ஆண்டுக்கு ரூ.60 லட்சம் வர்த்தகம்; சோயா பனீர், சோயா பால்... மதிப்புக் கூட்டலில் கலக்கும் விவசாயி!
பஞ்சாப் மாநிலம், சங்ரூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் தெஹ்லான். இங்குள்ள 65 வயது பச்சிதர் சிங் கார்சா, 1990-களில் உருளைக் கிழங்கு சாகுபடியில் சக்கைபோடு போட்ட ஒரு வெற்றிகரமான விவசாயி.
ஆனால், பச்சிதர் சிங்கிற்கு அதன்பிறகுதான் சோதனை ஆரம்பித்தது. மற்ற விவசாயிகளும் உருளைக்கிழங்கு சாகுபடியில் இறங்க உற்பத்தி அதிகரித்தது. இதனால், எதிர்பார்த்த லாபத்தை உருளைக்கிழங்கு விவசாயம் கொடுக்கவில்லை. அவர் விளைவித்த உருளைக்கிழங்குகள் 3 ஆண்டுகள் குளிப்பதனக் கிடங்கில் தேங்கி, பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
திருப்பம் தந்த வேளாண் கண்காட்சி
இதனால், ஏற்பட்ட கடனிலிருந்து அவர் மீள்வதற்கு, தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் பாதிக்கும் மேல் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. வேறு நுட்பங்களை கையாண்டு விவசாயத்தில் மீண்டும் கொடிகட்டி பறப்பது எப்படி என சிந்தித்து வந்தார்.
இந்த நிலையில்தான், 2002-ம் ஆண்டு டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த வர்த்தக கண்காட்சி, பச்சிதர் சிங்கிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அங்கு, சோயாபீன் சாகுபடி மற்றும் சோயாவிலிருந்து பால் பதப்படுத்தும் தொழில்நுட்பங்களை அறிந்து கொண்ட பச்சிதர் சிங், அதை நோக்கிச் செல்வது என்று முடிவெடுத்தார்.
பொதுவாக பஞ்சாப்பில் சோயாபீன்ஸ் விவசாயம் என்பது ஒருசில விவசாயிகளால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சோயாபீன்ஸ் விவசாயத்துடன் அதை மதிப்புக்கூட்டி பனீராக உற்பத்தி செய்வதிலும் பச்சிதர் ஆர்வம் காட்டினார். 2002-ம் ஆண்டில் ஒரு ஏக்கரில் சோயாபீன்ஸ் சாகுபடியைத் தொடங்கினார். அத்துடன் பனீர் தயாரிக்க ஓர் அறையில் சோயாவை அரைக்கும் ஆலையை நிறுவினார்.
சோயாபீன் பதப்படுத்தும் ஆலை!
விவசாயி பச்சிதர் சிங் கார்சா, சோயாவில் புதுப்புது நுட்பங்களை கையாண்டு கடினமாக உழைத்தார். இதனால் அவருக்கு வருமானம் அதிகரித்து லாபம் பார்க்கத் தொடங்கினார். கிடைத்த வருமானத்தை மீண்டும் மீண்டும் அதிலேயே முதலீடு செய்ததோடு, அவர் முன்பு விற்ற நிலத்தையும் வாங்கினார்.
தன்னிடமிருந்த 7 ஏக்கர் நிலத்தையும் சோயாபீன் பயிரிடுவதற்காக மட்டுமே பயன்படுத்திய அவர், கூடுதல் நிலத்தை குத்தகைக்கு எடுத்தும் சோயாபீன்ஸ் சாகுபடியை மேற்கொண்டார். பாரம்பர்யமாக கோதுமை மற்றும் நெல் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் சோயாபீன்ஸ் சாகுபடியை கையாண்டார். அத்துடன், சோயா பால் தயாரிக்கவும் பனீர் தயாரிக்கவும், தானியங்கி பாட்டில் மற்றும் பேக்கேஜிங் வசதிகளுடன் கூடிய ஒரு பெரிய ஆலையையும் சிறிய அளவில் சோயாபீன்ஸ் பதப்படுத்தும் பிரிவையும் நிறுவினார்.
.jpg)
விவசாயி பச்சிதர் சிங் கார்ச்சாவின் நிறுவனம், தனது தரமான சாகுபடி முறைகள் மற்றும் உற்பத்தியால் பிரபலமடைந்தது. ஆரம்பத்தில் ஓர் அறையிலிருந்து தொடங்கிய அவருடைய சிறிய ஆலை, இன்று 1 மணி நேரத்திற்கு 300 லிட்டர் சோயா பால் மற்றும் 50 முதல் 60 கிலோ பனீரை உற்பத்தி செய்யும் அளவுக்கு, 60 கிலோ சோயாபீன்களை பதப்படுத்தும் திறன் கொண்ட ஆலையாக மேம்படுத்தியிருக்கிறார்.
ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய்க்கு மேலான வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பஞ்சாபில் 16 சோயாபீன் பதப்படுத்தும் ஆலைகளையும் உத்தரப்பிரதேசத்தில் மூன்று சோயாபீன் பதப்படுத்தும் ஆலைகளையும் நிறுவி இருக்கிறார் பச்சிதர் சிங். ஒரு விவசாயியாக இருந்து வெற்றிகரமான வேளாண் தொழில்முனைவோராக உருவாகியிருக்கிறார்.
வெற்றி வசமானது எப்படி?
தனது வெற்றிக்கு பின்னால் இருக்கும் கடின உழைப்பு, புது நுணுக்கங்களை கையாளுதல் உள்ளிட்டவற்றை பச்சிதர் சிங் நினைவுகூர்ந்தார்.
அவர், "நான் 1983 முதல் உருளைக்கிழங்கு பயிரிட்டு கணிசமான லாபம் ஈட்டினேன். எனினும், 1990-களின் பிற்பகுதியில் பெரும் பின்னடைவை சந்தித்து நொடிந்து போனேன். 2001-ல் கடன் கழுத்தை நெறிக்க, 15 ஏக்கர் நிலத்தை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உழைத்து சம்பாதித்த அனைத்தையும் இழந்தேன், தன்னம்பிக்கையை தவிர...

இதிலிருந்து மீளும் நோக்கில் மளிக்கைக்கடையைத் திறந்தேன். மறுபுறம் சோயாயை மதிப்புக்கூட்டியதன் மூலம் கிடைத்த பாலை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கினேன்; வேறுசில சாகுபடி முறைகளையும் கையாண்டேன்.
2004-ம் ஆண்டு பலத்த மழை பெய்த போது எனது நிலத்தில் அறுவடைக்கும் தயாராகி இருந்த நெல்லின் நிறம் மாறி கறுப்பானது. இதையடுத்து அப்போது புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான நிபுணர் குழு பஞ்சாப்பிற்கு வந்து எனது நிலத்தை பார்வையிட்டது" என்று கூறும் பச்சிதர், அதுவே இன்னொரு திருப்பமாக அமைத்ததாகக் கூறுகிறார்.
எம்.எஸ். சுவாமிநாதன் காட்டிய வழி!
"சோயாபீன்ஸ் சாகுபடி மற்றும் சிறிய செயலாக்கப் பிரிவு குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவிடம் பகிர்ந்து கொண்டேன். இதையடுத்து, எனது சிறிய ஆலையைப் பார்வையிட்டு பாராட்டினார்.
சந்தையில் சோயா பாலுக்கான தேவை இருப்பதை அறிந்த டாக்டர் சுவாமிநாதன், பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்திடம் (PAU) உதவிடும்படி கோரினார். இதையடுத்து பஞ்சாப் பல்கலைக்கழகம் தனது வளாகத்தில் ஒரு கடையை எனக்கு வழங்கியது. இது திருப்புமுனையாக அமைந்தது" என்று நினைவுகூர்கிறார் பச்சிதர் சிங்.
.jpg)
சோயாபீன்ஸ் ஏப்ரல் மாத பிற்பகுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் பயிரிடப்பட்டு அக்டோபரில் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு விதைக்க 1,800 ரூபாய் மதிப்பிலான 30 கிலோ விதைகள் தேவைப்படும்" என்று சொல்லும் விவசாயி பச்சிதர் மேலும் கூறுகையில், "சோயாபீன்ஸ் தானியங்களை மத்தியப் பிரதேசம் மற்றும் உள்ளூர் சந்தையில் இருந்து வாங்கி ஆண்டு முழுவதும் என் ஆலையை இயக்குகிறேன். எனது சோயாபீன் வயல்களிலிருந்து, நான் ஏக்கருக்கு 6-7 குவிண்டால் விளைச்சல் கிடைக்கிறது" என்கிறார்.
உழைப்புக்கு கிடைத்த விருதுகள்
பஞ்சாப் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவர்கள் மற்றும் விவசாயிகள் இவரிடம் பயிற்சி பெற பண்ணைக்கு வருகிறார்கள். இவருடைய தொழிற்சாலையில் தினமும் 3-4 குவிண்டால் சோயா பனீர் மற்றும் 500 முதல் 1,000 பாக்கெட் சோயா பால் பாட்டிலுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
விவசாயி கார்ச்சா 2003-ல் மாநில விருது மற்றும் 2004-ல் சவுத்ரி சரண் சிங் தேசிய விருது உட்பட பல பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.

இந்திய சோயா தொழிலில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் 2023-ம் ஆண்டு விகூர் சோயா ஹெல்த் (Vigour Soya Health) விருது வழங்கப்பட்டுள்ளது.
"கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் இழந்த நிலத்தை மீண்டும் பெறுவதே எனது குறிக்கோளாக இருந்தது. இன்று, மக்களுக்கு ஆரோக்கியமான, சுத்தமான சோயா பாலை வழங்கி வருகிறேன்" என்று பெருமிதத்துடன் கூறுகிறார் விவசாயி கர்ச்சா.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


