Diamond Jackpot: ரூ.80 லட்சம் மதிப்பிலான வைரம்; சுரங்கத் தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட்!
மத்தியப் பிரதேசத்தில், என்றாவது ஒரு நாள் அதிர்ஷ்டமடிக்கும் என்று கடந்த 10 வருடங்களாக மழைக்காலத்தின்போது சின்ன சின்ன சுரங்கங்களைக் குத்தகைக்கு எடுத்துவரும் தொழிலாளி ஒருவருக்கு தற்போது வைர ஜாக்பாட் அடித்திருக்கிறது. ராஜு கவுட் என்றறியப்படும் இந்த நபர், கடந்த காலங்களில் ட்ராக்டர் வைத்து பிழைப்பு நடத்திவந்திருக்கிறார். இவரின் குடும்பமும் கூலி வேலை செய்தே வாழ்வை நகர்த்திவருகின்றனர்.
இவர், கடந்த 10 ஆண்டுகளாக அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மழைக்காலத்தின்போது சிறிய அளவிலான சுரங்கங்களைக் குத்தகைக்கு எடுத்து சேற்றை சல்லடை போட்டு வருகிறார். அந்த வரிசையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணா கல்யாண்பூரில் சிறிய சுரங்கத்தை ராஜு குத்தகைக்கு எடுத்தார். அவரின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நேற்றைய பொழுது அதிர்ஷ்ட நாளாகவே அவருக்கு விடிந்திருந்தது.
எப்போதும் போல நேற்று காலை சுரங்கப் பணிக்கு கிளம்பிய ராஜுவுக்கு ஒரு வைரக்கல் கிடைத்திருக்கிறது. கிடைத்த வைரத்தை உடனடியாக அரசாங்க அதிகாரிகளிடம் சமர்பித்த ராஜு, ``காலையில் சுரங்கத்துச் சென்றபோது எனக்கு அதிர்ஷ்டமடிக்கும் என நினைத்துப் பார்க்கவில்லை. இது என்னுடைய நிதிச் சுமைகளைக் குறைத்து, என்னுடைய குழந்தைகளின் கல்வியைப் பார்த்துக்கொள்ளும் என்று நம்புகிறேன். தற்போது இதை அரசு வைர அலுவலகத்தில் கொடுத்திருக்கிறேன். இதில் கிடைக்கும் பணத்தை என் குழந்தைகளின் படிப்புக்கு செலவுசெய்வேன். அதோடு, விவசாய நிலமும் வாங்குவேன்" என்றார்.
இதுகுறித்து பன்னா மாவட்ட வைர அலுவலக அதிகாரி அனுபம் சிங், அடுத்த ஏலத்தில் இந்த வைரம் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார், ஆழம் குறைந்த சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 19.22 காரட் வைரம் ரூ. 80 லட்சம் அல்லது அதற்கு மேல் ஏலம் போகும் என்று கூறியிருக்கிறார். ஏலத்தில் வரும் பணத்தில் அரசாங்கத்தின் ராயல்டி மற்றும் வரிகள் போக மீதம் ராஜுவுக்கு தரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


