கும்பகோணம்: லாட்ஜ் ரூமில் கல்லூரி மாணவருடன் தங்கிய மாணவி உயிரிழப்பு - போலீஸ் விசாரணை!
பூம்புகாரைச் சேர்ந்த மாணவர், மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பகுதியைச் சேர்ந்த மாணவி, மன்னார்குடி கல்லூரி ஒன்றில் படித்துள்ளார். உறவினர்களான இவர்கள் இருவரும் காதலித்ததாகச் சொல்லப்படுகிறது. நேற்றைய முன்தினம் கல்லூரிக்குச் செல்வதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு வந்த இருவரும், கல்லூரிக்குச் செல்லாமல் கும்பகோணம் சென்றுள்ளனர். அங்கு சந்தித்துக் கொண்டவர்கள், கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இதையடுத்து அறையில் இருந்த மாணவிக்கு திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டு, உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவி மயக்க நிலையில் இருந்திருக்கிறார். இதையடுத்து அந்த மாணவன் பதறியடித்துக் கொண்டு மாணவியை தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்ற நிலையில், அதன் நிர்வாகம் அரசு மருத்துவமனைக்குப் போக சொல்லிவிட்டது. அங்கிருந்து அரசு மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் மாணவியைப் பரிசோதித்த டாக்டர், மாணவி ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், எஸ்.பி., ஆஷிஷ் ராவத், தலைமையில் போலீஸார் லாட்ஜில் விசாரணை செய்தனர். இதையடுத்து கும்பகோணம் வந்த மாணவியின் பெற்றோர் மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீஸில் புகார் அளித்தனர். மாணவியின் உடல் உடற்கூறாய்வு செய்யபட்டு அதன் ரிப்போர்ட் கிடைவில்லை என தெரிகிறது. இதனால் மாணவியின் சாவுக்கு காரணம் என்ன என்பதை அறிய தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``கும்பகோணம் வந்த இருவரும் அறை எடுத்து தங்க முடிவு செய்தனர். அதன்படி ஒரு லாட்ஜ்க்கு சென்றவர்கள் வெளியில் நின்றபடியே லாட்ஜின் செல்நம்பருக்கு போன் செய்துள்ளனர். போனை எடுத்ததும் நான் லாட்ஜ்க்கு வெளியில் இருக்கிறேன், எனக்கு அறை வேண்டும் என லாட்ஜ் மேனேஜரிடம் கூறியுள்ளார் மாணவன். மேலும், நாங்கள் உள்ளே வரும் போது லாட்ஜில் உள்ள சிசிடிவி கேமராவை ஆஃப் செய்து விட வேண்டும், அதே போல் வெளியே செல்லும் போதும் ஆஃப் செய்து விட வேண்டும், எங்கள் முகவரி உள்ளிட்ட எந்த விவரத்தையும் தர மாட்டோம். அதற்கு, நீங்கள் கேட்கும் பணத்தை விட கூடுதலாக தருகிறேன் என்றுள்ளார்.
பணத்துக்கு ஆசைப்பட்ட லாட்ஜ் மேனேஜர் மாணவர் சொன்ன கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டு ஒத்துழைக்க, இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். ஒரு இரவு முழுக்க இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். இதையடுத்து நேற்று மாணவி உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இது குறித்து மாணவனிடம் கேட்டதற்கு, அறையில் சுவிட்ச் போடும் போது கரன்ட் ஷாக் அடித்து விட்டது என முன்னுக்குப் பின் முரணாகச் சொன்னதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை செய்தனர்.
மாணவி மாதவிலக்கில் இருந்துள்ளார். ஆனாலும் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். அறைக்குள் மாணவன், மாணவிக்கு பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்திருக்கலாம் அதனால் ஏற்பட்ட ரத்தப்போக்கில் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்யபட்டு வருகிறது. உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே மாணவியின் சாவுக்கான காரணம் என்ன என்கிற விவரம் தெரியவரும்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


