Wayanad Landslide: 93 உடல்கள் மீட்பு, இரண்டாக பிளந்த ஆறு... மண்ணில் புதைந்த பள்ளி - பினராயி வேதனை!

கேரள மாநிலம், வயநாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்தனர். சம்பவம் நிகழ்ந்த சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் மலப்புறம் மாவட்டப் பகுதியில் சாலியாற்றில் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. பல குடியிருப்புகள் துடைத்தெறியப்பட்ட சோக நிகழ்வு அரங்கேறி உள்ளது. இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை பகுதிகளில் ஏற்பட்டுள்ளது இதயத்தை பிளக்கும் துயரமாகும். அதி தீவிர மழை அங்கு ஏற்பட்டுள்ளது. உருள்பொட்டலில் ஒரு பிரதேசமே காணாமல்போய்விட்டது. 93 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது இறுதி கணக்கு அல்ல. இதில் இன்னும் மாற்றங்கள் ஏற்படலாம். காயம் ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் 128 பேர் சிகிச்சையில் உள்ளனர். இரவு தூங்கியவர்கள் காலையில் மண்ணில் புதைந்து இறந்துள்ளனர். நிறைய பேர் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மலப்புறம் மாவட்டம், நிலம்பூர் பகுதியில் சாலியாற்றில் இருந்து 16 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது உடல் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 34 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 18 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை ராணுவ குழுவினர் ஆற்றைக் கடந்து முண்டக்கை மார்க்கெட் பகுதியில் செல்ல முடிந்தது. அங்கு காயமடைந்த நிலையில் காணப்பட்டவர்களை கயிறு மூலம் மீட்டனர். நம் மாநிலம் இதுவரை எதிர்கொண்ட மிக துயரமான இயற்கை பேரிடர்களில் இதுவும் ஒன்றாகும். இயற்கை தர்த்து எறிந்த பகுதிகளில் மீட்ப்புப் பணிகள் அனைத்து விதங்களிலும் தொடருகின்றன. 

பினராயி விஜயன்

முதல் உருள்பொட்டல் அதிகாலை 2 மணிக்கு நடந்தது. இரண்டாவதாக அதிகாலை 4.10 மணியளவில் மீண்டும் உருள்பொட்டல் ஏற்பட்டது. மேப்பாடி, முண்டக்கை, சூரல்மலை ஆகிய இடங்களில் பல பகுதிகள் தீவு போன்று தனிமைப்படுத்தப்பட்டன. சூரல்மலை - முண்டக்கை சாலை அடித்துச் செல்லப்பட்டுள்ளது. வெள்ளார்மலையில் இருந்த ஜி.வி.ஹெச் ஸ்கூல் ஏறக்குறைய முழுவதும் மண்ணில் புதைந்துபோனது. அங்குள்ள இருவழிஞ்ஞி ஆறு ஒரு வழியாக பாய்ந்துவந்த நிலையில், இப்போது இரண்டாக பாயும் நிலை ஏற்பட்டுள்ளது. மண்ணுக்கு அடியில் சிகியவர்கள், இழுத்துச் செல்லப்பட்டவர்களை கண்டுபிடிக்கும் மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்த்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க கவர்னர் ஆனந்தபோஸ் ஆகியோர் அழைத்து விவரங்களை கேட்டறிந்து அனைத்து வகையிலும் உதவி செய்வதாக கூறியுள்ளனர். கேரளா எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்கள் ஒன்றாக இதை எதிர்கொள்வோம் எனக் கூறியுள்ளனர். 5 அமைச்சர்கள் மேற்பார்வையில் வயநாட்டில் மீட்புப் பணிகள் நடந்துவருகின்றன. ராணுவம் மீட்புப் பணியில் களம் இறங்கி உள்ளது. அனைவரும் நல்லமுறையில் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வயநாட்டில் 45 முகாம்களில் 3,065 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 118 முகாம்களில் 5,531 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புத்துறை, போலீஸ், பேரிடர் மீட்புக்குழு, ராணுவம், கப்பல் படை வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்புத்துறையில் 329 வீரர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வயநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். போலீஸ் மோப்பநாயும், ராணுவ மோப்ப நாய்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வயநாடு நிலச்சரிவு

மரணமடைந்தவர்களின் பிரே தபரிசோதனைகளை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணமுடியாத உடல்களை டி.என்.ஏ சோதனை மூலம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 20,000 லிட்டர் குடிநீருடன் டேங்கர் லாரிகள் சென்றுள்ளன. தற்காலிக மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் மாவட்ட மருத்துவர்கள் வயநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதிக மார்ச்சரி சர்வீஸ், மொபைல் மார்ச்சரி சர்வீஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடுப்பில் உள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இப்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதி பேரிடர் பாதிக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்ட இடம் அல்ல. ஆனால், நிலச்சரிவு ஏற்பட காரணமாக அறியப்படும் முண்டக்கயம் பகுதி தீவிரமாக பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிக்குள் உள்ளது. அங்கு மக்கள் அதிகமாக வசிக்கவில்லை. மழை காரணமாக அங்குள்ள மக்கள் வேறுப குதிக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டிருந்தனர். நிலச்சரிவில் இழுத்துவரப்பட்ட மண்ணும், பாறைகளும் சூரல்மலை அங்காடி பகுதியை வந்தடைந்துள்ளன. சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூரல்மலை பகுதி சமதளமானது, நிறைய குடியிருப்புக்கள் அமைந்துள்ள இடமாகும். இந்த பகுதி நேற்று மதியம் ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட பகுதியாகும். முதல் 24 மணிநேரத்துக்குள் 200 மில்லி மீட்டர் மழையும், அடுத்த 24 மணி நேரத்தில் 372 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மொத்தம் 572 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. திடீரென பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பகுதியில் இதற்கு முன்பு பேரிடர் சம்பவங்கள் நடக்கவில்லை என்றாலும், அவ்வப்போது வரும் எச்சரிக்கை அறிவிப்புக்களை சரியாக கடைபிடிக்க வேண்டும்.

வயநாடு நிலச்சரிவு

சொல்லமுடியாத துயரத்தில் நாம் உள்ளோம். நாடே மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபடும் நபர்கள் மட்டுமே அங்கு செல்லவேண்டும். மற்றவர்கள் அங்கு வேடிக்கை பார்ப்பதற்காகச் சென்று மீட்புப் பணிக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். வேடிக்கை பார்க்கச் செல்பவர்களின் கார் உள்ளிட்ட வாகனங்களால் மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். 2018-ல் மழைவெள்ள பிரளயத்தின்போது கேரளம் ஒற்றுமையாக அதை எதிர்கொண்டது. வெளியில் இருந்தும் நமக்கு உதவிக்கரங்கள் நீண்டன. வயநாடு பேரிடரிலும் அது போன்று நாம் ஒன்றாக செயல்படவேண்டும். வயநாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முதல்வர் பொது நிவாரண நிதிக்கு உதவி அளிக்க முன்வர வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் 5 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். கேரளா மாநிலத்தில் 2 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும். தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.