Guggul tree: இந்த மரங்கள்தான் பாகிஸ்தான் மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன..!

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான மரங்கள் அடையாளமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் உள்ள குக்குல் (Guggul) என்ற மரத்திலிருந்து கிடைக்கும் ஒருவிதமான பிசினுக்காக இந்த மரம் பெரிய அளவில் அறியப்படுகிறது.

குக்குல் மரம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தார்பார்கர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் குக்குல் மரத்துக்கு ராக்கி கயிறு கட்டி பாதுகாக்கின்றனர். தங்களின் சகோதரனாக மரங்களைப் பார்க்கும் மக்கள், அந்த மரத்தை தங்களின் வருமானத்துக்கு ஒரு வாய்ப்பாகவும் பார்க்கின்றனர். அதனால்தான் தர்பார்கரில் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து குக்குல் மரத்தை தங்களில் ஒருவனாக கருதுகின்றனர்.

``அழியும் நிலையில் உள்ள இந்த மரத்தை பாதுகாக்க வேண்டும்" என்று உலக இயற்கை வள அமைப்பு (IUCN) வலியுறுத்தியுள்ளது.

எனவே, பாகிஸ்தான் நாட்டின் வனத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அரசாங்கத்தின் அமைப்புகள் இந்த மரத்தை பாதுகாக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

குறைந்த மழைப்பொழிவு, வறட்சியான பகுதியில் வளரக்கூடியது இந்த மரம். பாகிஸ்தானின் தார்பார்கர், கரூன்ஜார் மலைத் தொடர் பகுதிகளில் வளர்கிறது. வறண்ட பகுதியில் வளர்வதற்கு ஏற்ற தன்மையைக் கொண்டது இந்த மரம். இந்த குக்குல் மரத்திலிருந்து ஒரு வகை பசை எடுக்கப்படுகிறது. அதற்கு உலகளாவிய சந்தையில் அதிகமான தேவை இருந்து வருகிறது.

இதன் தேவை அதிகரித்து வருவதால் குக்குல் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்கிறது உலக இயற்கை வள அமைப்பு (ஐ.யூ.சி.என்). தர்பார்கரில் தாங்கள் வளர்க்கிற கால்நடைகளுக்கு குக்குல் மரங்கள் கிட்டத்தட்ட 80% தீவனத்தை அளிக்கிறது என்கின்றனர் மக்கள்.

குக்குல் மரம்

இந்த மரத்தில் இருந்து இயற்கையான முறையில் குறைந்த அளவு பசைதான் உருவாகும் என்பதால், அதிகமாக பசையை எடுக்க வேண்டும் என்று நினைக்கும் மக்கள் ஒருவித ரசாயனத்தை இந்த மரத்தில் பூசுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக இந்த ரசாயனத்தை பூசி, மரத்தில் இருந்து கூடுதலாக பசையை மக்கள் எடுக்கின்றனர்.

இந்தப் பசைக்காகவே ஆயிரக்கணக்கான மரங்களை அழித்து விட்டனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த மரத்திலிருந்து எடுக்கப்படும் பசை ஆயுர்வேத மருந்துகள், பெயின்ட், நறுமண தைலங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாதான் இதற்கான மிகப்பெரிய சந்தையாக உள்ளது.

இந்த மரத்தின் மருத்துவ பயன்களை பட்டியலிட்டுள்ள ஆராய்ச்சியாளர் சையத் குலாம் முஷரப், "உடலின் திசுக்களை புதுப்பிப்பதற்கு இந்த மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின் பயன்படுகிறது. ஆர்த்ரைட்டிஸ் உள்ளிட்ட உடல் சார்ந்த பல பிரச்னைகளை நிவர்த்தி செய்ய இது பயன்படுகிறது. இந்த மரத்திலிருந்து பிசின் எடுத்தால் அதிகம் வருமானம் பெற முடிகிறது. அதனால், இந்த மரங்களிலிருந்து பிசின் எடுக்க இதை கொடுமைப்படுத்துகிறார்கள். அதனால்தான் இந்த மரங்கள் அழிந்து வருகின்றன. இந்த மரத்தை பாதுகாக்க வேண்டும் என்று சிந்து மாகாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த மரத்தின் பிசின் 1 கிலோ 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு சீஸனில் 40 கிலோ சேமித்தால் 20,000-40,000 ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடிகிறது என்கிறார்கள். இதன் தேவை 300 டன் என்று மதிப்பிடப்படுகிறது. பாகிஸ்தானிலிருந்து ஏறத்தாழ 75 டன் உற்பத்தி செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

குக்குல்

இந்த மரங்களின் அழிவுக்கு மக்கள்தான் காரணம் என்று வனத்துறை உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், மக்களை இந்த மரங்கள்தான் வாழ வைத்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. அதனால்தான் மரங்களுக்கு அன்பினால் ராக்கி கட்டுகிறார்கள். இதை தனிப்பயிராக விவசாய நிலங்களில் சாகுபடி செய்ய முடியுமா என்பதையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.