Paris Olympics - Shooting: `இந்தியாவுக்கு முதல் பதக்கம்! - வரலாறு படைத்த மனு பாக்கர்!
ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை எதிர்நோக்கியே இந்தியர்கள் அனைவரின் கவனமும் இருக்கிறது. இப்படியொரு சூழலில் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைக்கப்பெற்றிருக்கிறது. துப்பாக்கிச் சுடுதலில் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்திருக்கிறார்.
ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா சார்பில் இதுவரை துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் நான்கு பேர் பதக்கம் வென்றிருக்கின்றனர். 2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக்ஸில் ராஜ்வர்தன் சிங் ரத்தோர் ஆண்களுக்கான டபுள் ட்ராப்பில் வெள்ளிப்பதக்கம் வெல்ல, 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில் அபினவ் பிந்த்ரா 10 மீ ஏர் ரைபிளில் தங்கம் வென்றிருந்தார். 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் ககன் நரங்கும் விஜய் குமாரும் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளியை வென்றனர்.
இப்போது இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வெல்லும் முதல் பெண்மணி எனும் பெருமையை 22 வயதே ஆன மனு பாக்கர் பெற்றிருக்கிறார். அவர் இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெற்றிருந்ததே பெருமையான விஷயம்தான். ஏனெனில், 2004 ஒலிம்பிக்ஸூக்குப் பிறகு துப்பாக்கிச் சுடுதலில் எந்த வீராங்கனையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில்லை. அந்த சாதனையை மனுதான் இந்த ஒலிம்பிக்ஸில் செய்திருந்தார்.

தகுதிச்சுற்றில் 30க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்துகொள்ள முதல் 8 இடங்களைப் பிடிப்பவர்கள்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள் எனும் நிலை. மனு மிகச்சிறப்பாக செயல்பட்டு 60 ஷாட்களில் 580 புள்ளிகளைப் பெற்று 3 ஆம் இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
8 வீராங்கனைகள் ஆடிய இறுதிப்போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி வெண்கலம் வென்றுவிட்டார் மனு பாக்கெர். வெறும் 0.1 புள்ளி வித்தியாசத்திலேயே வெள்ளிப்பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார். எப்படியிருந்தாலும் இது ஒரு வரலாற்றுத் தருணம். கொண்டாடுங்க மக்களே!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


