சென்னை: `சிறைக்குச் செல்ல ஆசைப்பட்டு இப்படிச் செய்தேன்! - பெட்ரோல் குண்டுகளை வீசிய ரௌடி `பகீர்
சென்னை அண்ணாநகர் மேற்கு அன்னை சத்யா நகரில் பெட்ரோல் குண்டுகள் அடுத்தடுத்து வீசப்பட்டதாக, அண்ணாநகர் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது போலீஸ் பூத் அருகே ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது. இன்னொரு குண்டு அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு வீசப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் பெட்ரோல் குண்டு வீசியது அண்ணாநகர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ரௌடி பாலமுரளி என்றும், இவர்மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பாலமுரளியை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து அண்ணாநகர் போலீஸார் கூறுகையில், ``அண்ணாநகர் காவல் நிலைய ரௌடிகள் பட்டியலில் பாலமுரளியின் பெயர் உள்ளது. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து திருச்சிக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்புதான் அவர் திருச்சியிலிருந்து சென்னை வந்திருக்கிறார். அன்னை சத்யா நகருக்கு வந்த பாலமுரளி, பாட்டிலில் பெட்ரோலை நிரப்பியிருக்கிறார். பின்னர் அவர், அதை போலீஸ் பூத், டாஸ்மார்க் கடை முன்பு வீசியிருக்கிறார். இந்தச் சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த வழக்கில் பாலமுரளியைப் பிடித்து விசாரித்தபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல சிறைக்குச் செல்ல ஆசைப்பட்டுத்தான் இப்படி செய்தேன் என கூறினார். அதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மற்றும் கவுன்சலிங் அளித்திருக்கிறோம். அதன் பிறகுதான் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


