அகர் மரங்கள் ஏற்றுமதிக்கு இனி தடையில்லை... இந்தியாவின் முயற்சியால் அழிவு பட்டியலிலிருந்து நீக்கம்!
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மரம், அகர் மரம். சந்தன மரத்தை விட, இது பல மடங்கு கூடுதல் விலை மதிப்புக் கொண்டது என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்துக்குச் சர்வதேச அளவில் சந்தை வாய்ப்புகள் பிரகாசமாக இருந்து வருகின்றன. இந்த மரத்தைப் மூலப்பொருளாகப் பயன்படுத்தி, உயர் ரக வாசனைத் திரவியங்கள், அகர் பத்திகள், விலையுயர்ந்த சாம்பிராணி, சோப்புகள் மற்றும் சில மருந்து பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன. இவ்வளவு சிறப்புகள் கொண்ட அகர் மரத்தின் பூர்விகம் இந்தியாதான். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள காடுகளில் அதிகமாக காணப்படுகிறது.
சர்வதேச அமைப்பான சிட்ஸ் (CITES-Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora), அழிந்துவரும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் மற்றும் கண்காணிக்கும் பணியை செய்து வருகிறது. அழிந்து வரும் தாவரங்களின் சுரண்டலைத் தடுக்கவும், காடுகளில் அவற்றின் வாழ்வியலை உறுதி செய்யவும் பணியாற்றுகிறது. இந்த அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது.
அகர் மரங்களைக் காக்க இந்தியாவின் முன்மொழிவு அடிப்படையில் 1995-ல் முதல் முறையாக CITES இன் பின்னிணைப்பு II இல், அகர் மரங்கள் பட்டியலிடப்பட்டன. அதன்படி, அக்விலேரியா மலாசென்சிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அகர் மரங்கள், உடனடியாக அழிந்துபோகும் அபாயம் இல்லை என்றாலும், இந்த மரங்களின் வாழ்வியலை அச்சுறுத்தும் சுரண்டலைத் தவிர்க்க, இதன் வர்த்தகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சர்வதேச அமைப்பான CITES மாநாட்டில், குறிப்பிடத்தக்க வர்த்தக மதிப்பாய்வில் (Review Significant Trade) அகர் மரங்களை சேர்க்கும் முயற்சியை வெற்றிகரமாகத் தடுத்துள்ளது, இந்தியா. இதன் மூலம், அகர் மரங்களின் வர்த்தக ஏற்றுமதி எளிதாகும். இந்த நடவடிக்கையானது அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பயனளிக்கும்.
இந்தியாவில் அகர் மரங்கள் அதிகளவில் விளைவிக்கப்பட்ட போதும், சிட்ஸ் அமைப்பின் பல்வேறு கட்டுப்பாடுகளால் அதன் ஏற்றுமதி பாதித்தன. வர்த்தகம் தொடர்பான கட்டுப்பாடுகள் மத்திய கிழக்கு மற்றும் பிற வெளிநாடுகளுக்கு அகர் மரங்கள் ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தின.
நவம்பர் 2021 முதல் இந்தியாவில் அகர் மர ஏற்றுமதிக்கு அனுமதி இருந்தாலும், பல கட்டுப்பாடுகள் இருந்ததால், சட்டப்பூர்வமாக அகர் மரங்களை வர்த்தகம் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் சட்டத்திற்கு புறம்பாக சில இடங்களில் ஏற்றுமதியும் நடைபெற்று வந்தது.

தற்போது இந்திய தாவரவியல் ஆய்வு (BSI) மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) ஆகியவற்றின் தாவர இனங்கள் பற்றிய நிரூபிக்கப்படாத கண்டுபிடிப்புகளுக்கான அமைப்பின் (Non Determine Findings-NDF) ஆய்வின் அடிப்படையில், குறிப்பிடத்தக்க வர்த்தகத்தின் மதிப்பாய்வு பட்டியலிலிருந்து அகர் மரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
மேலும், 2024 முதல் 2027 வரை அகர் மர தூள், சிப்ஸ், எண்ணெய் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டையும் பரிந்துரைத்துள்ளது என்.டி.எஃப். இதன்படி ஆண்டுக்கு 1,51,080 கிலோ அகர் மரங்கள், ஆண்டுக்கு 7,050 கிலோ அகர் எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியும்.
வனப்பகுதிகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காடுகளில் உள்ள மரங்களை அறுவடை செய்வது, விதைகள் / நாற்றுகள் / மரக்கன்றுகள் மற்றும் பிற பணிகளை மேற்கொள்ளக் கூடாது" என்று என்.டி.எஃப் தெரிவித்துள்ளது.
அதேசமயம் வீடுகள், தோட்டங்கள், பட்டா நிலங்கள், குத்தகை நிலங்கள், தனியார் நிலங்கள், சமூக நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நிலங்களில் பயிரிடப்பட்டிருக்கும் அகர் மரங்களை அறுவடை செய்ய அனுமதித்துள்ளது என்.டி.எஃப்.
அகர் மரங்களைச் சாகுபடி செய்து வரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிதாஸிடம் பேசியபோது, "இந்த மரத்துக்குச் சர்வதேச அளவுல சந்தை வாய்ப்புகள் பிரகாசமா இருக்கு. இன்றைய சந்தை விலை நிலவரப்படி, 10-12 ஆண்டுகள் ஆன ஒரு அகர் மரம், அதோட தரத்தைப் பொறுத்துக் குறைந்தபட்சம் 35,000 ரூபாய்ல இருந்து, அதிகபட்சம் 1,00,000 ரூபாய் வரைக்கும் விலை போகுது. வடகிழக்கு மாநிலங்கள்ல இயற்கையாகவே அதிக எண்ணிக்கையில் அகர் மரங்கள் வளருது.

அந்தப் பகுதிகள்ல சுமார் 8 ஆண்டுகள் ஆன அகர் மரங்கள்ல காற்றின் மூலம் பூஞ்சைகள் ஊடுருவும். அதனால் அந்த மரங்களோட தண்டுப்பகுதியில ஆங்காங்கே வட்ட வடிவுல சிப்ஸ் மாதிரி ஒரு தன்மை உருவாகும். அதை ‘அகர்’னு சொல்வாங்க. அதுமாதிரி அகர் உருவான மரங்களை அறுவடை செஞ்சு, அதிக அகர் தன்மை கொண்ட வட்டவடிவப் பகுதிகளை மட்டும் தனியாக நறுக்கி எடுத்து, வாசனை திரவியங்கள், ஊதுபத்திகள்,, சாம்பிராணி, விலை உயர்ந்த குளியல் சோப்புகள், மருந்து பொருள்கள் தயார் செய்யப் பயன்படுத்துறாங்க. சமீபகாலமா, கர்நாடகா விவசாயிகள் அகர் மர சாகுபடியில அதிக ஆர்வம் காட்டுறாங்க. கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள்ல கடந்த சில வருஷங்களாகத்தான் அகர் மர வளர்ப்பு பத்தின பேச்சுகள் இருக்கு" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


