CA Topper Review: பெண்களின் பாலியல் தேவைகளை நியாயப்படுத்துகிறதா? நிராகரிக்கிறதா?

அரசுப்பணியில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக வாழ்ந்துவரும் சராசரி குடும்பஸ்தரான திரிபுவன் மிஸ்ரா (மானவ் கவுல்), தனது குடும்பத்தில் திடீரென ஏற்பட்ட பண நெருக்கடியால் ‘ஆண் பாலியல் தொழிலாளி’ ஆகிறார்.

பணம் இருந்தாலும் கணவனின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் ஏற்படும் மனநெருக்கடிக்கு நடுத்தர வயது குடும்பப் பெண்மணி பிந்தி ஜெயின் (திலோத்தம்மா ஷோம்), ஆண் பாலியல் தொழிலாளியை நாடிச் செல்கிறார். மிஸ்ராவும் பிந்தியும் ஹோட்டல் அறையில் அந்தரங்கமாக இருக்கும்போது, கூலிப்படைத் தலைவனான பிந்தியின் கணவர் டீக்கா ராமுக்கு (சுப்ரஜோதி பாரத்) தெரிந்துவிடுகிறது. தனது மனைவியிடமே ஒருவன் தொடர்பில் இருக்கிறான் என்பது தெரிந்ததும் எடுக்கும் ஆக்ரோஷ முடிவு என்ன? திரிபுவன் அவரிடம் சிக்காமல் தப்பித்தாரா? என்பதுதான் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள நிறைய சிரிப்பும் கொஞ்சம் பெண்ணிய சிந்தனையும் தாங்கிய ’Tribhuvan Mishra CA Topper’ சீரிஸின் கதை.

தியேட்டரில் பாப்கார்னில் நடக்கும் கோல்மால்களை கேள்வி கேட்பதில் ஆரம்பித்து ஸ்கூட்டரில் பயணிக்கும்போது மனைவி, குழந்தைகள் என அனைவருக்கும் ஹெல்மெட் அணிந்து அரசு விதிகளை பின்பற்றுவது, பண நெருக்கடி சூழலிலும் முறைகேடான கட்டிடம் கட்ட அப்ரூவல் கையெழுத்து போடாமல் மனசாட்சியோடு மறுப்பது, பெற்றோர் மீது அளவற்ற அன்பு காட்டுவது என ஒரு அன்பான, நேர்மையான மிடில் க்ளாஸ் நபரை தன் சின்னச் சின்ன உடல்மொழிகள் மூலம் வெளிப்படுத்தி நடிப்பிலும் டாப்பர்தான் என சொல்ல வைத்துவிடுகிறார் ஹீரோ மானவ் கவுல்.

ca topper review

அதுவும் தனது குடும்பத்தினரைக் காப்பாற்ற பாலியல் தொழிலைத் தேர்ந்தெடுக்கும் நிமிடங்கள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட மற்றொரு ஆண் பாலியல் தொழிலாளியிடம் பாடம் கற்றுக்கொள்ளும் யுக்தி என மிகச்சரியான நடிப்பை சீரிஸ் முழுக்க அனாயசமாக வெளிப்படுத்தியிருக்கிறார் மானவ்.

தியேட்டரில் கணவரின் கையை ஆசையாய் பற்றிக்கொள்ள முயற்சிக்கும்போது கிடைக்கும் நிராகரிப்பு, கணவன் தனக்காக நேரம் ஒதுக்காமல் புறக்கணிக்கும்போது வெளிப்படும் ஏக்கம், கணவனுக்காக விதவிதமான ஸ்டைல்களில் அலங்கரித்துக்கொண்டு வந்தாலும் கணவனால் அவமானப்படுத்தப்படும்போது ஏற்படும் மனவருத்தம் என தனது சோகங்களைக் கண்களால் வெளிப்படுத்தி நடிப்பில் கலங்க வைக்கிறார் திலோத்தமா ஷோம்.

