Bumrah: அது அவருக்குக் கடினமான சூழல் - ஹர்திக் பாண்டியா சந்தித்த விமர்சனங்கள் குறித்து பும்ரா!
இந்திய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான பும்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹர்திக் பாண்டியா மீது எழுந்த விமர்சனங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.
அப்பேட்டியில், “ரசிகர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த புரிதல் எங்களுக்கு இருக்கிறது. அதேபோல வீரர்களும் உணர்ச்சி வசப்படுவார்கள். ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும்போது நிச்சயம் அது வீரர்களைப் பாதிக்கும். அந்த மாதிரியான நேரங்களில் உங்கள்மீது நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.
இதைச் சொல்வது எளிது. செய்வது கடினம். ஏனெனில், களத்தில் ரசிகர்கள் எழுப்பும் விமர்சனங்கள் உங்களுக்குக் கேட்கும். அந்த மாதிரியான நேரத்தில் நாங்கள் ஒரு அணியாக ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக நின்றோம். அவருடன் பேசினோம். அது கடினமான சூழல். ஆனால், டி20 உலகக் கோப்பை வென்றதும் அது அனைத்தும் மாறியது. அதனால் விமர்சனங்களை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இப்போது அனைவரும் புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால், இதன் மூலம் இவை அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டது என நாம் எண்ண முடியாது.
நாளை நாங்கள் தோல்வியைத் தழுவும் போது இந்த நிலை மீண்டும் மாறும். இது விளையாட்டு வீரரின் வாழ்க்கை பயணத்தில் ஒரு பகுதி. அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்” என பும்ரா கூறியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து அந்த பேட்டியில் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா 3 பேரில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு, "மூன்று கேப்டன்களும் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்கள். அதனால் 3 பேரும் சிறந்த கேப்டன்கள்தான்" என்று பதிலளித்திருக்கிறார்.

மேலும் இந்திய அணிக்கு கேப்டனாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "அணி நிர்வாகத்திடம் சென்று என்னை கேப்டன் ஆக்குங்கள் என்று என்னால் சொல்ல முடியாது. அது நான் இருக்கும் நிலைக்கு அப்பாற்பட்டது" என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


