INCOME TAX: இன்றே கடைசி நாள்... யாருக்கெல்லாம் கால நீட்டிப்பு கிடைக்கும்?

INCOME TAX: முடிந்த 2023-24 நிதி ஆண்டுக்குரிய (மதிப்பீட்டு ஆண்டு 2024-25)  வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள் முதல் பிசினஸ்மேன்கள் வரை அனைவரும் 2024 ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்தக் கெடுத் தேதிக்குள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனில் வருமான வரிச் சட்டம் 234F-ன் படி அபராதம் விதிக்கப்படும். 

அதாவது, வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால், ரூ.1,000 அபராதமாகவும், ரூ.5 லட்சத்துக்கு மேல் எனில், ரூ.5,000 அபராதமாகவும் விதிக்கப்படும். அதேபோல் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை முடிவடைந்த நிதி ஆண்டுக்கான வருமான வரியையும் கட்டிவிட வேண்டும். கட்ட வேண்டிய வருமான வரி ரூ.10,000-க்குமேல் இருந்தால் தாமதமாகக் கட்டும் ஒவ்வொரு மாதத்துக்கும் அபராதமாக 1% வட்டி விதிக்கப்படும். இந்த வட்டியையும் சேர்த்துக் கட்டி வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

INCOME TAX | வரிக் கணக்குத் தாக்கல்

அதை விட முக்கியமாக ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு, உங்களால் பழைய வரிக் கணக்கீட்டு முறையில் வருமான வரித் தாக்கல் செய்ய முடியாது. புதிய வருமான வரிக் கணக்கீட்டு முறையில் மட்டுமே வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். 

இப்போது வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள், கால தாமதம் செய்யும் காலத்துக்கான அபராதத் தொகையுடன் வரியைச் செலுத்தி டிசம்பர் 31-ம் தேதி வரைக்கும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம். அதன் பிறகு வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியாது. சரியான தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால், ஏதேனும் ரீஃபண்ட் வர வேண்டியது இருந்தால் அது கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் கடன் வாங்குவதிலும் சிக்கல் ஏற்படும். இதுபோக பாஸ்போர்ட், வெளிநாட்டுப் பயணம் போன்ற அரசின் பொது சேவைகள் விஷயத்திலும் தடைகள் ஏற்படலாம். 

எனவே, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதில் அலட்சியம் காட்டாமல் குறித்த தேதிக்குள் தாக்கல் செய்வது நல்லது.  

டிசிஎஸ் (TCS) திரும்பப் பெறுவதில் சிக்கல்? 

பலருக்கு வருமான வரிக் கணக்குத் தாக்கலில் டிசிஎஸ் (TCS) திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாகப் புகார்கள் எழுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டுக்கு கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்காக அனுப்பப்படும் தொகைக்கு டிசிஎஸ் பிடிக்கப்படும். இவ்வாறு பிடிக்கப்படும் டிசிஎஸ் தொகையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை டிசிஎஸ் எதுவும் பிடித்தம் செய்யப்படாது. ரூ.7 லட்சத்துக்கு மேல் 5% டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இந்த டிசிஎஸ் தொகையை வரிக் கணக்குத் தாக்கல் செய்து ரீஃபண்ட் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்த டிசிஎஸ் விவரங்களைப் பல வங்கிகள் வருமான வரித் துறையிடம் சமர்ப்பிக்காமல் இருக்கின்றன என்று புகார்கள் எழுகின்றன.

இதுபற்றி ஆடிட்டர்களிடம் பேசும்போதும் அவர்கள் இந்தப் பிரச்னை இருப்பதாகக் கூறுகிறார்கள். இதனால் TCS விவரங்கள் 26AS, AIS மற்றும் TIS போன்ற ஆவணங்களில் இடம்பெறுவதில்லை. இதனால் பலர் தங்களது டிசிஎஸ் (TCS) தொகையைத் திரும்ப பெற முடியாமல் தவிக்கின்றனர்.

INCOME TAX | வரிக் கணக்குத் தாக்கல்

இந்தப் பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி, புகார் செய்து டிசிஎஸ் விவரங்களை அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்த வேண்டியது அவசியம். தற்போது வரிக் கணக்குத் தாக்கல் தேதி நெருங்கிவிட்டதால் அதற்கான அவகாசம் குறைவாக இருக்கிறது. டிசிஎஸ் ரீஃபண்ட் பெறுவதற்கு 6 மாதம் அவகாசம் இருப்பதால், இப்போது வரிக் கணக்கைத் தாக்கல் செய்துவிட்டு, பின்னர் டிசிஎஸ் ரீஃபண்ட் பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதுகுறித்த கேள்விகள் சந்தேகங்களுக்கு தெரிந்த ஆடிட்டர்களை அணுகலாம்.

ஜூலை 31-க்கு பின் யாரெல்லாம் வருமான வரித் தாக்கல் செய்யலாம்?

2023-24 நிதி ஆண்டுக்கு வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இன்றுடன் (ஜூலை 31) முடிவடைகிறது. எனவே, அனைவரும் உடனடியாக வருமான வரித் தாக்கல் செய்துவிடுவது நல்லது. கடைசி தேதிக்குப் பிறகு, வருமான வரித் தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டும். உங்களது வருமானத்துக்கு ஏற்ப அபராதமும் அதிகமாக இருக்கும்.

அபராதம்:

5 லட்சம் ரூபாய் வரை வரிக்குட்பட்ட வருமானம் இருந்தால் அதிகபட்சமாக 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.

வரிக்குட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அதிகபட்சமாக 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.

கூடுதல் கால அவகாசம்:

INCOME TAX | வரிக் கணக்குத் தாக்கல்

எனினும், குறிப்பிட்ட சில நபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கணக்குகளைத் தணிக்கை செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவோருக்கு மட்டும் இந்தக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல, தணிக்கைக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவோருக்கு வருமான வரித் துறை மூன்று மாதங்கள் கால நீட்டிப்பு வழங்குகிறது. இதன் மூலம், சம்பந்தப்பட்ட நபர்களோ, தொழில் நிறுவனங்களோ கணக்கு தணிக்கையை முடித்த பின் வருமான வரித் தாக்கல் செய்யலாம்.

யாருக்கெல்லாம் கால நீட்டிப்பு கிடைக்கும்? 

சர்வதேச பரிவர்த்தனைகளில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களுக்கு விரிவான தணிக்கை தேவை என்பதால், நவம்பர் 30-ம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்யலாம்.

உள்நாட்டு நிறுவனங்களிலும் கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க வேண்டிய நிறுவனங்கள், கூடுதல் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டிய நிறுவனங்கள் ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகும் வருமான வரித் தாக்கல் செய்யலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.