ஹீரோ மானவ் கவுலுக்கு நேரெதிரான முகம்தான் வில்லன் சுப்ரஜோதி பாரத். ஆனால், எவ்வளவுக்கு எவ்வளவு முகத்தை சீரியஸாக வைத்திருக்கிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு சிரிப்பையும் உண்டாக்கி விடுகிறார். அடிப்பொடிகளோடு இவர் உரையாடும் காட்சிகளில் காமெடி தெறிக்கிறது என்றால் `டக்கென ஆக்ரோஷமான எக்ஸ்பிரஷன்களை இவர் கொடுக்கும் வில்லத்தனமான காட்சிகளிலும் கூடுதலாக சிரிக்க வைப்பது ப்ளாக் ஹியூமர் எழுத்துக்கு உதாரணம்.

இவரையும் ஓவர்டேக் செய்து, சீரியஸாக செல்லும் சீரிஸினை சிரிப்பாக மாற்றுகிறார் துப்பறியும் மாமியார் கதாப்பாத்திரத்தில் நடித்த யாமினி தாஸ்.

ca topper

ஒரு கண் ஆபரேஷன் செய்யப்பட்டு மூடியிருக்கும் சூழலிலேயே இப்படி கண்டுபிடிக்கிறார் என்றால் இரண்டு கண்களும் திறந்திருந்தால் அவ்வளவுதான் என்று ஆச்சர்யப்படும் வைக்கும் அளவுக்கு, மருமகனின் சீக்ரெட்களை இன்ச்-பை-இன்ச்சாக கண்டுபிடித்து தனது மகளுக்கு எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே ரசிக்கவைக்கிறார். திரைக்கதையில் முக்கிய கதாப்பாத்திரமாக இல்லை என்றாலும் சாதுவான பெண்கள் எப்போதுமே சாதுவாக இருக்கமாட்டார்கள் என திடீர் மாற்றங்களாலும் க்யூட்டான எக்ஸ்பிரஷன்களாலும் சில பல காட்சிகளில் ஸ்கோர் செய்து கவனிக்க வைத்துவிடுகிறார் ஸ்வேதா பாசு.

மானவ் கவுலின் மனைவியாக நடித்திருக்கும் நய்னா ஷரீன் அத்தனை கச்சிதமாக அந்த பாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார். இவர்களைத் தவிர சீரிஸில் வரும் அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு.

நொய்டா சிட்டியை அழகாக கண் முன் நிறுத்தி, எந்தக் காட்சியையும் போர் அடிக்கவிடாமல் செய்துவிடுகிறது அமித் சம்தானியின் ஒளிப்பதிவு. எது சீரியஸ் காட்சி, எது சிரிப்புக் காட்சி என பார்வையாளர்களுக்கு குழப்பமில்லை என்றாலும் சட்டென்று காட்சியின் தன்மையை புரிய வைத்துவிடுவது ராம் சம்பத்தின் இசைதான்.

பாலியல் தொழிலாளியை மையப்படுத்திய கதையாக இருந்தாலும் பாலியலை மட்டுமே மையப்படுத்திய கதை அல்ல. ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒருவித தேடல், ஒருவித பாலியல் விருப்பம், இருக்கிறது. அந்தத் தேடலை புரிந்துகொண்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் கூடிவிடும் என்பதை சொல்லியிருப்பதோடு பெண்களின் இயல்பான மென் உணர்வுகளையும் சுவாரயஸ்யமான கதையினூடாக சொல்லியிருக்கிறார்கள்.

