Kareena Kapoor: அவர் குடும்பத்தில் மத வேறுபாடுகளில்லை! - கரீனா கபூரின் குழந்தைகள் வளர்ப்பாளர்

பாலிவுட் நடிகர்களான கரீனா கபூர் - சைஃப் அலி கான் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

இவர்களது திருமணம் மும்பையில் 2012ம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு தைமுர் அலிகான், ஜெகாங்கீர் அலிகான் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கரீனா கபூரின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பிரபல குழந்தைகள் வளர்ப்பாளர் லலிதா தில்வா என்பவர், கரீனா கபூர் குறித்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் கரீனா கபூர் கிறிஸ்துவத்தைப் பின்பற்றுவதாகவும், கணவர் சைஃப் அலி கான் இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகவும், குழந்தைகள் எல்லா மதத்தின் வழிபாடுகளையும் பின்பற்றுவதாகவும் பேசியிருக்கிறார்.

கரீனா கபூரின் குழந்தை, லலிதா தில்வா

"கரீனா கபூரின் கணவர் இஸ்லாத்தைப் பின்பற்றுவர். கரீனா கிறிஸ்துவத்தைப் பின்பற்றுகிறார். ஆனால் அதில் இருவருக்குமிடையே எந்தப் பிரச்னைகளும் வந்ததில்லை. எல்லா மதங்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் அவர்கள். அவர்களது குழந்தைகளும் எல்லா மத வழிபாடுகளையும் செய்பவர்கள். எல்லா மதக் கடவுள்களின் வழிபாட்டுப் பாடல்களைப் பாடுவார்கள். அதில் அவர்களுக்கும் எந்தக் குழப்பங்களுமில்லை. நேர்மறையான நல்ல எண்ணங்கள் இருந்தால் போதும். மதங்கள் பிரச்னையில்லை. எல்லாம் ஒரே கடவுள்தான் என்று வாழ்கிறார்கள் கரீனாவின் குடும்பத்தினர்" என்று பேசியிருக்கிறார். கரீனா கபூர் மட்டுமல்ல பாலிவுட், டோலிவுட், தொழிலதிபர்கள் எனப் பலரின் குழந்தைகளுக்குக் குழந்தைகள் வளர்பாளராக இருந்தவர் லலிதா தில்வா.

இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த 12th ஃபெயில் கதாநாயகன் விக்ராந்த் மாஸ்ஸியின் தந்தை - கிறிஸ்துவர், தாய் - சீக்கியர், அவரது சகோதரர் 17 வயதில் இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர். இப்படிப் பல மதங்களைப் பின்பற்றும் தனது குடும்பத்தினர் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருந்த அவர், "என் அம்மா சீக்கியர். என் தந்தை கிறிஸ்துவர், வாரம் இருமுறை தேவாலயம் செல்பவர். வீட்டில் லஷ்மி பூஜையும் செய்பவர். எனது சகோதரர் பெயர் மோயின், 17 வயதில் இஸ்லாம் மார்க்கத்திற்கு மதம் மாறியவர். இப்படி எங்கள் குடும்பத்தினர் பல மதங்களைப் பின்பற்றுகின்றனர். என் சகோதரர் இஸ்லாம் மார்க்கத்திற்குச் செல்லும்போது எங்கள் வீட்டில் இருப்பவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

விக்ராந்த் மாஸ்ஸியின் குடும்பத்தினர்

இதையெல்லாம் பார்த்து வளர்ந்த எனக்கு, மதம் என்பது மனிதர்கள் உருவாக்கியது என்றுதான் தோன்றும். என் குழந்தைகளைப் பகுத்தறிவுடன் வளர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதேசமயம் மதங்களில் இருக்கும் நம் இந்திய கலாசாரத்தையும் மதிக்க வேண்டும் என்றும் கற்றுக்கொடுப்பேன்" என்று மனம் திறந்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் பிரபலங்கள் பலர் இப்படி மத வேறுபாடின்றி வாழ்வது குறித்து நெட்டிசன்கள் பலரும் பாராட்டி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வைரல் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.