புதுச்சேரி: மர்ம கும்பலால் வெட்டிச் சாய்க்கப்பட்ட கடலூர் அதிமுக பிரமுகர் - போலீஸ் விசாரணை!

கடலூர் திருப்பாப்பலியூர் பகுதியைச் சேர்ந்தவர், அ.தி.மு.க பிரமுகர் பத்மநாபன். பெயின்ட்டர் தொழில் செய்து வரும் இவர், வேலை காரணமாக புதுச்சேரி பாகூர் பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்பொழுது அவரை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து, இருளர் சந்தை செல்லும் சாலையில் அவரை மடக்கி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பத்மநாபன் உயிரிழந்தார்.

கொலை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாகூர் போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட பத்மநாபன் மீது, கடந்த ஆண்டு பாஸ்கர் என்பவரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இவர் அ.தி.மு.க சார்பில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட சீட்டு கேட்டது குறிப்பிடத்தக்கது. பத்மநாபன் படுகொலை குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்தக் கொலைக்கு அரசியல் காரணமா... முன்விரோதமா... அல்லது பாஸ்கர் கொலை செய்த வழக்கில் தொடர்புடையதால் பழிக்குப் பழியாக வெட்டி கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கொலைசெய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக அ.தி.மு.க பிரமுகரை புதுச்சேரியில் மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காவல்துறை

அதே நேரம், கடந்த மாதம் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று பத்மநாபன் கொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இரு அ.தி.மு.க பிரமுகர்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவம், நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.