SL vs IND: இந்திய அணி ஒரு ரயில்; நான் அதன் என்ஜின் - கேப்டன்ஸி விவகாரத்தில் சூர்யகுமார் விளக்கம்!

டி20 மற்றும் ஒருநாள் தொடருக்காக இலங்கை சென்றிருக்கிறது இந்திய அணி.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் இன்று (ஜூலை 27) தொடங்குகிறது. இதையடுத்து ஆகஸ்ட் 2, 4, 7-ம் தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் செயல்படவுள்ளனர். டி20 தொடரின் கேப்டன் பொறுப்பிற்கு முதலில் ஹர்திக் பாண்டியா பெயர் அடிபட்டது. ஆனால், புதிய தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீரும், பி.சி.சி.ஐ குழுவும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு சூர்யகுமாரைத் தேர்வு செய்தனர்.

சூர்யகுமார்

இந்த அறிவிப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் இது குறித்து சமூகவலைத்தளங்களில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது குறித்துப் பேசியிருக்கும் சூர்யகுமார் யாதவ், "இந்திய கிரிக்கெட் அணி ஒரு இரயில் போல ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது அதன் என்ஜின் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. மற்றபடி அதில் எந்த மாற்றமுமில்லை. கேப்டானாக பொறுப்பேற்கும் நான் அதை வழிநடத்திச் செல்கிறேன் அவ்வளவுதான். முன்பைவிட இப்போது எனக்குப் பொறுப்புகள் கூடியிருக்கின்றன. அதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதுதான் என் மனதில் இருக்கிறது. ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். இத்தொடரில் அவர் தனது ஆட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து முழு கவனத்துடன் விளையாடுவார். உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடியது போலவே இதிலும் விளையாடுவார். மற்றபடி கேப்டன்ஸி விஷயத்தில் இருவருக்கும் நல்ல புரிதலிருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

சூர்யகுமார் , ரோஹித்

ரோஹித் ஷர்மா குறித்துப் பேசியவர், "ரோஹித் ஷர்மா சிறந்த கேப்டன் மட்டுமில்லை. அவர் ஒரு நல்ல ஆளுமை கொண்ட தலைவர் என்றுதான் சொல்ல வேண்டும். தலைமைப் பண்புகள் அவரிடத்தில் அதிகமிருக்கிறது. மைதானத்தில் மையத்தில் நின்று அனைவரையும் அவ்வளவு அற்புதமாக வழிநடத்துபவர் அவர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" என்று பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.