Paris Olympics 2024: தொடக்க விழாவில் தேசியக்கொடி ஏந்தும் தமிழ் நாட்டு வீரர்! - யார் இந்த சரத் கமல்?

பாரிஸின் செயின் நதிக்கரையில் பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்ஸின் தொடக்கவிழாவில் இந்தியா முகாமின் அணிவகுப்பைத் தேசியக்கொடியை ஏந்தி பி.வி.சிந்துவுடன் வழிநடத்திச் செல்லவிருக்கிறார் தமிழ் நாட்டைச் சேர்ந்த சரத் கமல்.

சரத் கமல்
இது ஒரு மாபெரும் பெருமை. 117 வீரர்களை அழைத்துச் சென்றிருக்கும் இந்திய முகாமிற்குத் தலைமகனாக நிற்கப்போகிறார். இந்த கௌரவத்தைச் சரத் கமல் அத்தனை எளிதில் அடைந்துவிடவில்லை. இதற்குப் பின்னால் ஒரு வலிமிக்க பயணம் ஒளிந்திருக்கிறது.

நடப்பு ஒலிம்பிக்ஸ் 33வது கோடை ஒலிம்பிக்ஸ். இந்த ஒலிம்பிக்ஸில் மொத்தமாக 10,500 வீரர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். இதுவரைக்கும் நடந்த அத்தனை ஒலிம்பிக்ஸிலும் சேர்த்து எத்தனை பேர் ஆடியிருப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். இந்த லட்சக்கணக்கான எண்ணிக்கையில் ஒரு தனித்துவத்தைப் பெறுவது ரொம்பவே கடினம். ஆனால், சரத் கமலுக்கென இங்கே ஒரு தனித்துவமான பெருமை இருக்கிறது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் அவர் பங்குபெறும் 5வது ஒலிம்பிக்ஸ் தொடர். ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே இதுவரைக்கும் உலகளவில் சில நூறு வீரர்கள் மட்டுமே 5 முறை ஒலிம்பிக்ஸில் பங்கேற்றிருக்கின்றனர். இந்திய அளவில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஒலிம்பிக்ஸ் தொடர்களில் இதற்கு முன் இரண்டே இரண்டு பேர் மட்டும்தான் பங்கேற்றிருக்கின்றனர். சரத் கமல் மூன்றாவது வீரர். இப்போது அவருக்கு 42 வயது.

22 வயதில் இளம் டேபிள் டென்னிஸ் வீரராக 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில் முதல் முறையாகப் பங்கேற்றார். அந்த சமயத்தில் டேபிள் டென்னிஸின் மீது பெரியளவில் கவனமே இருந்திருக்கவில்லை. இதுவரைக்கும் அவர் ஒலிம்பிக்ஸில் ஒரு பதக்கம் கூட வென்றதில்லை. ஆனாலும், ஒவ்வொரு முறையும் கடுமையாகப் போராடிக் கொண்டே இருப்பார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆடியபோது அவருக்கு 39 வயது. அந்த ஒலிம்பிக்ஸ்தான் அவரின் கடைசி ஒலிம்பிக்ஸாக இருக்கும் எனப் பேசப்பட்டது. சரத் கமலே கூட அப்படி ஒரு முடிவில்தான் இருந்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் அவரின் போராட்டம்தான் அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றிருக்கிறது.

