இறக்கும் தறுவாயிலும் 20 பிஞ்சுகளின் உயிரைக் காப்பாற்றிய வேன் ஓட்டுநர்; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த மலையப்பன் (49), தனியார் பள்ளி வேன் டிரைவராகவும், அவரின் மனைவி லலிதா அதே வேனில் உதவியாளராகவும் வேலை செய்து வந்தனர். நேற்று வழக்கம்போல பள்ளி முடிந்து 20 மாணவர்களை பள்ளியிலிருந்து ஏற்றிக்கொண்டு வந்தனர். இந்த நிலையில் வேன் வெள்ளக்கோயில் காவல் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிரைவர் மலையப்பனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. உடனே அவர் பள்ளி வேனை சாலை ஓரமாக பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, அப்படியே மயங்கியிருக்கிறார்.

மலையப்பன்

இதைப் பார்த்து அதிர்ந்த லலிதா உடனடியாக மலையப்பனை காங்கேயம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அங்கு மலையப்பனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நெஞ்சு வலியால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். உயிர் பிரியும் அந்த வேளையிலும், மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற உறுதியாக செயல்பட்ட மலையப்பனின் செயல் பலராலும் பெரிதும் பாராட்டப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து, குழந்தைகள் உயிரை பாதுகாத்துவிட்டு மறைந்த மலையப்பனுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் தன் ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ``இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த திரு.மலையப்பன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்!" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.