Paris 2024 Olympics: நேரலையில் பெண்களுக்கு எதிரான சர்ச்சை கருத்து - வர்ணனையாளர்மீது நடவடிக்கை!

33-வது ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண், பெண் பாலின சமத்துவத்தை நிலைநாட்டிடும் வகையில், ஆண்களுக்குச் சமமான பெண்களின் எண்ணிக்கையோடு, சமூக மாற்றங்களை பாரீஸ் ஒலிம்பிக்கும் தனது பங்குக்குப் பிரதிபலித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒலிம்பிக் கமிட்டியினர் பாரீஸ் ஒலிம்பிக்ஸை பாலின சமத்துவம் மிக்க ஒலிம்பிக்ஸ் என புகழ்ந்துகொண்டிருக்கின்றனர். இச்சமயத்தில், பிரான்ஸைச் சேர்ந்த யூரோஸ்போர்ட் டெலிவிஷன் சேனலின் மூத்த விளையாட்டு வர்ணனையாளர் பாப் பல்லார்ட் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனைகள் குறித்து, போட்டியின்போது வர்ணனை செய்த பேச்சுகள், உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.

Paris Olympics 2024

ஆஸ்திரேலியா அணியின் நீச்சல் வீராங்கனைகள் மோலி ஓகலாகன், ஷைனா ஜாக், எம்மா மெக்கியோன் மற்றும் மெக் ஹாரிஸ் ஜோடி சனிக்கிழமை இரவு பெண்களுக்கான 4 x 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் தொடர் ஓட்டத்தில் அசாத்திய திறனோடு விளையாடி, தங்கம் வென்றனர். அப்போது அந்த போட்டியினை வர்ணனை செய்த பல்லார்ட், “இந்த பெண்கள் இப்போதுதான் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். பெண்கள் பெரும்பாலும் சுற்றித்திரிவது, மேக்கப் போடுவது போன்ற விஷயங்களையே அதிகம் விரும்புவர் என்பது உங்களுக்குத் தெரியும்” எனப் பாலின சமத்துவமற்ற வகையில், பெண்களுக்கு எதிரான கருத்துகளை நேரலையில் முன்வைத்தார்.

அவரின் இந்த வர்ணனை பேச்சு, பலரையும் முகம் சுழிக்க வைத்ததோடு, கண்டனத்திற்கும் உள்ளானது. வர்ணனையாளரின் நேரலை கருத்துகள் பாலியல்ரீதியாக மற்றும் பொருத்தமற்ற கருத்தைத் தெரிவித்ததற்காக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும் ஒலிம்பிக் ஒளிபரப்பாளர் ஞாயிற்றுக்கிழமை பல்லார்டை அவர்களின் ஒலிம்பிக் கவரேஜிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பல்லார்ட் - பெண் வீராங்கனைகள்

மேலும், திங்கள்கிழமை முதல் வர்ணனையாளர் பட்டியலிலிருந்தும் அவரது பெயர் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வீராங்கனைகள் குறித்துத் தான் நேரலையில் பேசியது தவறுதான் என பல்லார்ட் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவின் கீழும் இணையவாசிகள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். நூற்றாண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸில் சம அளவிலான பெண்கள் இப்போதுதான் பங்கு கொள்கிறார்கள் என அனைவரும் பெருமை பேசும் நேரத்தில், இது போன்ற விஷயங்களும் நடப்பது வேதனை தான்.

செய்தி - பி.கோபிநாத் (மாணவப் பத்திரிகையாளர்)

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.