சரத் கமல்

டோக்கியோவிலும் அதேதான் நடந்திருந்தது. டேபிள் டென்னிஸில் சீனாதான் தலையாய நாடு. அதிலும் சமகாலத்தில் இப்போது சீனாவின் டிராகன் என வர்ணிக்கப்படும் மலாங் அவர்களின் ஆகச்சிறந்த வீரர். மின்னல் வேகத்தில் லாவகமாக ஆடக்கூடியவர். அவரை வீழ்த்துவது கிட்டத்தட்ட இயலாத காரியம். டோக்கியோவில் சரத் கமலுக்கும் மலாங்குக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. அதற்கு சரத் கமல் மலாங்கை சில முறை எதிர்கொண்டிருக்கிறார். ஆனால், ஒரு கேமை கூட சரத் வென்றதில்லை. இந்த முறையும் அப்படியேதான் நடக்கும் எனப் பலரும் கணித்தனர். ஆனால், சரத் கமல் ட்விஸ்ட் கொடுத்தார். மலாங்குக்கு எதிராகக் கடுமையாகப் போராடி ஒரு கேமை வென்றார். மலாங் அதிர்ந்தார். இன்னொரு கேமை ரொம்பவே நெருக்கமாகக் கொண்டு சென்றார். இருவரும் சம புள்ளியிலிருந்தனர். மலாங் பதற்றமானார். டைம் அவுட் எடுத்தார். சரத்தின் மொமண்டமை கொஞ்சம் குலைத்தே ஆட்டத்தை வென்றார். இந்தப் போட்டியிலும் சரத் தோற்கத்தான் செய்தார். ஆனால், இந்தப் போட்டியைப் பார்த்தால் அத்தனை ஊக்கமாக இருக்கும்.

வெல்லவே முடியாத ஒரு ராட்சசனை வெற்றிக்காகத் தடுமாற வைத்துவிட்டார் சரத். கடும் உழைப்பின் மீதும் போராட்டத்தின் மீதும் நம்பிக்கையைக் கொடுக்கும் ஆட்டம் அது.
சரத் கமல்

அந்தப் போட்டியை முடித்துவிட்டு இரவு சமூகவலைத்தளங்களில் ஒரு லைவ்வில் சரத் கமல் பேசியிருப்பார். "இந்த முறை என்னால் முடிந்தளவுக்குப் போராடினேன். பாரிஸ் ஒலிம்பிக்ஸிலும் வந்து போராட முயற்சிப்பேன்." என்றார். சொன்னதைப் போலவே கடந்த 3 ஆண்டுகளாகக் கடினமாக உழைத்து 42 வயதில் பாரிஸ் ஒலிம்பிக்ஸிலும் அடியெடுத்து வைத்துவிட்டார்.

காமென்வெல்த் போட்டிகளில் மட்டும் இதுவரை 13 பதக்கங்களை வென்றிருக்கிறார். இதில் 7 தங்கப்பதக்கங்களும் அடக்கம். டோக்கியோ ஒலிம்பிக்ஸிற்குப் பிறகு பிர்மிங்காமில் நடந்த காமென்வெல்த் போட்டியில் மட்டும் 3 தங்கம், 1 வெள்ளி உட்பட 4 பதக்கங்களை வென்றிருந்தார். கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றிருக்கிறார். 13 முறை தேசியளவில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். வேறெந்த விளையாட்டைச் சேர்ந்த எந்த ஒரு வீரரும் இத்தனை முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதே இல்லை.

சரத் கமல்

இத்தனை வருட ஓட்டத்திற்கும் போராட்டத்திற்கும் கிடைத்ததுதான் தேசியக்கொடியை ஏந்தி அணிவகுப்பை வழிநடத்திச் செல்லும் கௌரவம். சரத் கமலின் கரியரில் அவரின் கையில் சிக்காமல் இருக்கும் ஒரே பதக்கம் ஒலிம்பிக்ஸ் பதக்கம் மட்டும்தான். இந்த முறை டேபிள் டென்னிஸில் அணிகள் பிரிவில் இந்தியா முதன்முறையாகத் தேர்வாகியிருக்கிறது. இதில் கட்டாயம் பதக்கம் வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 5 முறை உலகக்கோப்பையில் ஆடி 6வது முறையில்தான் சச்சினால் உலகக்கோப்பையை வெல்ல முடிந்தது. டேபிள் டென்னிஸின் சச்சின்தான் சரத் கமல். இத்தனை வருட உழைப்பின் பலனை அவர் இந்த முறை அறுவடை செய்வார் எனும் நம்பிக்கை இருக்கிறது.

வாழ்த்துகள் சரத் கமல்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.