வில்லிசை கலைஞர், சமூக சேவகி, வார்டு உறுப்பினர்... சிறந்த திருநங்கை விருது பெற்ற சந்தியா தேவி!

வில்லிசைக் கலைஞராகவும், பல திருநங்கையர் வாழ்வுக்கு உறுதுணையாகவும் விளங்கும் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்த சந்தியா தேவிக்கு, தமிழக முதல்வர் ஸ்டலின் இந்த ஆண்டுக்கான ‘சிறந்த திருநங்கை விருது’ வழங்கியுள்ளார்.

திருநங்கை சந்தியா தேவி வில்லிசை கலைஞர் மட்டும் அல்லாது, தோவாளை பேரூராட்சி 4-வது வார்டு உறுப்பினராகவும் உள்ளார். முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து சிறந்த திருநங்கை விருது பெற்ற சந்தியாதேவியிடம் பேசினோம்.

"வில்லிசை கலையில் இந்தியாவில் சிறந்த திருநங்கை என்ற வகையில் முதல்வர் கையால் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் சிறந்த திருநங்கை வில்லிசை பாடகி என்ற பெருமையை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் 23 ஆண்டுகளாக வில்லிசை கலையை மேடைகளில் பாடிவருகிறேன். பக்கத்து கோயில்களில் வில்லிசை நிகழ்ச்சிகள் நடப்பதை ஆர்வமாகக் கேட்பேன். அப்படித்தான், வில்லிசையைக் கற்றுக்கொண்டேன்.

முதல்வர் ஸ்டாலினிடம் சிறந்த திருநங்கைக்கான விருதுபெறும் சந்தியா தேவி

என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கோயிலில் ஒரு குடும்பம் பாரம்பர்யமாக வில்லுப்பாட்டு பாடிவந்தனர். திருவிழாவுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வில்லிசை பாடகர் இறந்துவிட்டார். திருவிழாவுக்கு வில்லிசை பாடுவதற்கு உடனடியாக ஆள்கள் கிடைக்கவில்லை. ஏற்கெனவே வில்லிசை பாடல்களை கேட்டு மனதில் பதித்து வைத்திருந்ததால், திருவிழாவில் வில்லுப்பாட்டு பாடும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதனால், அந்தக் கோயில் விழாவில் நானே பாட விருப்பப்பட்டு நிர்வாகிகளிடம் கேட்டேன். அவர்களும் சம்மதம் தெரிவித்ததால் ஒரு சில நாள்களில் தயாராகி அந்தக் கோயிலில் வில்லிசை பாடினேன். அதுவே எனக்கு அரங்கேற்ற மேடை. அன்றிலிருந்து இன்றுவரை வில்லிசை பாடிவருகிறேன்.

யாரிடமும் வில்லிசை பாடல் கற்றுக்கொண்டதில்லை. கேள்வி ஞானத்திலேயே பாடிவருகிறேன். ’சந்தியா நல்லா வில்லுப்பாட்டு பாடுவா’ என்ற மக்களின் பாராட்டை சம்பாதித்திருக்கிறேன். சமூகத்தில் பல சிக்கல்களை தாண்டி நான் வளர்ந்திருக்கிறேன். முதல்வர் கைகளால் விருது வாங்கியது மிகவும் பெருமையாக உள்ளது.

வில்லிசை நிகழ்த்தும் சந்தியா தேவி

நான் இப்போது தோவாளையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். 10-ம் வகுப்புவரைதான் படிக்க முடிந்தது. ஆனாலும், மக்களுக்கு சேவை செய்வதில் அதிக ஆர்வமாகச் செயல்பட்டேன். முதியோர் பென்ஷன் பெற உதவுவது, ஆதார் கார்டு திருத்தம் போன்றவற்றுக்கு மக்களுக்கு உதவிகள் செய்கிறேன். சமூக சேவையில் எனது ஆர்வத்தை பார்த்த பொதுமக்கள், என்னை தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பணி செய்யும்படி கூறினார்கள். மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க தோவாளை பேரூராட்சியில் 4-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டேன். மக்கள் ஆதரவுடன் வெற்றியும் பெற்றேன்.

என்னைப் போன்ற திருநங்கைகளுக்கும் வில்லிசை கற்றுக்கொடுத்து வருகிறேன். என் வாழ்க்கைக்கு ஆதாரம் வில்லிசை. இன்னொரு பக்கம், மக்கள் சேவையிலும் பயணித்து வருகிறேன்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.