கும்பகோணம்: புர்கா அணிந்து பெண் வேடமிட்டு தப்பிச் சென்ற பிரபல ரெளடி; சினிமா பாணியில் மடக்கிய போலீஸ்!

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கன்னித்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல ரெளடி குருமூர்த்தி. இவர்மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்தாண்டு நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பின்னர் தனது கூட்டாளிகளுடன் மணல் கொள்ளை, கஞ்சா மற்றும் கட்டப்பஞ்சாயத்து என அடவாடி செயலில் ஈடுபட்டு வந்தார். இதையறிந்த திருவிடைமருதூர் டி.எஸ்.பி ஜாபர் சித்திக் தலைமையிலான போலீஸார், குருமூர்த்தியை தேடி வந்தனர்.

போலீஸார் கைது செய்த ரெளடி

இதைத் தொடர்ந்து குருமூர்த்தி, `என்னை பற்றி போலீஸாருக்கு தகவல் கொடுப்பவர்களை கொலை செய்துவிடுவேன் என வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி, பலரையும் அலறவிட்டார். அவரது வாய்ஸ் மெசேஜும் போலீஸார் கவனத்திற்கு சென்றது. அதையடுத்து குருமூர்த்தியைப் பிடிப்பதில் தீவிரம் காட்டினர். இந்த நிலையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் வாரன்ட் ரீ கால் செய்வதற்காக கடந்த 23-ம் தேதி கும்பகோணம் நீதிமன்றத்தில் குருமூர்த்தி ஆஜராகச் சென்றார். திருபுவனத்திலிருந்து காரில் தனது கூட்டாளிகளுடன் குருமூர்த்தி கிளம்பிய நிலையில் பெரிய கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை சுழற்றியபடியே சென்றுள்ளனர். அப்போது இரவு கொடூரமான கொலை ஒன்று நடக்கப்போவதாக சத்தமிட்டுள்ளனர்.

இதையறிந்த போலீஸார் குருமூர்த்தி சென்ற காரை விரட்டிச் சென்றனர். போலீஸ் கையில் சிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்த அவர், வேகமாகச் சென்று நீதிமன்றத்திற்குள் புகுந்து விட்டார். அவரது கூட்டாளிகள் காருடன் தப்பித்து விட்டனர். குருமூர்த்தி வெளியே வரும்போது கோழி அமுக்குவதுபோல் அமுக்குவதற்காக போலீஸார் காத்திருந்தனர். இதையடுத்து போலீஸ் தன்னை கைதுசெய்வதற்கு காத்திருப்பதாகவும், அதை தடுக்க வேண்டும் எனவும் தன் குடும்பத்திடம் சொல்லியுள்ளார். உடனே மண்ணெண்ணெய் கேனுடன் அங்கு வந்த அவரது குடும்பத்தினர், நீதிமன்றம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டனர்.

குருமூர்த்தி அணிந்திருந்த புர்கா

இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குருமூர்த்தியை தப்பிக்க விடக் கூடாது என்பதற்காக மஃப்டி உடையிலும் போலீஸ் காத்திருந்தனர். ஒரு பக்கம் குருமூர்த்தி குடும்பத்தினர் போராட்டம் நடத்த போலீஸாரின் கவனம் முழுவதும் அதில் இருந்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி தப்பிக்க நினைத்த குருமூர்த்தி, புர்கா அணிந்து முகத்தை மூடிக்கொண்டதுடன் காலில் பெண்கள் அணியக்கூடிய செருப்பையும் அணிந்து, இஸ்லாமியப் பெண்போல் வேடமிட்டு போலீஸார் கண்ணில் மண்ணை தூவி விட்டு நீதிமன்றத்திலிருந்து தப்பித்துச் சென்று விட்டார்.

குருமூர்த்தி எப்படி தப்பித்தார் என்பது புரியாமல் அவரை பிடிக்க முடியாமல், போலீஸார் புலம்பியுள்ளனர். இதற்கிடையே ஏற்கெனவே குருமூர்த்தி நீதிமன்றத்திற்கு சென்ற காரை ரயில் நிலையத்தில் போலீஸ் டீம் பிடித்தனர். அத்துடன் காரை ஓட்டிய ரெளடி காட்டேரி ராமுவை கைதுசெய்தனர். தங்களை பற்றி போலீஸுக்கு போட்டு கொடுக்கும் ஒருவரை கொலைசெய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் அவர் கூறியுள்ளார்.

செருப்பு

காட்டேரி ராமு மூலம் குருமூர்த்தி இருக்கும் இடத்தை போலீஸார் தெரிந்துகொண்டனர். ரயில் நிலையம் பின் பகுதியில் புர்கா அணிந்தபடி மகளிர் போலீஸை வைத்து கைதுசெய்தனர். மேலும், குருமூர்த்தியின் மற்றொரு கூட்டாளியான சத்திய பிரகாஷ் என்பவரையும் கைதுசெய்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர், மூன்று ரெளடிகளையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் கும்பகோணம் பகுதியில் பேசு பொருளாக இருந்து வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.