`ஆபீஸிலும் பெண்களை காபி தட்டை தூக்கச் சொல்லும் சார்களே - அவளின் சிறகு...

ஹாஸ்டலில் அவள் என்னுடைய ரூம் மேட். கிராமத்திலிருந்து பல போராட்டங்களைக் கடந்து சென்னை வந்தவள். தன்னுடைய சம்பாத்தியத்தில் சென்னையில் தனியாக வாழ்வதில் அவளுக்கு பெருமிதம். தனியா வீடு எடுத்து தங்கணும், சொந்த வீடு கட்டணும், வீட்டுக்கு அத இத வாங்கணும் என எதிர்காலம் குறித்து பேசிக்கொண்டே இருப்பாள். எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்ளும் அபிக்கு ஆங்கிலம் என்றால் பயம். அலுவலகத்தில் அடுத்தகட்ட வளர்ச்சி இல்லாமல் இருக்க ஆங்கிலம்தான் காரணம் என அடிக்கடி புலம்புவாள். ஒருநாள் அலுவலகம் முடித்து வந்தபோது ரூமில் இருந்த பெரிய கண்ணாடியை துடைத்துக் கொண்டிருந்தாள். யூடியூப் பார்த்து ஆங்கிலப் பயிற்சி எடுத்து அதை கண்ணாடி முன்னால் நின்று சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தாள். என்ன திடீர்னு இங்கிலீஷ் என்று கேட்டபோது, எங்க ஆபீஸ்ல ஒரு செமினார் இருக்கு. அதுல நான் பேசணும். இதைமட்டும் நான் சரியா பண்ணிட்டா கண்டிப்பா கிரேடு கூடிடும். என்னோட சம்பளம் ரெண்டாயிரம் ரூபா அதிகாமாச்சுனாகூட போதும். என் தம்பி ரொம்ப நாளா சைக்கிள் கேட்குறான். அவனுக்கு ஒரு சைக்கிள் வாங்கணும் என்றாள். அடுத்த ஒரு வாரத்திற்கு இந்தப் பயிற்சி தொடர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவெல்லாம் தூங்காமல் எதையோ பேசிக்கொண்டும், ஒப்புவித்துக் கொண்டும் இருந்தாள். திங்கள் கிழமை காலை சீக்கிரம் எழுந்து ஆடைகளை அயர்ன் செய்து, இன்டர்வியூ செல்வதுபோல் கிளம்பினாள். பாதி தூக்கத்தில் ஆல் தி பெஸ்ட் சொல்லி வழியனுப்பி வைத்தோம்.

பெண்

அன்று இரவு அவளின் வருகைக்காக நாங்கள் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தாம். முகம் வாடிய நிலையில் சோர்வாக வந்து சேர்ந்தாள். நாங்கள் எதுவும் கேட்டு விடுவோம் என்ற பயத்தில், எனக்கு பசிக்கல, நீங்க சாப்பிடுங்க என்று கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டாள். அடுத்த நாள் காலையிலும் அவள் எதுவும் பேசுவதாகத் தெரியவில்லை. நானே பேச்சைத் தொடங்கினேன். சரிவிடு இந்த செமினார் இல்லனா, அடுத்த செமினார். நாம வேணா இனி ரூம்ல இங்கிலீஷ்லேயே பேசுவோம் என்றேன். அவளின் கண்கள் கண்ணீரை வடிக்கத்தொடங்கின. நான் நேத்து செமினார்ல பேசவே இல்ல. சும்மாதான் நின்னேன். எனக்கு அந்த வாய்ப்பே கொடுக்கல. பத்தாததுக்கு, ஆர்டர் பண்ண டீயை எல்லாருக்கும் கப்ல ஊத்திக்கொடுங்கனு  எங்க டீம் லீடர் சொன்னாரு. செமினார்ல பேப்பர் பிரசன்டேஷன் செய்ய ஆசைப்பட்ட நான் அங்கேயும் போயி காபி பரிமாறிட்டு வந்தேன் என்றாள் முகவாட்டத்துடன். பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளையே அலுவலகத்திலும் செய்ய வைக்கும் பாலின சமத்துவம் இல்லாத ஆபீஸ் ஹவுஸ்வொர்க் வேலைகள் இன்னும் பல அலுவலகங்களில் தொடர்கதையாகத்தான் இருக்கின்றன.

அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, இன்னொரு ரூம் மேட் நீயாவது டீ தான் ஊத்திக்குடுத்த. எங்க ஆபீஸ்ல போன மாசம் ஒரு நிகழ்ச்சி நடந்துச்சு. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கு போட்ட துண்டை வாங்கி என் டீம் லீடர் என்னை மடிச்சுக் கொடுக்கச் சொன்னாரு. மடிச்சுக் கொடுத்து மட்டுமில்லாம, அவர் காரில் கொண்டு போய் துண்டை வெச்சுட்டு வந்துருங்கனு சொன்னாரு. நான் தயங்கினப்போ, அட, இது நம்ம ஆபீஸ்ம்மா... இங்க இருக்கவங்க நம்ம குடும்பம். இதுல என்ன தயக்கம்னு கேட்டாரு. நானும் வேற வழியில்லாம அந்தச் சிறப்பு விருந்தினர் கிளம்புற வரை துண்டை கையிலேயே வெச்சிருந்து கார்ல போய் கொடுத்துட்டு வந்தேன். கூட வேலை பார்க்கற பயன், என் பக்கத்துலதான் நின்னுட்டு இருந்தான். அவன்கிட்ட அந்த வேலையை அவரு சொல்லல. ஏன்னா இதெல்லாம் பொட்டப்புள்ளைகளுக்கு மட்டும்தான் தெரியும், இல்ல பொட்டப்புள்ளைகதான் இதைச் செய்யணும்னு அவங்களுக்கு நினைப்பு என அவளின் பங்குக்கு அபியை தேற்றினாள். இதையெல்லாம் மனதுக்குள் ஏற்றும்போது அதற்கு முந்தையநாள் நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது.

அவளின் சிறகு

நண்பர்களுடன் டீ குடிக்கச் சென்றிருந்த போது குடித்த காபி கப், சாப்பிட்ட ஸ்நாக்ஸ், தட்டு எல்லாவற்றையும் நான்தான் எடுத்துச் சென்று குப்பையில் போட்டுவிட்டு வந்தேன். இயல்பு,  நண்பர்களுக்காகச் செய்வது இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், அலுவலக மீட்டிங்கில் டீ ஊற்றுவது, வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் ஊற்றுவது, ஏசி ஸ்விட்ச்சை ஆன் செய்யச் சொல்லுவது, விசேஷ நாள்களில் கோலம் போடுவது, வாசலில் நின்று வணக்கம் வைப்பது இதெல்லாம் பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் பணிகளாக இருப்பது எதனால்..?

வீடு, பள்ளிக்கூடம் இங்கெல்லாம் விதைக்கப்படுவதன் விளைவு இது. பழகிய பழக்கம் அலுவலகத்திலும் தொடர்கிறது என்பதே உண்மை. பள்ளி ஆண்டுவிழா நாள்களில் அல்லது விசேஷ நாள்களில் பள்ளி வாசலில் பெண்களை பட்டுப்பாவாடை அல்லது சேலை அணியச் சொல்லி, ரிசப்ஷன் டீமில் நிற்க வைப்பார்கள். அப்படி நானும் பலமுறை நின்றதுண்டு. ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியில் ஆண்களை நிற்க வைப்பார்கள். ஆனால், இரு பாலினர் பள்ளி, கல்லூரிகளில் ரிசப்ஷன் வேலை எப்போதும் பெண்களுக்கு ஒதுக்கப்படும் ஒன்றாகவே இருக்கும். பெண்களுக்கு கோலம் போடும் வேலையை ஒதுக்கிவிட்டு, விருந்தினர் பட்டியலை தயார் செய்வது, விருந்தினர்களை அழைத்து வருவது, நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளை மாணவர்களிடம் கொடுப்பார்கள். இவையெல்லாம் பெண்களுக்கு இதுதான் வரும், இதைத்தான் அவர்கள் செய்யவேண்டும். இதைத்தானே இவ்வளவு காலம் செய்தார்கள் என்ற முன்முடிவுகளின் வெளிப்பாடுகள்.

