Digital Arrest: 48 மணி நேர டிஜிட்டல் கைது; பெண் டாக்டரை மிரட்டி ரூ.59 லட்சம் அபகரித்த மோசடி கும்பல்!

இணையதள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஐ.ஏ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சமீபகாலமாக மோசடிப் பேர்வழிகள் பொதுமக்களிடமிருந்து பணத்தை அபகரித்து வருகின்றனர். அதோடு டிஜிட்டல் முறையில் கைதுசெய்து, பணத்தை பறிக்கும் செயல்களும் நடந்து வருகிறது. நொய்டாவைச் சேர்ந்த ஒரு பெண் டாக்டர் இது போன்ற மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளார். நொய்டாவில் உள்ள செக்டர் 77-ல் வசிக்கும் டாக்டர் பூஜா கோயலுக்கு கடந்த 13-ம் தேதி ஒருவர் போன் செய்து, தான் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரி என்றும், `உங்களது போன் ஆபாச படங்கள் பகிர பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார். ஆனால் பூஜா அக்குற்றச்சாட்டை அடியோடு மறுத்தார். ஆனாலும் பூஜாவை சமாதானப்படுத்தி பேசி, வீடியோ காலில் மர்ம நபர் வரவைத்தார். பூஜாவும் வீடியோ கால் செய்தார். அவரிடம் உங்களது போன் ஆபாச வீடியோவிற்காக பயன்படுத்தப்பட்டு இருப்பதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டினார்.

அதோடு உங்களை டிஜிட்டல் கைதுசெய்து இருக்கிறோம் என்றும் அந்த நபர் தெரிவித்தார். இதனால் போனில் பேசிய நபர் சொன்ன வங்கிக் கணக்குகளுக்கு பூஜா 59.54 லட்சத்தை அனுப்பி வைத்தார். ஆனால் அதன் பிறகு இது மோசடி என்று தெரிந்த பிறகு, இது குறித்து பூஜா போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக உதவி போலீஸ் கமிஷனர் விவேக் ரஞ்சன் தெரிவித்தார். பூஜா பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். இணைய தள மோசடிப் பேர்வழிகள் இப்போது டிஜிட்டல் கைது என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். இதன் மூலம் மக்களை பயமுறுத்தி பணம் பறிக்கின்றனர்.

டிஜிட்டல் கைது என்பது சம்பந்தப்பட்ட நபரை வீடியோ கால் செய்ய வைத்து அவரை வேறு யாரிடமும் பேசவிடாமல் பார்த்துகொள்வர். 24 மணி நேரமும் வீடியோ கால் ஆன் செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்றும், அப்படி ஆஃப் செய்துவிட்டால் கடும் விளைவு ஏற்படும் என்றும் கூறி மிரட்டி வைக்கின்றனர். டெல்லியைச் சேர்ந்த 72 வயது முதியவரிடம் அவரது போன் கிரிமினல் காரியங்களுக்கு பயன்படுத்துவதாக கூறி அவரை 12 மணி நேரம் டிஜிட்டல் முறையில் கைதுசெய்து, ரூ.83 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர். இது போன்ற மோசடி போன் அழைப்புகள் வந்தால் தவறு செய்யாத பட்சத்தில் பயப்படாமல் துணிந்து பேசவேண்டும் என்றும், மோசடிப் பேர்வழிகளின் மிரட்டல்களுக்கு பணியக் கூடாது என்றும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.