`பழங்குடி பெண்கள் தாலி அணியக்கூடாது, குங்குமம் வைக்கக்கூடாது’ - மேடையில் பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட்
ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா என்ற இடத்தில் பழங்குடியின மக்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இக்கூட்டத்தில், ’ஆதிவாசி பரிவார் சன்ஸ்தா’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தும் ஆசிரியர் மேனகா என்பவரும் கலந்து கொண்டு பேசினார். மேனகா, அரசு பள்ளியில் ஆசிரியர். அவர் தனது உரையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் பிரச்னை எழுப்பப்பட்டது.
’பழங்குடியின பெண்கள் பண்டிட்கள் சொல்வதை கேட்கக்கூடாது. கழுத்தில் தாலி அணியக்கூடாது. நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ளக்கூடாது. பழங்குடியின பெண்கள் கல்வியில் கவனம் செலுத்தவேண்டும். விரதம் இருப்பதை அனைவரும் கைவிடுங்கள். நாமெல்லாம் இந்துக்கள் கிடையாது’ என்று மேனகா மேடையில் பேசினார்.
மேனகாவின் பேச்சுக்கு, பழங்குடி மக்கள் கூட்டத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், அவரது பேச்சு குறித்து மாவட்ட கல்வி அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கல்வித்துறை இணை இயக்குநர் ஆசிரியர் மேனகாவை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு இருக்கிறார்.
ராஜஸ்தான் கல்வித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், ராஜஸ்தான் நடத்தை விதிகளை மீறிவிட்டதாகவும் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக, கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேனகா பேசிய கூட்டத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிராவில் இருந்து ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வந்து கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