அவளின் சிறகு

பள்ளியில் ஒரு முறை ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஸ்பீக்கர், பவர் பாயின்ட் பிரசன்ட்டேஷன் போர்டு என எதுவும் தயார் செய்யப்படாமல் இருந்தது. இதையெல்லாம் சரியாகச் செய்யும் கவின் அன்று வராததால் ஆசிரியர் பதற்றம் ஆனார். இத கனெக்ட் பண்ண யாருக்காவது தெரியுமா, இல்லனா பக்கத்து வகுப்புல கேளுங்க என மாணவர்களின் பக்கம் திரும்பி பேசினார். எல்லாரும் அமைதியாக இருக்க, அடுத்த வகுப்பில் ஆள் தேட ஓடினான் முரளி. அப்போது நான் எழுந்து சிஸ்டம் பக்கம் சென்ற போது, நீ வெச்சுரும்மா, எதாவது ஆயிடப்போகுது, பசங்க பாத்துப்பாங்க என்றார். காதில் வாங்காமல் அடுத்த சில நிமிடத்தில் நான் எல்லாவற்றையும் செட் செய்து முடிக்க, பாருங்கடா, ஒரு பொட்டப்புள்ள மாட்டிருச்சு. நீங்கெல்லாம் என்னத்துக்கு என கேட்டார். ஒரு பெண்ணிற்கு ஒரு விஷயம் தெரியும் என்பதைக்கூட ஆண்களால் அவமானமாக பார்க்கப்படும் ஒன்றாகவே இந்தச் சமூகம் நம்மை பழக்குகிறது. தெரியாது என்று ஒதுங்கி நின்ற பெண்களை ரசித்தவர்களால், தெரியும் என்று முன்வருபவர்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பாராட்டுகள் வேண்டாம். குறைந்தபட்சம் வழிவிட்டு நிற்கலாமே. பெண்களுக்கு கற்றுத்தரும் ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால், சொற்பமானவர்களே...

டீ ஊற்றுவதோ, கோலம் போடுவதோ, வரவேற்பில் நிற்பதோ அவமானம் கிடையாது. அதையெல்லாம் செய்ய பெண்கள் தயக்கம் காட்டுவதும் இல்லை. ஆனால், இதே வேலைகளை ஆண்களிடம் ஏன் கொடுப்பதில்லை. எத்தனை ஆண்கள் இதை அவமானமாக எண்ணாமல் முன்னால் வந்து செய்வார்கள்?முக்கிய பொறுப்புகளுக்கு ஆண்களுக்கு முக்கியத்துவம் தந்து பெண்களை ஓரங்கட்டுவதே இங்கிருக்கும் சிக்கல். படிப்பு , வேலை என எல்லா இடங்களிலும் ஆண்களோடு போட்டிப் போட்டு, சமமாக பயணித்து ஆண்களுக்கு இணையாக அலுவலகத்தில் ஓர் இடத்தை நிரப்ப வரும் பெண்களுக்கு அலுவலகத்திலும் ஆபீஸ் ஹவுஸ்வொர்க் வேலைகள் கொடுக்கப்படுவது எதனால்? சின்னச் சின்ன வாய்ப்புதானே ஊதியம் வரை எதிரொலிக்கிறது.

இங்கு சமூகம் போட்டியிடுவது பெண்களின் திறமையுடன் அல்ல... சமூகம் அவர்களுக்கு பழக்கிய வழக்கங்களுடன் என்பதுதானே உண்மை. எங்கள் அலுவலகத்தில் எனக்கு தலைமை அதிகாரி பெண், என் அலுவலகத்தில் இப்படியெல்லாம் இல்லை, எல்லா இடத்திலும் நாங்கள் சமநிலையில் இருக்கிறோம். என் பெண் அதிகாரி சொல்வதையே நான் கேட்கிறேன் என்று சொல்பவர்களிடம் கேட்க ஒரு கேள்விதான் இருக்கிறது. வெகு சிலர் செய்வது சமூக மாற்றம் ஆகுமா..?

பெண்களை பொறுப்பால், திறமையால் சமமாக நடத்தும் மாற்றம் சமூகத்தில் ஒரே நாளில் நிகழ்ந்துவிடாதுதான். ஆனால், அடுத்த தலைமுறை குழந்தைகளிடமிருந்தாவது பழக்குவோம். மனதால், உடலால், திறமையால் வீ ஆர் நாட் வீக்கர் செக்ஸ்... காபி தட்டை தூக்கியவர்கள் மெள்ள உயர்ந்து கம்ப்யூட்டரிடம் வந்திருக்கிறோம். காபி தட்டு ஒரு கையிலும் கம்ப்யூட்டர் ஒரு கையிலும் இருப்பதில் சிக்கல் இல்லை. காபி தட்டை மட்டும் கையில் கொடுக்காதீர்கள். துணையாக நின்றதெல்லாம் போதும் வழிவிட்டு நில்லுங்கள்...மனதில் திரை விரிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாடுகளை உடையுங்கள்...

சிறகுகள் விரியட்டும்...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.