SL vs IND: இந்திய அணியின் பயிற்சியாளராக முதல் போட்டி - டிராவிட்டின் வாழ்த்தால் நெகிழ்ந்த கம்பீர்!
இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று முதல் போட்டியில் களமிறங்கும் கவுதம் கம்பீருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்.
கடந்த ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராகச் சிறப்பாகச் செயல்பட்டு 2024 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கோப்பையை வென்று காட்டினார் கவுதம் கம்பீர். இதையடுத்து ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு கவுதம் கவுதம் கம்பீர்தான் இந்திய அணியை வழிநடத்துவதற்குச் சரியான பயிற்சியாளர் எனப் பேச்சுகள் அடிபட்டன. உலகக் கோப்பை பெற்று தந்த கையோடு, தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார் ராகுல் டிராவிட். அதைத்தொடர்ந்து, எதிர்பார்த்தபடியே கவுதம் கம்பீரை இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பி.சி.சி.ஐ.
இந்நிலையில் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடருக்காக இலங்கை சென்றிருக்கிறது. இன்று (ஜூலை 27-ம்) டி20 தொடரின் முதல் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் ராகுல் டிராவிட், புதிய தலைமைப் பயிற்சியாளராக முதல் தொடரை எதிர்கொள்ளும் கவுதம் கம்பீருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். அதில், "உலகின் மிகவும் சுவாரஸ்யமான, சவால்கள் நிறைந்த பொறுப்பு இந்த பயிற்சியாளர் பொறுப்பு. அதற்கு உங்களை வரவேற்கிறேன். நான் இந்திய அணியில் பணியாற்றிய காலங்களை என்றென்றும் பொக்கிஷமாக மனதில் வைத்திருப்பேன். அதை அனுபவியுங்கள். அதோடு அந்த நினைவுகளை நிறையச் சேகரித்துக் கொள்ளுங்கள். எனக்குக் கிடைத்த அதே அதிர்ஷ்டம் உங்களுக்கும் கிடைத்திருக்கிறது.
& !
— BCCI (@BCCI) July 27, 2024
To,
Gautam Gambhir ✉
From,
Rahul Dravid #TeamIndia | #SLvIND | @GautamGambhir pic.twitter.com/k33X5GKHm0
இந்திய கிரிக்கெட்டின் மீது நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நம் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் முழு தகுதியுடையவர்கள். பயிற்சியாளர்களாகிய நாம் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் பேட்டிங் பார்ட்னராகவும், சக ஃபீல்டராகவும் உங்களுடன் விளையாடியிருக்கிறேன். நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புக் கொண்டவர் என்று எனக்கு நன்றாகவே தெரியும். பல ஐ.பி.எல் சீசன்களில், வெற்றிக்காக விடாமுயற்சியுடன் செயல்படுவதையும், இளைய வீரர்களுடன் பணியாற்றும்போது உங்கள் புத்திசாலித்தனத்தையும் நான் பார்த்திருக்கிறேன்.
அதே அர்ப்பணிப்பை, கடும் உழைப்பை, புத்திசாலித்தனத்தை இந்த புதிய பொறுப்பிலும் பல மடங்கு காட்டுவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். எவ்வளவு அழுத்தமான நேரங்களிலும் உங்களின் புன்னகையான முகத்தை மாற்றாதீர்கள். இந்திய அணியை இன்னும் பெரிய உயரத்திற்குக் கொண்டு செல்வீர்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். வாழ்த்துகள்!" என்று கூறியுள்ளார்.

அதற்கு மகிழ்ச்சி பொங்கப் பதிலளித்திருக்கும் கவுதம் கம்பீர், "இதற்கு எப்படிப் பதிலளிக்க வேண்டும் என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. அவ்வளவு எமோஷனலாக இருக்கிறேன் நான். நீங்கள் தன்னலமற்ற ஒரு உண்மையாக கிரிக்கெட் வீரர். இதை நான் பல நேர்காணல்களில் சொல்லியிருக்கிறேன். நான் அளவற்ற மதிப்பு வைத்திருக்கும் உங்களிடமிருந்து இப்படியோரு வாழ்த்து கிடைத்ததில் மகிழ்ச்சி. நிச்சயம் இந்திய அணிக்குப் பெருமை சேர்ப்பேன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


