திருச்செங்கோடு: 10 வயது சிறுமியைக் கத்தியால் வெட்டிய சாஃப்ட்வேர் இன்ஜினீயர் - அதிர்ச்சி சம்பவம்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த சக்தி நாயக்கன்பாளையம் பால் சொசைட்டி அருகில் உள்ள குடித் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் செந்தில்குமார், பெங்களூருவில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையில், மனநலம் பாதிக்கப்பட்ட செந்தில்குமாருக்கு, இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில், தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபு என்பவரின் 10 வயது பெண் குழந்தையை, செந்தில்குமார் கத்தியால் வெட்டியுள்ளார். குழந்தையின் கதறல் சத்தம் கேட்ட செந்தில்குமாரின் தாயார் சம்பூர்ணம் ஓடி வந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செந்தில்குமாரை பிடிக்க ஓடிவந்த போது, அவர்களையும் கத்தியால் தாக்கியிருக்கிறார். ஒருவழியாக அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பிறகு, அந்த இளைஞரால் வெட்டப்பட்ட பெண் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது, கழுத்து நரம்புகள் துண்டிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சேலத்தில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல், அந்த இளைஞர் வெட்டியதில் காயம் அடைந்த தங்கராசு, முத்துவேல் ஆகியோர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களின் முதல்கட்ட விசாரணையில், செந்தில்குமார் பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து சிகிச்சைக்கு பின் ஓரளவு குணமடைந்து வந்ததாகவும், ஆனால் கடந்த மூன்று மாதங்களாக பைக் ஒன்று சம்பந்தமாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறால், மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் அறையிலேயே யாருடனும் பேசாமல் இருந்தபடி வந்துள்ளதாகவும் தெரியவந்தது.

குற்றவாளி

இந்த நிலையில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு பெண் குழந்தைகளில் சோபாவில் அமர்ந்திருந்த குழந்தையை மட்டும் லேப்டாப், கம்ப்யூட்டர் வைத்திருந்த மேஜை அடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டியுள்ளார். தடுக்க வந்தவர்களையும் கத்தியால் வெட்டியதில் அனைவரும் படுகாயம் அடைந்துள்ளனர். ஊரக காவல் நிலைய போலீஸார் செந்தில்குமாரை கைதுசெய்து பாதுகாப்பில் வைத்திருந்த நிலையில், அவரை மன நோயாளி எனக் கூறி போலீஸார் தப்பிக்க வைக்க முயற்சிப்பதாகவும்,

கைது

குழந்தைக்கு அந்த இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், குழந்தையை கத்தியால் வெட்டிய செந்தில்குமாரை கடுமையான சட்டங்களின் கீழ் தண்டிக்க வேண்டும்... நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சிறுமியின் தந்தை பிரபு, அவரது உறவினர்கள், ஊர் பொதுமக்கள் என சுமார் 150 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்துபோக செய்தனர். சிறுமி ஒருவரை சாஃப்ட்வேர் இன்ஜினீயர் கத்தியால் வெட்டிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.