`ராவான இன்ட்ரோவுக்காக காத்திருந்தார்! சுரேஷ் கோபியின் மகனை அறிமுகப்படுத்தும் வின்சென்ட் செல்வா!

மலையாளப் படவுலகில் இயக்குநராக அறிமுகமாகும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஆர்.கே. வின்சென்ட் செல்வா. விஜய்யின் ப்ரியமுடன், யூத் உள்பட பல படங்களை இயக்கியவர்.

நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபியின் மகன் மாதவ் சுரேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் கும்மாட்டிக்களி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தை ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருக்கிறார் இது அவர் தயாரிக்கும் 96 வது படம். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடலான கடல் போலே பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியிருந்தார்.

மாதவ்

ஆர்.பி.சௌத்ரி சாரின் தயாரிப்பில் ஜித்தன் இயக்கியிருக்கேன். அந்த அறிமுகத்தில் அவரிடம் எப்போதும் பேசுவேன். அவரும் என்னை ரொம்பவே என்கரேஜ் பண்ணுவார். மலையாளத்தில் கும்பளங்கி நைட்ஸ் மாதிரி ஒரு படம் பண்ண விரும்புறேன். எனக்கு யூனிட் மட்டும் கொடுத்தால் போதும்.. லைட்ஸ் எதுவும் வேண்டாம்னு சௌத்ரி சார்கிட்ட சொன்னேன். படத்துக்குத் தேவையான பட்ஜெட்டையும் சொல்லி, சார்கிட்ட சிம்பிளான லைனையும் சொன்னேன். அந்த பட்ஜெட்ல பண்ணிட முடியுமா?னு கேட்டார். முடியும்னு சொன்னதும், அந்தத் தொகையை என்கிட்ட கொடுத்துட்டு பண்ணிட்டு வந்திடுங்கனு சொல்லி அனுப்பி வச்சுட்டார்.

கும்மாட்டிக்களி

அந்த சமயத்தில் சுரேஷ்கோபி சாரோட மேனேஜரை சந்திக்கற வாய்ப்பு அமைந்தது. அவர் என்கிட்ட சுரேஷ்கோபி சாரோட ரெண்டாவது மகன் மாதவ் சுரேஷ், ஹீரோவாக அறிமுகமாகும் ஐடியாவில் இருக்கார். ஒரு நல்ல படத்துல அறிமுகமாகணும்னு நினைக்கறார். நிறைய கதைகள் கேட்டும் அவருக்கு எதுவும் செட் ஆகாமல் போனதால், கதைக்காக காத்திருக்கார் என்றார். அவ்ளோ தான் உடனே சுரேஷ்கோபி சார்கிட்ட பேசினேன். அவர் மாதவ்விற்கு கதை பிடித்தால் போதும். நீங்க இயக்குறதுல எனக்கு சந்தோஷம் தான்னு சொல்லிட்டார். அப்புறம், மாதவ்வை பார்த்து இந்தக் கதையை சொன்னேன். நான் ஹீரோவா தெரியக்கூடாது. ராவா ஒரு என்ட்ரி வேணும்னு தான் இருந்தேன். நான் நினைக்கற மாதிரி உங்க கதை இருக்குதுன்னார். உடனே படப்பிடிப்புக்கு கிளம்பிட்டோம்.

முழுப்படத்தையும் கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் தான் படமாக்கினோம். இந்த லொக்கேஷனை சொல்ல காரணமிருக்கு. நான் இயக்குநராக ஆவதற்கு முன்னர் திரைப்படக் கல்லூரியில் பார்த்த மலையாளப் படமான அமரம் படம் என்னை ரொம்பவே கவர்ந்தது. லோகிததாஸ் எழுத்தில், பரதன் சார் இயக்கியிருப்பார். அந்த படத்தின் லொக்கேஷன் ஆலப்புழா தான். அந்த ஸ்பாட் அப்படியே மனசுல ஒட்டிக்கிச்சு. அதே லொக்கேஷன்கள்ல மலையாளத்துல நானும் ஒரு படம் பண்ணிடனும் அப்ப நினைச்சிருக்கேன். அந்த கனவு இப்ப சாத்தியமாகிடுச்சு. அதனால இந்தப் படத்தின் டைட்டில் கார்ட்டில் அமரம் பரதன் சாருக்கு சமர்ப்பணம்னு போட்டிருக்கோம்.

விஜய்யுடன் இயக்குநர் வின்சென்ட் செல்வா

மாதவ் சுரேஷை பொறுத்தவரை, சிறந்த நடிகர். முதல்நாள் ஸ்பாட்டுக்கு வந்த போது அவர் என்கிட்ட எனக்கு நடிக்க வராது.. டான்ஸ் தெரியாதுனு சொன்னார். ஆனால், அப்படி சும்மா சொல்லியிருக்கார்னு நினைக்க வச்சிட்டார். ஒவ்வொரு ஃபிரேமையும் ரொம்ப சூப்பரா பண்ணியிருக்கார். அவருக்கு ஒரு ஆக்‌ஷன் சீக்குவென்ஸும் வச்சிருக்கோம். ஆக்‌ஷன்லேயும் அசத்தியிருக்கார். படத்துல ஒரு முக்கியமான கதாபாத்திரத்துல லேனாவும் நடிச்சிருக்காங்க. இயல்பான நடிகையா பெயரெடுத்தவர் அவர். இந்த படத்துல அவங்க கேரக்டரை கேட்டுட்டு, துணிச்சலா மொட்டையும் அடிச்சு, நடிச்சிருக்காங்க. சௌத்ரி சார் இந்தப் படத்தைப் பார்த்துட்டு, அந்தம்மாவுக்கு கண்டிப்பா தேசிய விருது கிடைக்கும்னு சொன்னார். ஜேக்சன் விஜயன் இசையமைச்சிருக்கார். இசையமைப்பாளர் ரெக்ஸ் விஜயனோட சகோதரர் இவர். அதே போல ஒரு பாடலை பாடணும்னு யுவன் ஷங்கர் ராஜா சார்கிட்ட கேட்டேன். உடனே சம்மதித்து பாடிக்கொடுத்தார். அந்தப் பாடல் தான், `கடல் போலே என்கிறார் வின்சென்ட் செல்வா.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.