Agniveer `டு நெடுஞ்சாலைக் கொள்ளையன்... பஞ்சாப்பில் கைதான இளைஞர்! - பின்னணி என்ன?
அக்னிபத் திட்டம் 2022-ம் ஆண்டு ஜூன் 14 அன்று அறிவிக்கப்பட்டது. அதன் மூலம், 17.5 முதல் 23 வயதுடைய இளைஞர்களுக்கு ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், அவர்களில் 25% பேர் அடுத்த 15 ஆண்டுகளுக்கு மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், நவம்பர் 2022-ல் பஞ்சாப் மாநிலத்தில் இஷ்மீத் சிங் இணைந்தார். ஆனால் முழுமையாக அந்த திட்டத்தில் பணியாற்றாமல், பாதியிலேயே விலகியிருக்கிறார்.
இதற்கிடையில், சட்டவிரோதமாக ஆயுதங்களை வாங்கியிருக்கிறார். மேலும் அவரது சகோதரர் உட்பட இருவரை இணைத்து தனக்கான ஒரு குழுவையும் உருவாக்கியிருக்கிறார். இந்த கும்பல் நெடுஞ்சாலை கொள்ளை, வாகன திருட்டுகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்த கும்பலைக் கைது செய்திருக்கும் மொஹாலியின் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) சந்தீப் கார்க், மூவரிடமிருந்தும் திருடப்பட்ட டாக்ஸி, புல்லட் பைக், ஸ்கூட்டர், தோட்டாக்களுடன் நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய அவர்,``இஷ்மீத் என்கிற ஈஷு 2022 நவம்பரில் அக்னி வீரராகச் சேர்க்கப்பட்டார். அவர் மேற்கு வங்கத்தில் பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் விடுமுறையில் வீட்டுக்குத் திரும்பியவர், மீண்டும் அக்னிவீர் பணிக்குச் செல்லவில்லை. அதற்குப் பதிலாக, பலோங்கியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, தனது சகோதரர் பிரப்பிரீத் சிங், நண்பர் பால்கரன் சிங் ஆகியோருடன் சேர்ந்து திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபடத் தொடங்கினார். துப்பாக்கி முனையில் வாகனத் திருட்டில் ஈடுபட்ட கும்பலைப் பற்றி காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில், மொஹாலி காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சந்தேக நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் 3 பேரும் கடந்த இரண்டு மாதங்களாக பலோங்கியில் வாடகை அறையில் தங்கி இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொண்டோம். இஷ்மீத் கான்பூரிலிருந்து சட்டவிரோத ஆயுதங்களைக் கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டார். மேலதிக விசாரணை நடந்து வருகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


