ஆலங்குளம்: குடும்பத் தகராறு; காஸ் சிலிண்டரை தலையில் தூக்கிப்போட்டு மனைவி கொலை - கணவர் கைது!
தென்காசி மாவட்டத்தில், கணவன்-மனைவி குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த கணவர், காஸ் சிலிண்டரை மனைவியின் தலையில் தூக்கிப்போட்டு கொலைசெய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், ``ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவரின் மனைவி முத்துலட்சுமி (45). இந்த தம்பதியருக்கு எட்டு பிள்ளைகள் உள்ளனர். கணேசன் மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கணேசன், வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார். சம்பவத்தன்றும், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் சேர்ந்து தடுத்து நிறுத்தி இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். ஆனால், கணவன்-மனைவி இடையேயான சண்டை நள்ளிரவு 1 மணி அளவிலும் தொடர்ந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கணேசன், வீட்டிலிருந்த காஸ் சிலிண்டரை தூக்கி முத்துலட்சுமியின் தலையில் போட்டுள்ளார். இதில் முத்துலட்சுமி தலை சிதைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த ஆலங்குளம் போலீஸார், விரைந்து சென்று முத்துலட்சுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பான புகாரின்பேரில் கணேசனை கைதுசெய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


