சென்னை மூதாட்டியைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தம்பதி - விருதுநகரில் கைது
சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டியை, 2 சவரன் நகை, பணம் ஆகியவற்றுக்காக உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலைசெய்து, அடையாறு ஆற்றில் வீசிய தம்பதியை விருதுநகரில் தனிப்படை போலீஸார் கைதுசெய்தனர். இந்தப் பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சென்னை எம்.ஜி.ஆர் நகர், மயிலை சிவமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் விஜயா (வயது 78). கட்டடத் தொழிலாளியான விஜயா, பகுதி நேரமாக ஹோட்டல்களிலும் வேலை செய்துவந்திருக்கிறார். விஜயாவுக்கு லோகநாயகி எனும் மகள் இருக்கிறார்.
லோகநாயகிக்குத் திருமணமாகி, தன் கணவர், குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 18-ம்தேதி லோகநாயகியின் பிள்ளைகள், பாட்டி விஜயாவைப் பார்ப்பதற்காக அவரின் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். ஆனால் வெகுநேரமாகியும் விஜயா வீட்டுக்கு வராததால், பேரப்பிள்ளைகள் இது குறித்துத் தங்கள் தாய் லோகநாயகிக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதன்பேரில் எம்.ஜி.ஆர் நகரிலுள்ள தன் தாய் வீட்டுக்கு வந்த லோகநாயகி, தன்னுடைய அம்மா வேலை செய்துவரும் ஹோட்டல்களுக்கு நேரில் சென்று விசாரித்திருக்கிறார். ஆனால், விஜயாவைப் பற்றி எந்த ஓர் உறுதியான தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து 19-ம் தேதி, தாய் மாயமானது குறித்து, எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் லோகநாயகி புகாரளித்தார்.
அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். போலீஸின் விசாரணையின்போது விஜயாவுக்குப் பக்கத்து வீட்டில் வசித்துவந்த பார்த்திபன் எனும் நபரும், தன்னார்வத்துடன் வந்து விசாரணைக்கு உதவியிருக்கிறார். இதனால் பார்த்திபன் மீதும் போலீஸாருக்கு லேசான சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மூதாட்டி மாயமானது தொடர்பாக சிசிடிவி கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வுசெய்து பார்த்தனர். அதில், இரவு நேரத்தில் பார்த்திபன் விஜயாவின் வீட்டுக்குள் புகுந்து மூட்டை ஒன்றைக் கட்டி எடுத்துக்கொண்டு, தனது டூ வீலரின் முன்பக்கத்தில் வைத்துக்கொண்டு புறப்பட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதைப் பார்த்த போலீஸாருக்குச் சந்தேகம் வலுத்தது. எனவே, பக்கத்து வீட்டுக்காரரான பார்த்திபனை விசாரணைக்கு அழைக்க அவரின் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தனர். அப்போது அவரின் வீடு பூட்டப்பட்டிருந்தது.
எனவே, மூதாட்டி விஜயாவை பார்த்திபன் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகக் கோணத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். தொடர்ந்து பார்த்திபனின் செல்போன் சிக்னல்களை போலீஸார் ஆய்வுசெய்து பார்த்ததில் அவர் விருதுநகரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனே, பார்த்திபன் தொடர்பான தகவல்களை விருதுநகர் மாவட்ட காவல்துறைக்குத் தெரிவித்த எம்.ஜி.ஆர் நகர் போலீஸார், அவரைக் கண்காணிப்பில் வைக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்பேரில், விருதுநகர் சவுண்டி தெருவில் தன் சகோதரியின் வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்த பார்த்திபனையும், அவரின் மனைவி சங்கீதாவையும் சுற்றிவளைத்த போலீஸார், அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து விருதுநகருக்கு வந்த சென்னை தனிப்படை போலீஸார் பாரத்திபனிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகின.
மூதாட்டி விஜயாவை நகை, பணத்துக்காக உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலைசெய்ததோடு, அவரின் உடலை அடையாறு ஆற்றில் வீசியதாக பார்த்திபன் கூறியது போலீஸை அதிர்ச்சியடையச் செய்தது. இது தொடர்பாக பார்த்திபனிடம், போலீஸார் தொடர் விசாரணை நடத்தியதில், கூலித் தொழிலாளியான மூதாட்டி விஜயாவிடம், பார்த்திபன் அடிக்கடி வீட்டுச் செலவுக்குப் பணம் கேட்டுப் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கழுத்திலும் காதுகளிலும் இரண்டு சவரனுக்கும் குறையாமல் தங்க நகை அணிந்திருக்கும் விஜயா, தனது சுருக்குப்பையில் 20 ஆயிரத்துக்கும் குறையாமல் பணம் வைத்திருப்பாராம். விடுமுறைக்காக வீட்டுக்கு வரும் அவரின் பேரக்குழந்தைகளுக்கு, விஜயா ஆயிரக்கணக்கில் செலவு செய்வதை பார்த்திபன் கவனித்திருக்கிறார். அதேசமயம் குடும்பம் நடத்தவே சிரமப்பட்டுவந்த பார்த்திபன், மிகுந்த பணக் கஷ்டத்தில் தவித்திருக்கிறார்.

