருகில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரையும் காணவில்லை. அவர்களை எவ்வளவு அழைத்தும் அவர்கள் பதிலளிக்கவில்லை. தற்போது அவர்களில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை. மழை கொஞ்சம் ஓய்ந்ததும், மொட்டை மாடியில் எங்களைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சிலர், வெளியே வந்து அவர்களைக் காப்பாற்றும்படி சொன்னார்கள். நான் ஒரு ஏணியைப் பயன்படுத்தி எங்கள் மொட்டை மாடிக்கு அவர்களை அழைத்துச் சென்றேன்.
மீட்புப் படையினர் வந்தபோது எங்கள் மொட்டை மாடியில் சுமார் 21 பேர் இருந்தோம். மீட்புக் குழுவினர் காலை 7 மணியளவில் எங்களை பாதுகாப்பாக மீட்டனர். இப்போது புல்பள்ளியில் உள்ள எனது சகோதரியின் வீட்டில் தங்கியிருக்கிறோம். நாங்கள் தங்கியிருந்த அந்த வீடு இனி குடியிருக்க முடியாது. அதைவிட பெரிய கொடுமை பல அண்டை வீட்டாரையும் இழந்துள்ளோம்.

எனது வருமான ஆதாரமான ஜீப்பையும் இழந்துவிட்டேன். என் அம்மாவின் மருந்துகள், மருந்துச்சீட்டுகள் அனைத்தும் தொலைந்துவிட்டன. இனி நான் ஆரம்பத்திலிருந்து எங்கள் வாழ்வை தொடங்க வேண்டும். தற்போதைய சிறு நிம்மதி குறைந்தபட்சம், நாங்கள் இன்னும் வாழும் அதிர்ஷ்டசாலிகள் என்பதுதான்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


