ஜூலை 31-க்கு பின் யாரெல்லாம் வருமான வரித் தாக்கல் செய்யலாம்?
2023-24 நிதி ஆண்டுக்கு வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 உடன் முடிவடைகிறது. எனவே, அனைவரும் உடனடியாக வருமான வரித் தாக்கல் செய்துவிடுவது நல்லது. கடைசி தேதிக்குப் பிறகு வருமான வரித் தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டும். உங்களது வருமானத்துக்கு ஏற்ப அபராதமும் அதிகமாக இருக்கும்.
அபராதம்:
5 லட்சம் ரூபாய் வரை வரிக்குட்பட்ட வருமானம் இருந்தால் அதிகபட்சமாக 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.
வரிக்குட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அதிகபட்சமாக 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.
கூடுதல் கால அவகாசம்:
எனினும், குறிப்பிட்ட சில நபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கணக்குகளை தணிக்கை செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவோருக்கு மட்டும் இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுபோல, தணிக்கைக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவோருக்கு வருமான வரித் துறை மூன்று மாதங்கள் கால நீட்டிப்பு வழங்குகிறது. இதன் மூலம், சம்பந்தப்பட்ட நபர்களோ, தொழில் நிறுவனங்களோ கணக்கு தணிக்கையை முடித்த பின் வருமான வரித் தாக்கல் செய்யலாம்.
யாருக்கெல்லாம் கால நீட்டிப்பு கிடைக்கும்?
சர்வதேச பரிவர்த்தனைகளில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களுக்கு விரிவான தணிக்கை தேவை என்பதால், நவம்பர் 30-ம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்யலாம்.
உள்நாட்டு நிறுவனங்களிலும் கூடுதல் விவரங்களை தெரிவிக்க வேண்டிய நிறுவனங்கள், கூடுதல் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டிய நிறுவனங்கள் ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகும் வருமான வரித் தாக்கல் செய்யலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


