FoodPro2024: இயந்திரங்கள், பல வகை உணவுகள்... சென்னையில் உணவு பதப்படுத்துதல் பற்றிய சர்வதேச கண்காட்சி

இந்தியத் தொழில் கூட்டமைப்பின்(CII) சார்பில் 15-வது முறையாக புட்ப்ரோ 2024 - என்ற பெயரில் உணவு பதப்படுத்துதல், பேக்கேஜிங் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 9 முதல் 11-ம் தேதி வரை 3 நாள்கள் சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

“உணவுத் துறையில் வேகப்படுத்தும் வளர்ச்சி அளவுகோல்” என்ற தலைப்பில் நடைபெறும் இக்கண்காட்சியில் உணவு பதப்படுத்துதல் மற்றும் நலிவடைந்த தொழில்களுக்கான பரந்த அளவிலான வாய்ப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து இந்த மாநாட்டில் பேசப்பட உள்ளது.

மையத்தில் நிறுவப்பட்டுள்ள மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள்

இந்த மாநாட்டில் உணவு பதப்படுத்துதல், பேக்கேஜிங், தொழில்நுட்பம், உணவு பொருள்கள், பாரம்பர்ய உணவுகள், குளிர்பதன சேமிப்பு, குளிர்பதன மற்றும் போக்குவரத்து பற்றி விவாதிக்கப்படவும் உள்ளது. 3 நாள்கள் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் 250 உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள், துறைசார் மாநாடுகள், வர்த்தக நிறுவனங்களுடனான சந்திப்பு கூட்டங்கள், புதிய தயாரிப்பு அறிமுகம் மற்றும் விளக்கக் காட்சிகள் இடம்பெற உள்ளன. இதில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதன் சிறப்பு அம்சமாக 7 குழு விவாதங்கள், பல்வேறு தலைப்பில் 30-க்கும் மேற்பட்ட பேச்சாளர்களுடன் கூடிய தொழில்நுட்ப அமர்வுகள் மற்றும் அரசு மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

கண்காட்சி குறித்து புட்ப்ரோ 2024 தலைவர் மற்றும் ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி. தியாகராஜன் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் துறையின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 5.35 சதவீதமாக இருந்து வருகிறது. 2022-23 ஆம் ஆண்டில், ஜிவிஏவில் 7.66 சதவீதத்தை இந்தத் துறை கொண்டுள்ளது.

பேக்கரி பொருள்கள் தயாரிப்பு

வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, இந்தத் துறை கிட்டத்தட்ட 2 மில்லியன் தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது. 2022-ம் ஆண்டில் 866 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை அளவுடன், உணவுத் தொழில் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். உள்நாட்டு உணவு சந்தை 2022 மற்றும் 2027-க்கு இடையில் 47% வளர்ச்சியடைந்து 1,274 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில்

சிஐஐ தமிழ்நாடு தலைவர் மற்றும் வீல்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் ஸ்ரீவத்ஸ் ராம் கூறுகையில், "இந்தத் துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் அவர்களின் தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள், சமீபத்திய போக்குகள் மற்றும் துறையின் வளர்ச்சிக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்க சிறந்த தளமாக இந்த மாநாடு மற்றும் கண்காட்சி இருக்கும்.

உணவுப் பொருள்கள்

தற்போது, ​​பால், பருப்பு, வாழை, மா, மாதுளை, பப்பாளி, எலுமிச்சை, ஓக்ரா, இஞ்சி மற்றும் பருத்தி மற்றும் சணல் போன்ற பயிர்கள், அரிசி, கோதுமை, பழங்கள் மற்றும் காய்கறிகள், தேயிலை ஆகியவற்றில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. மேலும் உலகின் முன்னணி முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியாளர்களில் ஒன்றாகவும் உள்ளது. கடந்த 2023-24-ம் நிதி ஆண்டில் இந்தியா 304.4 மில்லியன் டன் தானியங்கள், 296 மில்லியன் டன் பருப்பு வகைகள், 351.9 மில்லியன் டன் தோட்டக்கலை, 230.6 மில்லியன் டன் பால் மற்றும் 138.4 பில்லியன் முட்டைகளை உற்பத்தி செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

3 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் “கோல்ட் ஸ்டோரே இந்தியா”-ன் 4-வது பதிப்பும் இடம்பெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் குளிர்பதன கிடங்குகளில் சேமிப்பு, குளிரூட்டல் & போக்குவரத்து பற்றிய பிரத்யேக கவனம் செலுத்தும் நிகழ்வாக இது இருக்கும்.

டி.சி.பி.எல் பேக்கேஜிங்

இதேபோல் ‘‘டி-புட்’’ என்னும் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சியும் இந்த மாநாட்டில் இடம் பெறுகிறது. மேலும் “உணவு பேக்கேஜிங் கண்காட்சியின்” 2-வது பதிப்பு உணவுப் பொருட்களுக்கான பேக்கேஜிங் தேவைகளை மையமாகக் கொண்டது மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு வகையான உணவுப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் “உணவு திருவிழாவும்” நடைபெறுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.