ஒருவருக்கு பாலியல் தேவையாக இருக்கிறது, மற்றொருவருக்கு அதை கொடுப்பதன் மூலம் வரும் பணம் தேவையாக இருக்கிறது. பாலியல் தொழிலாளியைத் தேடி வருகிறவர்கள் அனைவருமே பாலியல் தேவைக்காக மட்டுமே வரவில்லை. மாறாக, அன்பையும் ஆறுதலையும் அரவணைப்பையும் தேடி வருகிறார்கள் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது திரைக்கதை. மார்பகப் புற்றுநோயால் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆண் பாலியல் தொழிலாளியை தேடிவரும் பெண்ணின் அந்த அதிவேக காட்சி சமூகத்தை சிந்திக்க வைக்கும் உணர்வுப்பூர்வமான காட்சி. மாட்டிக்கொள்ளும்போது ஆணை விட்டுவிட்டு பெண்ணுக்கு ஒழுக்க விழுமியப் பாடம் எடுக்கும் மனிதர்களைக் கேள்வி கேட்பது என போகிற போக்கில் பல போக்ரான் அணுகுண்டுகளை சில கேரக்டர்கள் மூலம் அள்ளி வீசியிருக்கிறது திரைக்கதை.

ca topper review

அத்தனை வயதிலும் கணவனை இழந்த ஹீரோவின் மாமியாருக்கு ஒரு நட்பு ஏற்படுகிறது. அதில், துளியும் ஆபாசமோ அத்துமீறலோ காண்பிக்கப்படவில்லை. குறிப்பா, ‘எங்கக் காலத்துலல்லாம் ஆண் பாலியல் தொழிலாளிங்க மாதிரி சர்வீஸ் இல்லாம போச்சே?’ என்று மாமியார் யாமினி தாஸின் கேள்வி கணவனை இழந்த பெண்களுக்கு இருக்கும் பாலியல் தேவைகளையும் மறுமணம் குறித்த சிந்தனையையும் சமூகத்திற்கு எழுப்புகிறது. லஞ்சம் வாங்கிக்கொண்டு பல உயிர்களைக் காவு வாங்குவதற்கு பதில் பாலியல் தொழில் செய்வதே மேல் என லஞ்ச அரசு அதிகாரிகளையும் குத்திக்காட்டியிருக்கிறது திரைக்கதை.

இப்படியொரு சர்ச்சைக்குரிய மையக் கருவைக்கொண்டு தைரியமாக திரைக்கதை அமைத்ததற்காக இயக்குநர்கள் அம்ரித் ராஜ் குப்தா, புனித் கிருஷ்ணாவிற்கு பாராட்டுகள். குற்றங்களை நியாயப்படுத்தவில்லை. ஒவ்வொரு வினைக்கும் சமமான ஓர் எதிர்வினை உண்டு என்பதை கனக்கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, அந்த க்ளைமாக்ஸ் காட்சி எதிர்பாராதது.

அதேநேரத்தில், மைனஸ்கள் இல்லாமல் இல்லை. சி.ஏ படித்தவர், வங்கி தொடர்பான விவரங்கள் அறிந்தவர். அரசுப்பணியில் இருப்பவர். ஆனால், ஒரு சாதாரண சாமானியனைப்போல வங்கியின் வாசலில் கூட்டத்தோடு கூட்டமாக அடிவாங்கிக்கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

திரிபுவன் மிஸ்ரா சிஏ டாப்பர் விமர்சனம்

லஞ்சம் வாங்குவதற்கே அச்சப்படும் மானவ் கவுல் வெளியில் தெரிந்தால் என்ன ஆகும் என்கிற விளைவை அறியாமல் ஆண் பாலியல் தொழிலாளியாக மாறுவது கொஞ்சம் முரணாக உள்ளது.

பாலியல் தொழிலை நியாயப்படுத்தும் சில வசனங்கள், சீரிஸ் முழுக்க அப்பட்டமான ஆபாச வார்த்தைகள் மற்றும் பாலியல் காட்சிகள் உள்ளதால் கண்டிப்பாக குடும்பத்தினரோடு பார்க்க முடியாது. நிச்சயம் வயது வந்தோருக்கான சீரிஸ் தான் இது! இப்படி குறைகள் இருந்தாலும் வாழ்வியலுக்குத் தேவையான சில விஷயங்களை ஓப்பனாகப் பேசி நம் மனதில் டாப்பராக உட்கார்ந்து விடுகிறார் இந்த சி.ஏ டாப்பர்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.