Paris Olympics: LGBTQ வீரர்களை பாதுகாக்க `டேட்டிங் ஆப் விதித்த கட்டுப்பாடு!
உலகே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் 2024, ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஜூலை 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஆண்கள், பெண்கள் என இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் LGBTQ+ மக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய, அவர்களின் டேட்டிங் செயலியாகக் கருதப்படும் கிரிண்டர் (Grinder), ஒலிம்பிக் நகரில் அதன் சேவையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியதிலிருந்து செயலியைப் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், அதனை சரிசெய்ய வேண்டும் என்றும் கிரிண்டர் பயனர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் கிரிண்டர் செயலி தனது அதிகாரபூர்வ வலைதளப் பக்கத்தில் இதற்கு பதில் அளித்துள்ளது. அதில், ’நீங்கள் நினைப்பதுபோல் இது இணையத்தால் ஏற்படும் பிரச்னையோ, செயலியில் ஏற்பட்டுள்ள பிரச்னையோ அல்ல.
ஒலிம்பிக்கில் பங்குபெறும் வீரர்களின் பாதுகாப்பையும் அவர்களது தனியுரிமையையும் காக்கவே செயலி பயன்பாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறோம். இந்த ஒலிம்பிக் தொடரில் பங்குபெறும் வீரர்களில் இதுவரை 175 பேர் தங்களை LGBTQ+ என அறிவித்திருக்கின்றனர். இன்னும் பல நாடுகளில் தன்பால் ஈர்ப்பு திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை.

இதனால் பல வீரர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளியே கூறாமல் மறைமுகமாக வைத்திருக்கலாம். அவர்களில் பலரும் கிரிண்டர் செயலியை பயன்படுத்துபவர்களாக இருக்கலாம். இந்நிலையில், பிற பயனர்கள் வீரர்களின் அடையாளங்களை பொதுவெளியில் வெளியிடக்கூடும். இதனால் வீரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி போட்டியில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம், அல்லது அவர்களது நாடுகள் அந்த வீரர்களைத் திரும்பப்பெறும் நிலையும் ஏற்படலாம்.
இதனைக் கருத்தில்கொண்டே இருப்பிடத்தின் (Location) அடிப்படையில் பயனர்களின் விவரங்களைக் காண்பிக்கும் வசதியைத் தடை செய்துள்ளோம். மேலும், ஒருவருக்கு மெசேஜ் அனுப்பி அந்த நபர் அதைப் படித்த உடன் தானாகவே அழிந்து போகும் மெசேஜ்களை (disappearing messages) வரைமுறையின்றி அனுப்பவும், தனிப்பட்ட வீடியோக்களைப் பகிர்வதையும் தடை செய்துள்ளோம்.

மேலும், செயலியில் வேறொருவர் அனுப்பிய மெசேஜ், புகைப்படம், அவருடைய ஐ.டி என எதையும் செயலியில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத வகையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். கிரிண்டர் பயன்படுத்தும் LGBTQ+ சமுதாயத்தினர் எவ்வித பயமும் இன்றி விளையாட்டில் கவனம் செலுத்த இந்தக் கட்டுப்பாடுகள் உதவும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


