பாம்புகளை இப்படி அநாயசமாக பிடிக்க முடியுமா? வைரல் வீடியோ... வல்லுநர் விளக்கம்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூரைச் சேர்ந்தவர் அஜிதா பாண்டே. செவிலியராக பணியாற்றும் இவர், பாம்புகளை மீட்கும் பணியையும் செய்துவருகிறார். பாம்புகள் இருக்கும் இடம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டால், அந்தப் பகுதிக்கு சென்று பாம்புகளை மீட்டு காடுகளில் பாதுகாப்பாக விட்டுவிடுவார். இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பாம்பு ஒன்றை மீட்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு அலுவலக வளாகத்தில், கம்ப்யூட்டர் டேபிளில் பாம்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

பாம்பு - அஜிதா பாண்டே

சம்பவ இடத்துக்குச் சென்ற அஜிதா பாண்டே, அநாயசமாக அந்தப் பாம்பை எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கையால் பிடிக்கிறார். சுமார் 6 அடி நீளமிருக்கும் அந்தப் பாம்பை அங்கிருப்பவர்களிடம் பேசிக்கொண்டே சாதரணமாக சாக்கு பையில் போடுகிறார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த வைரல் வீடியோ குறித்து சூழலியல் ஆர்வலரும் எழுத்தாளருமான கோவை சதாசிவத்திடம் பேசியபோது, "அந்த வீடியோவைப் பார்த்தேன். அந்தப் பெண் பயிற்சி பெற்ற பாம்பு பிடியாளர் என்பது வீடியோ பார்க்கும்போதே தெரிந்தது. பாம்புகளை பிடிக்கும்போது அழுத்தி கெட்டியாக பிடிக்கக் கூடாது. அப்படி பிடித்தால் அது கடிக்க வாய்ப்புண்டு. மிகவும் மென்மையாகவும் அதேசமயம் பிடி சற்றே இறுகியதாகவும் இருக்க வேண்டும். பாம்பு பிடிக்க பயிற்சி பெற்றவர்கள் பாம்பின் வால், நடுப்பகுதி, கழுத்துப் பகுதி என எந்தப் பகுதியைப் பிடித்தாலும் சரியாக அதை கையாள முடியும்.

விரியன் பாம்பு

அந்தப் பெண் பிடிக்கும் பாம்பு சாரை பாம்பு. இது விஷமில்லாத பாம்பு. அதனால்தான் அசால்ட்டாக பிடிக்கிறார். விஷமுள்ள பாம்பாக இருந்தாலும் இதே முறையில்தான் பிடிக்க வேண்டும். முறையான பயிற்சி இருந்தால் எந்தப் பாம்பையும் பிடிக்கலாம். இதற்கு ஆண், பெண் என்ற பேதமில்லை. குறிப்பாக கல்லூரிகளில் விலங்கியல் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி அளிக்க வேண்டும். இவர்களுக்கு விலங்குகளைப் பற்றி அடிப்படையான சில தகவல்கள் தெரியும் என்பதால் இது மிகவும் எளிதானது.

நம் நாட்டில் கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் போன்ற பாம்புகள்தான் கடின விஷமுள்ளவை. ராஜ நாகம் போன்ற பாம்புகள் விஷமுள்ளவை என்றாலும் பிடிப்பதற்கு மிகவும் எளிதானவை. அதன் தோற்றம்தான் அச்சுறுத்துமே ஒழிய இந்தப் பாம்புகளை எளிதாக பிடிக்கலாம்.

`வெள்ளம் வடிந்தும் நகராத பாம்புகள்!’ - கேரள மக்களுக்குத் துணையான வாவா சுரேஷ்

விரியன் பாம்புகளிடம் மட்டும் சற்று கவனமாக செயல்பட வேண்டும். சுருட்டை விரியன் பாம்புகள் பகலில் மிகவும் மென்மையானதாக இருக்கும். இரவில் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். அதனால், இரவில் பாம்பை பிடிக்கும்போது அதீத கவனம் தேவை. பாம்புகளை பற்றிய அறிவும், அதைப் பிடிப்பதற்கான பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் பிடிக்கலாம். அந்த வகையில் இந்தப் பெண்ணின் சாதுர்யத்தை நாம் பாராட்ட வேண்டும்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.