8 வயது சிறுமி சிறார்வதை; 62 வயது முதியவரை கட்டிவைத்து பஞ்சாயத்து செய்தார்களா ஜமாஅத் நிர்வாகிகள்?
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு பகுதியில் வசித்து வந்தவர் பீர் முகம்மது(62). இவர் அந்த பகுதியில் மீன் வியாபாரம் செய்துவந்தார். இவரின் வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது குழந்தையிடம் பேச்சுக்கொடுத்த பீர் முகம்மது, தனது வீட்டில் கருவேப்பிலை உள்ளதாகவும், அதை எடுத்துதருகிறேன் என வீட்டுக்குள் அழைத்துள்ளார். வீட்டுக்குள் சென்ற சிறுமியை பீர் முகம்மது சிறார்வதை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளனர்.
இந்த தகவல் அப்பகுதி இஸ்லாமிய ஜமாஅத்துக்கு சென்றுள்ளதாகவும், இஸ்லாமிய ஜமாஅத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சிறார்வதை செய்த முதியவரை தூணில் கட்டி வைத்து நள்ளிரவு நேரத்தில் பஞ்சாயத்து செய்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சிறுமியின் உறவினர்களையும் அழைத்து போலீஸில் புகார் அளிக்க வேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும், சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஈடாக பீர் முகம்மது வசிக்கும் காலனி வீட்டை 6 லட்சம் ரூபாய்க்கு விற்று அதில் மூன்று லட்சம் ரூபாயை வழங்கலாம் எனவும் அந்த பஞ்சாயத்தில் முடிவு செய்து கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியானதுடன், இந்த பஞ்சாயத்து குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பீர் முகம்மது மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், தலைமறைவாக இருந்த பீர் முஹம்மது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் மேலும் சிலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜமாஅத் நிர்வாகிகள் பஞ்சாயத்து செய்ததாக வெளியான தகவல் குறித்து கன்னியாகுமரி எஸ்.பி சுந்தரவதனத்திடம் பேசினோம், "அது சம்பந்தமாக விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம். அந்த முதியவர் தன்னைத்தானே கழுத்தை நெரிக்க முயன்றதாகவும், அதனால்தான் கட்டிவைத்ததாக சாட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது. அது, என்ன மாதிரியான விசாரணை நடந்தது என்பது பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு 6 லட்சம் ரூபாய் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் வேண்டாம் என சொல்லியிருக்கிறார்கள். இது குழந்தை விவகாரம் என்பதால் சென்சிபில்லாக போகிறது. அலுவலகதில் விசாரிக்கப்பட்டதா என்பது பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


