Wayanad Landslide: `தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்! - நாடாளுமன்றத்தில் ஒலித்த கேரள MP-க்கள் குரல்

கேரளாவின் வயநாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவின் பாதிப்பு ஒவ்வொரு நொடியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பலி எண்ணிக்கை 50-ஐ தாண்டி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சுமார் 500 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது. மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், பல்வேறு இடங்களில் நிலச்சரிவில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதால், மீட்புக் குழுவினரின் பணிகளில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

வயநாடு

பிரதமர் மோடி முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்புகொண்டு தேவையான உதவிகள் அளிப்பதாக உறுதியளித்திருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின், உடனடி நிவாரண பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி அறிவித்திருக்கிறார். இவ்வாறாக இருக்க, நாடாளுமன்றத்தில் கேரள எம்.பி-க்கள், உடனடியாக இதை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியிருக்கின்றனர்.

முதலாவதாக மாநிலங்களவையில் உரையைத் தொடங்கிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, ``இது கேரளாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஏற்பட்ட சோகம். பிரதமர் மோடி தலைமையில் கேரளாவில் இந்திய அரசு நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து வருகிறது. மாநில அரசுடன் ஒருங்கிணைந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா

தற்போது, ​​உடல்களை மீட்பதும், காப்பாற்றப்படக்கூடியவர்களை மீட்பதும்தான் முதன்மையானது. குறிப்பாக, அவசரகால பதிலளிப்பு முறையை (Emergency Response System) நாம் செயல்படுத்த வேண்டும் " என்று கூறினார். அவரைத்தொடர்ந்து, வயநாடு நிலச்சரிவு தொடர்பாகக் கேரள எம்.பி-க்கள் தங்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

ஜான் பிரிட்டாஸ் (CPI - M), ``இது மிகவும் தீவிரமான விஷயம். பலி எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நான்கு கிராமங்கள் துண்டிக்கப்பட்டுவிட்டது. பாதுகாப்புத்துறை, உள்துறை மற்றும் நிதித்துறையின் உதவி எங்களுக்கு வேண்டும். கேரளாவுக்கு ராணுவம் அனுப்பப்பட வேண்டும். தேவையான அனைத்து உதவிகளையும் கேரளாவுக்கு வழங்க வேண்டும்."

ஜான் பிரிட்டாஸ் (CPI - M)

சந்தோஷ் குமார் (CPI), ``பலி எண்ணிக்கை 50-ஐ தாண்டிவிட்டது. நிலைமை மோசமடைந்துவருகிறது. இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். பீகார், அஸ்ஸாம், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு நிதியமைச்சர் அறிவித்த புதிய திட்டத்தில் கேரளாவையும் சேர்க்க வேண்டும்."

சந்தோஷ் குமார் (CPI)

அப்துல் வகாப் (IUML), ``இதில் முக்கியமான பிரச்னை கேரளா அரசிடம் தற்போது நிதி இல்லை. எனவே, உடனடியாக கேரளா அரசுக்கு நிதியளிக்க வேண்டும்."

ஜோஸ் கே.மணி (KC - M), ``நிலைமையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 500 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டன. ஒவ்வொரு நிமிடமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது."

ஜேபி மேதர் ஹிஷம் (காங்கிரஸ்)

ஜேபி மேதர் ஹிஷம் (காங்கிரஸ்), `` உடனடியாக இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். ரூ. 5,000 கோடி ஒதுக்க வேண்டும். பாலங்கள் அடித்துச் சென்றுவிட்டதால், தற்காலிக பாலம் அமைப்பதோடு, தேசிய பேரிடர் மீட்புக் குழுவையும், ஹெலிகாப்டர்களையும் உடனடியாக அங்கு அனுப்பு வேண்டும்."

மாநிலங்களவையில் இந்த உரை நிகழ்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``இன்று அதிகாலை வயநாடு பெரும் நிலச்சரிவுகளால் தாக்கப்பட்டது. 70-க்கும் ஏற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். முண்டகை கிராமம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுவிட்டது. மீட்பு மற்றும் மருத்துவ சேவைக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுக்க வேண்டும்.

ராகுல் காந்தி

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வயநாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில், பல பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நிலச்சரிவு அதிகரித்து வருவதை நம் நாடு கண்டுவருகிறது. சூழலியல் ரீதியாக பலவீனமான பகுதியில் அதிகரித்து வரும் இயற்கைப் பேரிடர்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் செயல் திட்டத்தை எடுப்பதற்கும் அவசரத் தேவை இருக்கிறது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.