எனவே, மூதாட்டி விஜயாவிடமிருந்து குடும்பச் செலவுக்குப் பெரிய அளவில் பணத்தை வாங்கிவிட வேண்டும் எனத் தீர்மானித்திருக்கிறார். இதற்காக, 18-ம் தேதி காலையில் விஜயா வேலைக்குச் செல்வதற்கு முன்பாக அவரின் வீட்டுக்குள் புகுந்த பார்த்திபனும் சங்கீதாவும் வீட்டுச் செலவுக்குப் பணம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், பணம் கொடுக்க விருப்பமில்லாத விஜயா, தற்போது தன்னிடம் பணம் எதுவும் இல்லை. ஆகவே, ஏற்கெனவே நான் கடனாகக் கொடுத்த பணத்தைத் திருப்பித் தந்துவிடுங்கள் எனக் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தம்பதி, விஜயாவின் சுருக்குப்பையில் இருக்கும் பணத்தைக் கேட்டு மிரட்டியிருக்கின்றனர். ஒருகட்டத்தில் விஜயாவுக்கும், பார்த்திபன்-சங்கீதா தம்பதிக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், விஜயாவின் சுருக்குப்பையைப் பிடுங்கி, அதிலிருந்து பணத்தை பார்த்திபன் பறித்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த விஜயா சத்தம் போடவும், சங்கீதா அவரின் வாயைப் பொத்தியிருக்கிறார். இதற்கிடையில் வீட்டுக்குள் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து விஜயாவின் தலையில் பார்த்திபன் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே விஜயா மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து விஜயாவின் காது, மூக்கில் கிடந்த 2 சவரன் தங்க நகைகளையும், சுருக்குப்பையில் இருந்த 30,000 ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்ட பார்த்திபன்-சங்கீதா தம்பதி, உயிரிழந்த விஜயாவின் உடலைச் சாக்குப்பையில் போட்டு மூட்டையாகக் கட்டி வீட்டின் ஒரு மூலையில் வைத்துவிட்டு எதுவும் நடக்காததுபோல வெளியே வந்திருக்கின்றனர்.

தொடர்ந்து விஜயாவைக் காணவில்லை என்ற தகவலை அறிந்து அவரின் உறவினர்களும் போலீஸாரும் தேட ஆரம்பித்த நிலையில், போலீஸ் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக மனைவி சங்கீதாவுடன் விருதுநகரிலுள்ள தன் உறவினர் வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்திருக்கிறார் பார்த்திபன். அந்தத் திட்டத்தின்படி, நள்ளிரவில் விஜயாவின் வீட்டுக்குள் புகுந்த பார்த்திபன், தான் மூட்டையில் கட்டிவைத்திருந்த விஜயாவின் பிணத்தை எடுத்து துண்டு துண்டாக வெட்டி, சாக்கில் போட்டு மூடி, டூ வீலரில் முன்பக்கம் வைத்து எடுத்துக்கொண்டு விருதுநகர் நோக்கி டூ வீலரில் புறப்பட்டிருக்கிறார். செல்லும் வழியில் அடையாறு ஆற்றில் விஜயாவின் உடலை வீசிவிட்டு, அவர்களின் திட்டப்படி விருதுநகருக்கு டூ வீலரிலேயே சென்றிருக்கின்றனர். இந்த நிலையில்தான், இருவரும் போலீஸிடம் சிக்கிக்கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைதுசெய்த தனிப்படையினர், பார்த்திபன் - சங்கீதாவை நேற்று காலை சென்னைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து அடையாறில் விஜயாவின் உடல் வீசப்பட்ட இடத்தை பார்த்திபன் அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து, தீயணைப்பு மீட்பு வீரர்கள் மூலம் விஜயாவின் உடலைத் தேடும் பணி நடைபெற்றது. மாயமாகி கிட்டத்தட்ட 9 நாள்கள் கழிந்த நிலையில் அடையாறு ஆற்றிலிருந்து அவரின் உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டது. தொடர்ந்து அவரின் உடல், அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்துக் கைதுசெய்யப்பட்ட பார்த்திபன்-சங்கீதா தம்பதியிடம் போலீஸார் தொடர் விசாரணை நடத்திவருகிறனர்" எனக் கூறினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


