தென்காசி: குண்டாறு தனியார் எஸ்டேட் நீர்வீழ்ச்சிகள் செயல்பட தடை - கோட்டாட்சியர் உத்தரவு!
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் பேரரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருக்கிறது.
சீசனையொட்டி குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருக்கும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் பெய்யும் மழை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடையால் சுற்றுலா பயணிகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன்காரணமாக குற்றாலத்திற்கு சுற்றுலா வருவோர் அருகே உள்ள குண்டாறு, பாலருவி, கும்பாவுருட்டி, தென்மலை, பாபநாசம் உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி குற்றாலத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குண்டாறு நீர்த்தேக்கத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து அங்கு, மக்கள் அனுமதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதைத்தொடர்ந்து, குண்டாறு நீர்த்தேக்கத்திற்கு மேலே தனியார் எஸ்டேட்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள அருவிகளுக்கு ஜீப்பில் சவாரி சென்று குளிப்பதற்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதற்கு, நபர் ஒருவருக்கு 500 முதல் 4 பேர் உள்ள ஒரு குடும்பத்தினருக்கு 2000-3000 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, தென்காசி கோட்டாட்சியருக்கு புகார் வந்ததை தொடர்ந்து, செங்கோட்டை -குண்டாறுக்கு சென்று ஆய்வு நடத்திய அதிகாரி, நீர்த்தேக்க பகுதியிலிருந்து மேலே தனியார் எஸ்டேட் நீர்வீழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

தொடர்ந்து குண்டாறு நீர்தேக்கத்திற்கு மேலே தனியார் எஸ்டேட் அருவிகளுக்கு செல்லும் பாதையை மூடுவதற்கு அவர் உத்தரவிட்டார். இதனால் குண்டாறுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


